(Reading time: 8 - 15 minutes)

கண்ணாடி மாளிகை

 

 முன்மாலை மணி மூன்று:

பதினாறு வயது ப்ரீத்தியின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று கொண்டிருந்தார் எமிலிப் பாட்டி. எமிலி பிரெஞ்ச் வம்சாவளியில் வந்த இந்தியப் பெண். அவரின் உதவியாளர் பெலிக்ஸ் அங்கிள், அவர் வலுவானவர், ஆனால் குழந்தைமனம் கொண்டவர். அவர்களின் நட்பு வட்டம் சிறிது தான்.  உறவினர்கள் என்று யாரும் வந்து போனதும் இல்லை. ப்ரீத்தி அவர்களின் தெருவில் உள்ள வீட்டில் தான் இருந்தாள். அவளின் அப்பா அம்மா இருவருமே பணிபுரிபவர்கள். ப்ரீத்தி பெரும்பாலும் வீட்டில் தனியாகவே இருப்பாள். அவளுக்கு நண்பர்கள் வட்டம் பெரிது.

 

எமிலி பாட்டி பேச்சைக் கேட்டு இந்த இடத்திற்கு வந்திருக்கோம். நமக்கு நீச்சல் வேற தெரியாது. படகோ ரொம்ப ஆபத்தான மாதிரி இருக்கே. கடற்கரையில் இருந்து ரொம்ப தூரம் இல்லன்னு சொல்லி தானே பாட்டி கூட்டி வந்தாங்க.. அம்மா, அப்பா கிட்ட அனுமதி கூட கேட்கல. சாயங்காலத்துக்குள்ள நானா வந்துட்டேன், எனக்கு எதாச்சும் ஆனா அம்மாவும் அப்பாவும் என்னை எப்படி கண்டுபிடிப்பாங்க.? மனதுக்குள் தனக்குத் தானே பேசிக்கொண்டு இருந்தாள் ப்ரீத்தி.

சிறிது தூரத்தில் பாட்டி சொன்ன இடம் தெரிந்தது. படகில் எமிலி பாட்டி, பாட்டியின் உதவியாளர் பெலிக்ஸ், ப்ரீத்தி இருந்தார்கள். ஐவர் செல்லக்கூடிய சிறிய மோட்டார் படகு அது. படகுக் கரையை நெருங்கியதும் தான் தீவில் அமைந்த பங்களாவின் பிரம்மாண்டம் தெரிந்தது. பாட்டியின் இறுதிக்கால ஆசை இது, கடல் நடுவில் உள்ள தீவில் ஒரு கண்ணாடி மாளிகையில் வசிக்க வேண்டும் என்பது. எனவே தனது சொத்துக்களை விற்று இந்த பிரம்மாண்ட கண்ணாடி மாளிகையை வாங்கிவிட்டார். பாட்டிக்கு ஒரே பேரன், கப்பலில் பணிபுரிகிறார். அவரும் எப்போதாவது தான் இந்தியாவுக்கு வருவார். இந்தத் தீவு கண்ணாடி மாளிகையை விடுமுறை ரிசார்ட்டாக மாற்றி இங்கே வந்து ஓய்வு பெற அவரும் விரும்புகிறார் என்றே பாட்டி சொல்வார். படகுத்துறை போல் இருந்த இடத்தில் படகைச் செலுத்தி, பெலிக்ஸ் முதலில் இறங்கி படகைக் கயிற்றால் அங்கிருந்த கம்பத்தில் கட்டினார். பாட்டிக்கு இறங்க கை கொடுத்தார் பெலிக்ஸ். மெல்ல இறங்கினார்கள் பாட்டி. தண்ணீரில் குதித்தாள் ப்ரீத்தி. "பார்த்து ப்ரீத்தி, மெதுவா " என்றார்கள் எமிலி பாட்டி. "பாட்டி நான் அம்மா அப்பா கூட அடிக்கடி பீச்ல போட்டிங் போயிருக்கேன். எனக்கு ரொம்பப் புடிக்கும் பாட்டி. இப்போல்லாம் அம்மா, அப்பாக்கு பேசக் கூட நேரமில்ல!" என்றாள். "ஹ்ம்ம்! என்றார் எமிலி பெருமூச்சுடன்.

