(Reading time: 8 - 16 minutes)

கம்பெனி போனால் வீட்டிற்கு வருவதற்கே யோசிக்கும் மகன் இன்று போனவுடன் வந்ததைப் பார்த்து ஆச்சரியமடைந்தார் மரகதம்..

சீக்கிரமாக திரும்பி வந்த மகனைப் பார்த்து என்னப்பா அதிசயம் உனக்கு வீடு இருப்பதே அடிக்கடி மறந்து விடும் இன்றானால் இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாய்..

ஒன்னும் இல்லைம்மா சும்மாதான் வந்தேன் இன்னைக்கு வேலை சீக்கிரம் முடிந்து விட்டது அதனால் தான்..

நீ சீக்கிரம் வந்ததே அதிசயம் இதில் உன் வாயிலிருந்து வேலை முடிஞ்சுடுச்சினு ஒரு வார்த்தை வேற வருது கண்டிப்பா மழைதான் வரப்போகிறது..

அடியே சொர்ணம் காயப்போட்டிருந்த துணியை எடுத்து விடடி மழை வரும் போல இருக்கிறது எனக்கூறிய அவரின் பாவனையில் சிரித்தான் மிதுர்வன்..

அங்கே வந்த சொர்ணம்  என்னம்மா வெயில் மண்டையைப் பிளக்கிறது மழை வரும் என்கிறீர்கள் இப்போது துணி எடுக்க வேண்டாமா என கேட்க அவளின் கேள்வியில் தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சிரித்தனர்..

அப்போதுதான் மிதுர்வனை பார்த்த சொர்ணம் ஐயா என்ன அதற்குள் வந்து விட்டீர்கள் என ஆச்சர்யப்பட்டவள் மரகதத்திடம் திரும்பி அம்மா நீங்கள் சொன்ன மழைக்கான காரணம் இப்போது புரிந்து விட்டது என சிரித்தாள்..

சொர்ணம் அவர்கள் வீட்டில் ரொம்ப நாட்களாக வேலை பார்க்கிறாள் அதனால் வேலைக்காரியை போல இல்லாமல் வீட்டில் ஒருத்தியை போலவே நடத்துவார்கள்..

சொர்ணாம்மா நீங்களுமா என அவன் சிரிக்க அவனோடு சேர்ந்து மற்றவர்களும் சிரித்தனர்..

அவன் மனது சரியில்லை என்றால் வீட்டிற்கு வருவதற்கான காரணம் இதுதான் எப்படிப்பட்ட மனநிலையில் இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் அவன் மனநிலையே மாறிவிடும்..

மிதுர்வனுக்கு டீ கொண்டு வருமாறு சொர்ணத்தை அனுப்பிவிட்டு என்னப்பா சோர்வாக தெரிகிறாய் கம்பெனியில் எதுவும் பிராப்ளமா என கேட்க இல்லை அம்மா கொஞ்சம் வேலை அதிகம் அதுதான்..

அப்பா பார்க்கின்ற பிஸ்னஸைப் பார்க்கவே ஆள் இல்லாமல் இருக்க நீ வேறு புது பிஸ்னஸ் ஆரம்பித்து வேலையை இழுத்துக் கொள்கிறாய் சொன்னாலும் கேட்காமல் பிடிவாதம் பிடிக்கிறாய் உனக்கு சீக்கிரம் ஒரு கால்கட்டு போட்டால் தான் சரியாக இருக்கும்..

எதற்கு என் பையன் காலை கட்ட வேண்டும் என்றவாறு ஆஜரானார் சக்கரவர்த்தி..

மதியம் சாப்பிட்டு ஓய்வெடுத்துவிட்டு தான் அவர் ஆபீஸ் செல்வார் இன்றும் அதுபோல கொஞ்சம் நேரத்தோடு வந்திருந்தார்..

அவர் கேட்ட தினுசில் கடுப்பாகி ஆமாம் காலை கட்டுகிறார்கள் சீக்கிரம் ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்கலாம் என பார்த்தால் இப்படி ஏதாவது பேசிக் கிண்டல் செய்துகொண்டிருங்கள்..

