(Reading time: 10 - 19 minutes)

மருத்துவமனையில் "டாக்டர் நார்மல் டெலிவரி  பாசிபிள் தான?"  என்று கேட்ட பிரியாவிடம் வானதி நன்முறையில் ஒத்துழைப்பு கொடுப்பதால் எல்லாம் நலமே என்ற கூறியவர், தான் எடுத்த முடிவு இப்பொழுது தவறாகிவிடுமோ என்று முதல்முறையாக பயந்து போனார் சங்கரி. 

 

ஆரம்பக் கட்டத்தில் நன்றாக ஒத்துழைத்த வானதி இனி வாழ்ந்து தான் எந்த நிலையை பெற போகிறோம் என்று நினைத்தாலோ… அவளது உடல் ஒத்துழைக்க மறுத்தது. குழந்தையின் தலை மட்டும் வெளிவந்த நிலையில் அவளே செயலற்று கிடக்க அனைத்தையும் கண்களில் மிகுந்த வலியோடு பார்த்துக்கொண்டிருந்த பிரியா வானதியின் கன்னத்தில் தட்டி தட்டி அவளை உயிர்ப்புடன் பார்த்துக்கொண்டாள். 

 

"என்ன பாரு வானு.... எனக்குனு சொந்தமா நீ மட்டும் தான் இருக்க... நீயும் என்னை தனியா விட்டுட்டு போயிடாத பிளீஸ் வானு என்கூடவே இரு.... நாம ரெண்டு பேரும் சேர்ந்து சுத்தனும்னு நீ பிளான் பண்ண எல்லா இடத்துக்கும் நான் வரேன் வானு.... நீ என்கிட்டே வந்துடு மா... உன்னை இந்த நிலைல என்னால பார்க்கமுடியல டா... நான் உன்னை எதுக்கும் திட்ட மாட்டேன்... நான் இதுவரைக்கும் உன்னை திட்டுனதுக்கு என்ன தண்டனை வேணும்னாலும் கொடு... பிளீஸ் டா மறுபடியும் வந்து என் கிட்ட பேசு... என்று தன் போக்கில் கண்களில் கண்ணீர் ஊற்றெடுக்க பேசிக்கொண்டிருந்த பிரியாவை நோக்கி வானதி முயன்று “அக்கா.... நீ இவ்வளவு பேசுவியா?” என்று திக்கி திணற அந்த சாதகமான சூழ்நிலையில் குழந்தையை மிகவும் முயன்று வெளி உலகை காண செய்தனர். 

 

ஆனால் அதன்பிறகு அவளிடம் தான் எந்த மாற்றமும் இல்லை. சுவாசம் மட்டும் அவள் உயிருடன் தான் இருக்கிறாள் என்பதை உறுதியாக்கியது. இரத்தம் நிற்காமல் வழிந்துக்கொண்டே இருந்தது. மருந்துகளை ஊசி மூலம் செலுத்தியும் எந்த பலனும் இல்லாமல் போயிற்று.  அரைமணி நேரம் கழிந்தும் நஞ்சு வெளிவராமல் இருக்க அதற்கென மருத்துவத்தில் சங்கரி ஈடுபட அனைத்தையும் பொய்த்துபோக செய்தவள் இவ்வுலகில் இல்லாமலே சென்றுவிட்டாள். ஆம் வானதி இறந்துவிட்டாள். அவள் ஈன்ற ஆண் மகவை கூட காணாமலே சென்றுவிட்டாள். 

 

அவளுக்கு நேர்ந்த அந்த வன்கொடுமையில் இருந்து மீளவே வானதிக்கு ஆறு மாதங்கள் ஆனது. அதற்குள் அந்த கயவர்களில் எவனோ ஒருவனின் விதை அவளுள் புதைந்து துளிர் விட்டிருந்தது. அவளை மட்டுமே கவனித்த பிரியாவின் கண்களில் அவளுள் வளர்ந்த கரு படாமல் இருந்ததில் யாரை குற்றம் சுமத்துவது. ஒரு உயிரை கொல்வது பாவமல்லவா... அதுவும் உயிரை காக்கும் தொழிலுக்கு படித்தவள் அதை எங்ஙனம் செய்வாள். இதோ இன்று அந்த கரு அவள் முன் ஆண் சிசுவாய் உருவெடுத்து நிற்கிறதே. ஒரு உயிரை காப்பாற்றிய பெருமை கொள்வாளா?? இல்லை தனக்கு உயிருக்கு உயிராய், தங்கையாய், தனக்கு ஒன்றென்றால் முதலில் ஓடிவரும் தாயாய், தோழியாய், எல்லாமுமாய் இருந்தவளை இழந்துவிட்டு நிற்கிறாளே அதற்கென அழுதே கரைவாளா???

 

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.