மெல்ல சரிவில் ஏறிச் செல்ல ஆரம்பித்தார்கள். அழகான முகப்பு கொண்ட வீடு. வீட்டுச் சாவியைக் கைப்பையில் இருந்து எமிலி பாட்டி எடுத்தார்கள். மேலைநாட்டுக்  கட்டுமான அமைப்பில் இருந்தது வீடு. கண்ணாடிக் கதவுகள் இரண்டு இருந்தது. சுற்றுப்புற அழகை ரசித்துக் கொண்டு இருந்தாள் ப்ரீத்தி. எமிலி பாட்டி கதவைத் திறந்து முன்னே செல்ல, பின்னால் பெலிக்ஸ் சென்றார். முதல் கண்ணாடிக் கதவைத் திறந்து உள்ளே நுழைந்து, பின்புறம் பார்த்தவாறே இரண்டாவது கண்ணாடிக் கதவைத் தள்ளினாள் ப்ரீத்தி. எதோ அருவமாக ஒன்று கதவின் வழியே உள்ளே நுழைந்த மாதிரித் தெரிந்து ப்ரீத்திக்கு. தனது பிரமையாக இருக்கும் என்றெண்ணியவாறு உள்ளே நுழைந்தாள். உள்ளே பல அறைகள் இருந்தன. எமிலி பாட்டியும், பெலிக்ஸ் அங்கிளையும் காணவில்லை. உள்ளே எங்காவது இருப்பார்கள் என்று பார்த்துக் கொண்டே சென்றாள். ஒரு இடத்தில் குளிர்காய நெருப்பிடம் அமைத்து இருந்தனர். வெறும் விறகுகள் மட்டும் இருந்தன. அதற்குப் பின் இருந்த அறையில் இருந்து எமிலிப் பாட்டியின் குரல் கேட்டது. "ஹெராயின் மாத்திரைகள் மட்டும் இல்லைன்னா, தனிமையில் இத்தனை வருடம் என்னால் இருந்திருக்கவே முடியாது!" "என்னது! ஹெராயின் மாத்திரையா! போதை மருந்து பெயரைச் சொல்றாங்க பாட்டி! " அதிர்ந்தாள் ப்ரீத்தி.

"ஒரு நூறு கிராம் தங்கக்கட்டி கொடுத்தா அதுக்கு பதிலா ஆயிரம் ஹெராயின் மாத்திரைகள்" என்றார் பெலிக்ஸ்.

"தங்கக்கட்டியா!" என்று நினைத்தாள் ப்ரீத்தி. இவர்களை நல்லவர்கள் என்று நினைத்து இங்கே வந்து சிக்கிக்கொண்டாமே என்று தன்னைத் தானே நொந்து கொண்டாள்.

"ஹா ஹா ஹா" என்று ஒரு சிரிப்புச் சத்தம் கேட்டது.

சிரிப்புச் சத்தம் அந்த அறை முழுவதும் எதிரொலித்தது. எமிலி பாட்டி, பெலிக்ஸ் அங்கிளும் அந்த அறையில் இருந்து வெளியே வந்தனர்.

என்ன ப்ரீத்தி! ஏன் பேய் மாதிரி சிரிக்கிற..பயமா இருக்கே ?

பாட்டி நான் சிரிக்கல..

நீ சிரிக்கலையா. அப்படினா யார் சிரிச்சா?

தெரியல பாட்டி..

கடல் காத்து இப்படி தான் ஏதாவது சத்தம் கொடுக்கும்.

வா மாடியில் இருந்து பார்க்கலாம்.. சுற்றிலும் கடல் அருமையாக இருக்கும்.

சரி பாட்டி!

மாடி ஏறிச் செல்கையில் ஒரு பெண்ணின் புகைப்படம் இருந்தது. அதன் விழிகள்..

அதன் விழிகள் ..

அசைந்தது போலத் தெரிந்தது.

மறுமுறை அதை உற்றுப் பார்த்தாள். அதன் வாயும் அசைந்தது போலத் தோன்றியது. சற்று பயமாக இருந்தாலும், அருகில் சென்று உற்றுப் பார்த்தாள் ப்ரீத்தி. "போ! இங்கிருந்து போ!" என்று அந்த புகைப்படத்தில் இருந்த பெண் சொன்னாள்.

ப்ரீத்தி ஓட முயன்றாள். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவளை யாரோ கண்ணுக்குப் புலப்படாமல் அழுத்திப் பிடிப்பது போலிருந்தது.

இவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டோம். இனிமேல் தனக்கு விடிவுகாலமே இல்லை என்ற நினைப்பில் அழத் தொடங்கியவள் களைப்பில் கண்ணயர்ந்து விட்டாள்.