கல்யாணமா யாருக்கு என சக்கரவர்த்தி மீண்டும் தொடங்க அதில் இன்னும் கடுப்பானவர் "ம்" உங்களுக்குத்தான் என்றார் மரகதம்..

அடியே கள்ளி என்மேல் உனக்கு இவ்ளோ ஆசையா நீயே சொன்ன பிறகு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ஆனால் கல்யாண வயதில் பிள்ளையை வைத்துக் கொண்டு இப்போது எனக்கு என்ன அவசரம் என்ற அவரின் பதிலில் கோபமானார்.. 

ஆஹா, "காடு வா வாங்குது வீடு போ போங்குது காலம் போன கடைசியில் உங்களுக்கு கல்யாணம் கேக்குதா"..

காலம் போன கடைசியா அப்படின்னா என்னை கிழவன்னு சொல்றியா யாரைப் பார்த்து கிழவன்னு சொல்கிறாய்..

ஏன் உங்களைத்தான் நீங்கள் என்ன இன்னும் குமரனா மனசுக்குள் இன்னும் என்றும் பதினாறு என நினைப்பா..

ஆமாண்டி நீ  சொன்னாலும் சொல்லலைன்னாலும் நான் என்றும் குமரன் தான் வேண்டுமானால் உனக்கு நிரூபித்துக்காட்டவா  இப்பொழுது பார் என அவரின் கையைப் பிடித்து இழுத்து சுற்றி ஆடினார்..

" ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்" பாடலை பாடிக்கொண்டே ஆட அவர் கையை விட்டு விட்டு எல்லோரும் பார்க்கிறார்கள் விடுங்கள் என வெட்கப்பட்டுக் கொண்டே உள்ளே ஓட பின்னாடியே அவரைத் துரத்திக்கொண்டு ஆடியபடியே ஓடினார் சக்கரவர்த்தி..

புன்னகையோடு எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்த மிதுர்வனுக்கு மனது லேசானது போல் இருந்தது..

வெளியிலிருந்து அப்பா செய்த சேட்டைகளை பார்த்து கொண்டே வந்த நிரஞ்சனா என்ன அண்ணா அப்பா மறுபடியும் அவர் சேட்டையை ஆரம்பித்து விட்டாரா என புன்னகையுடன் கேட்க ஆமென தலையசைத்தான்..

அண்ணன் நன்றாக இருந்தால் ஒன்று அவர்களோடு சேர்ந்து ஏதாவது கலாட்டா செய்து கொண்டிருந்திருப்பான் அப்படி இல்லை ஏதாவது பேசி கிண்டல் செய்திருப்பான் அவன் அமைதியாக புன்னகைக்கவும் ஏதோ பிரச்சினை என புரிந்தது..

அவனின் முகத்தை ஒரு முறை பார்த்துவிட்டு ஏன் அண்ணா டல்லாக இருக்கிறாய் ஏதாவது ஊடலா என கேட்க ஆச்சரியமாக அவளை பார்த்தான்..


என்ன பார்க்கிறாய் எப்படி கண்டுபிடித்தேன் என்று தானே பியூஸ் போன பல்பு போல உன் முகத்தை பார்த்தாலே தெரிகிறதே..

ஓ முகத்தை பார்த்து சொல்லும் அளவிற்கு அனுபவமோ என அவளை வார அவள் அசடு வழிந்தாள்..


பிறகு எங்கோ பார்த்தபடி அவளை ரொம்பவும் கஷ்டப்படுத்தி விட்டேன் சனா என்னை வெறுத்து விடுவாளோ என பயமாக இருக்கிறது என மீண்டும் கவலையானான்..

அவன் முகத்தை பார்க்கும்போது பிஸ்னஸில் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும் மிதுர்வனா என தோன்றியது அந்த அளவுக்கு கலக்கத்தில் இருந்தான்..

காதல் ஒருவனை எந்த அளவுக்கு மாற்றிவிடுகிறது அவன் சரியாக சாப்பிடாமல் தூங்காமல் சோர்வாக இருந்தான்..

அவனுக்கு ஆறுதல் கூறியவள் ஒரு வேளை அவர்களுக்குள் எதுவும் சரியாகவில்லையெனில் தானே எப்படியாவது பேசி சரி செய்வதாகக் கூறி அவனை ஓய்வெடுக்குமாறு அனுப்பி வைத்தாள்..

அவள் சொன்ன விதத்தில் சரியாகிவிடும் என ஒருவித நிம்மதியோடு அவனது அறைக்கு சென்றான்..

ஆனால் அதற்கு அடுத்த இரண்டு நாட்களும் சைதன்யா வரவில்லை எனவும் ரொம்பவும் சோர்ந்து போனான் இனியும் அவளைப் பார்க்காமல் இருக்க முடியாது என தோன்றியது எனவே நிரஞ்சனாவை அழைத்து விஷயத்தை சொல்லி உடனே வருமாறு அழைத்தான்..

அங்கே சைதன்யாவும் இதையேதான் யோசித்துக் கொண்டிருந்தாள்..

சந்தோஷ் வந்து வீட்டில் விட்டுச் சென்ற மறுநாள் காலையில் மெதுவாகத்தான் அறையிலிருந்து எழுந்து வந்தாள்..

கதிரேசன் என்னமா இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேட்டார்.. 

 

பரவாயில்லைப்பா  சோர்வாக பதில் சொன்னாள்..

 

இன்று வேலைக்கு போகிறாயாம்மா.. இல்லைப்பா நான் இன்று விடுமுறை சொல்லிவிட்டேன்..

 

சரிம்மா சாப்பிட்டு ரெஸ்ட் எடு நான் கிளம்புகிறேன் இன்று எனக்கு முக்கியமான வேலை இருக்கிறது முடிந்தவரை சீக்கிரம் வருகிறேன் எனக் கிளம்பி சென்றார்..

 

அவர் கிளம்பி சென்ற பின் சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் டிவி பார்த்தாள் கொஞ்ச நேரத்தில் அது போர் அடித்தது..

 

சரி ஏதாவது டிசைன் வரையலாம் என அதில் சிறிது நேரம் செலவழித்தாள் கொஞ்ச நேரத்திற்குப் பிறகு அதிலும் கவனம் சிதறியது எல்லாவற்றிலும் ஏதோ ஒரு வெறுமை இருப்பதாகவே தோன்றியது..

 

அவர்களது தோட்டத்தில் சிறிது நேரம் காலாற நடந்தாள் மனது கஷ்டமாக இருக்கும் பொழுது அந்த தோட்டம்தான் அவளின் புகலிடம் அங்கிருந்த ஸ்டோன் பெஞ்சில் அமர்ந்தாள்..

 

வாசலின் இருபுறமும் பவளமல்லிகையும் மனோரஞ்சிதமும் நிறைந்திருக்க உள்ளே ரோஜா செடிகள் வேறு வேறு வண்ணங்களில் இருந்தது அவற்றின் வாசனை மனதிற்கு புத்துணர்ச்சி அளித்தது..

 

மல்லிகை முல்லையின் வாசனை இதயத்திற்கு நிம்மதியை தந்தது.. நன்றாக எல்லாவற்றின் வாசனையையும் மெதுவாக இழுத்து மூச்சு விட்டாள்..

 

இந்த செடியெல்லாம் இவள் ஆசை ஆசையாய் பார்த்து வாங்கி வைத்தது..

 

அருணா பின்புறம் காய்கறி தோட்டம் அமைத்திருந்தார்..

 

எல்லா செடிகளுக்கும் தண்ணீர் விட்டு விட்டு சற்று நேரம் படுத்திருந்தாள் அன்று முழுவதும் சோகமாகவே சுற்றித்திரிந்த மகளை பார்க்க அருணாவுக்கு வருத்தமாக இருந்தது..

 

அன்று சொன்னது போலவே கதிரேசன் சீக்கிரமாக வீடு திரும்பி விட அவரோடு சைதன்யாவுக்கு அன்றைய பொழுது போனது..

 

மறுநாளும் வேலைக்கு கிளம்பாமல் சோர்ந்திருக்கும் மகளை பார்க்க கதிரேசனுக்கு யோசனையாக இருந்தது என்னவென்று கேட்க இன்று வேலை எதுவுமில்லை என சந்தோஷ் நாளை வர சொன்னான் அப்பா எனவும் அவர் முகத்தில் நம்பாத தன்மை இருந்தது..

 

ஆபீஸில் எதுவும் பிரச்சனை இல்லையே எனவும் அதிர்ந்து பார்த்தாள் சைதன்யா..

 

என்னப்பா நீங்கள் அப்படி எதுவும் இருந்தால் உங்களிடம் சொல்லியிருக்க மாட்டேனா உண்மையாகவே வேலை எதுவும் இல்லை என சொல்ல அவர் முகத்தில் யோசனை இன்னும் அப்படியே இருந்தது..

 

உடம்பு சரியில்லை என்றால் கூட லீவு போடாமல் வேலை வேலை என அலையும் மகள் இன்று வேலையில்லை அதனால் ஆபீஸுக்கு செல்லவில்லை என சொல்வது புதிதாக இருந்தது..

 

அதனால் அவர் முகத்தில் சிறு நம்பாத தன்மை இருந்தது ஏதோ ஒரு நெருடல் அவர் மனதில் எனவே சரிம்மா இன்றைக்கு எனக்கு வேலை அதிகம் இல்லை நானும் ஆபிஸ் போய்விட்டு சீக்கிரம் வேலையை முடித்துவிட்டு பர்மிஷன் போட்டுவிட்டு வந்து விடுகிறேன் என்க சரி என தலையாட்டினாள்..

 

இன்று சீக்கிரம் வீட்டிற்கு வந்து என்ன ஏது என அவளிடம் விசாரிக்க வேண்டும் என மனதிற்குள் நினைத்து கொண்டார்..

 

அப்பா அவளை நம்பவில்லை நாளையும் வேலைக்கு போகாமல் இருந்தால் கண்டிப்பாக கண்டுபிடித்துவிடுவார்..

 

அவளுக்கும்

அவனை பார்க்காமல் பேசாமல் இந்த இரண்டு நாட்கள் இரண்டு யுகம் போல இருந்தது..

 

அதே நேரத்தில் இனி எவ்வாறு அவன் முகத்தில் விழிப்பது என அவமானமாகவும்  இருந்தது..

உதடு கூட சற்று தடித்திருந்ததை போல இருந்தது என்ன செய்வது என யோசித்தவள் குழம்பி போனாள்..

சற்று நேரம் கழித்து பக்கத்து வீட்டு பிள்ளைகள் வந்து அவளை விளையாட அழைத்தார்கள் இன்று ஸ்கூலில் ஏதோ பங்சன் என எல்லாருக்கும் விடுமுறையாம்..

அவளுக்கும் இப்படி குழம்பி உட்கார்ந்திருப்பதற்கு அது மேல் என தோன்றியது..

என்ன விளையாடலாம் என அவர்களை கேட்க
சதீஷ், "அக்கா நாம் கபடி விளையாடலாம் என்றான்"
அஞ்சலி, "கண்ணாமூச்சி விளையாடலாம் என்றாள்"..

சரி சண்டை போடாதீர்கள் ஆளுக்கு ஒரு கேம் விளையாடலாம் என அவர்கள் இருவருக்கும் பொதுவாக சொன்னாள்..

அவள் வீட்டில் இருக்கும் போது எப்போதும் ஸ்கர்ட்டும் டாப்ஸும் போடுவது தான் வழக்கம்..

தலைக்கு குளித்து முடியை இரு பக்கமும் எடுத்து கிளிப்  போட்டிருந்தாள்.. ஸ்கர்ட் தடுக்கி விடக்கூடாது என்பதற்காக இடுப்பில் தூக்கி சொருகி இருந்தாள்..

அவள் வீட்டு வாசலில் உள்ள மரநிழலில் எல்லோரும் விளையாடிக் கொண்டிருந்தனர்..

முதலில் கபடி விளையாடலாம் பிறகு கண்ணாமூச்சி விளையாடலாம் என முடிவு செய்து இப்போது கபடி விளையாடிக் கொண்டிருந்தார்கள்..

தீவிரமாக விளையாடிக்கொண்டிருந்ததில் வீட்டு வாசலில் அவளுக்கு பின்புறமாக வந்து நின்ற காரை அவள் கவனிக்கவில்லை..

 
 
 

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.