 

இரவு மணி ஏழு:

 

வீட்டில் ப்ரீத்தியைக் காணாமல் அவளின் அம்மா அப்பா பதறினர். அவளின் செல்போனும் வீட்டிலேயே கிடக்கவும் மிகுந்த பயம் வந்தது. அக்கம்பக்கம் விசாரிக்கவும் தயங்கிய நொடியில், பெலிக்ஸ் வந்தார். எமிலி அவர்களைத் தனது வீட்டிற்கு அழைத்து வரச் சொன்னதாகக் கூறவும், இருவரும் தயக்கத்துடன் கிளம்பினர்.

வாங்க! நீங்க தானே ப்ரீத்தி அம்மாவும் அப்பாவும்! எனவும், ஆமா என்றார்கள் ஒரே குரலில்.

“அம்மா, அப்பான்னு சொல்லிகிட்டா மட்டும் போதாது, அவளுக்கு அம்மா, அப்பாவா இருக்கணும்!” என்றார் எமிலி சிறிது ஆத்திரத்துடன்.

என்ன சொல்றீங்க? என்றவர்களிடம்

உள்ளே வந்து பாருங்க! என்று ப்ரீத்தி படுத்து இருந்த அறைக்கு அழைத்துச் சென்றார்.

ப்ரீத்தி! ப்ரீத்தி! என்று அவளை எழுப்பினர், ஆனால் அவள் எழுந்திரிக்கவில்லை.

அவ தூங்கட்டும், நீங்க வெளில வாங்க என்றார் அதிகாரமாக

தயக்கத்துடன் வெளியில் வர, "என்னாச்சு ப்ரீத்திக்கு?" என்றார் அவளின் அம்மா.

"அவளோட படிக்கிற நண்பர்கள் ஆண் பெண் எல்லாரும்தான் சேர்ந்து உங்க வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற கார்டன்ல வீட் அதான் கஞ்சா புகைச்சிருக்காங்க. பெலிக்ஸ் பார்த்துத் திட்டவும் சிலர் கிளம்பிப் போக, இரண்டு பசங்க மட்டும், ப்ரீத்தி பின்னாடியே வீட்டுக்குள்ள போயிருக்காங்க. அவளோட கூல்டிரிங்ல ஹெராயின் மாத்திரையைக் கலந்து கொடுத்து இருக்காங்க. ப்ரீத்திக்கு எதாச்சும் பிரச்சினை வந்திருமோன்னு என்கிட்டே வந்து பெலிக்ஸ் சொன்னதால், உடனே அங்கே நாங்க போனோம், அந்த பசங்க போதையில் இருந்த ப்ரீத்தியை தவறாகத் தொட்டுட்டு இருந்தாங்க, பெலிக்ஸ் அவங்க ரெண்டு பேரையும் வெளில தள்ளிவிட்டார். நான் தான் ப்ரீத்தி கையைப் புடிச்சு எங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன்!. அவனுங்க கொடுத்த மாத்திரையின் காரணமா புலம்பிட்டே இருந்தா. என்னவோ சொல்லிட்டே இருந்தா. தூக்க மாதிரி மைல்ட் டோஸ் கொடுத்துத் தான் தூங்க வச்சிருக்கேன்!"

கேட்க கேட்க அதிர்ந்தனர் ப்ரீத்தியின் பெற்றோர். "அவளுக்காகத் தானே எல்லாம்! இந்த வேலை! இந்த வீடு! இப்படிப் பண்ணிட்டாளே!" என்று ப்ரீத்தியின் அம்மா சொல்லவும்.

"அவளுக்குத் தேவை பணம், இல்லை உங்க நேரம்! நீங்க அவளோட அதிக நேரம் செலவழிக்கணும். கைல காசு, செல்போன் கொடுத்தாப் போதாது. வயசு வந்த பொண்ணுக்கு அம்மா எல்லாத்தையும் மனம் தொறந்து பேசுற தோழியாவும் இருக்கணும்! உங்ககிட்ட கிடைக்காத நேரம் நண்பர்கள் கிட்ட கிடைக்குதுன்னு போனா, அவங்க நல்லவங்களா இருக்கணுமே ! அதையும் நீங்க தான் கண்காணிக்கணும்! இன்னிக்கு நடந்ததை குற்றமாப் பார்த்து அவளைக் குற்றவாளியா ஆக்காம, விபத்தில் இருந்து தப்பிப் பொழைச்ச ஒருத்தியாப் பார்த்து ஆறுதல் சொல்லுங்க! இந்த மாதிரி நடக்காம இருக்க அவ எப்படி இருக்கணும்னு சொல்லுங்க. அவளோட அதிக நேரம் செலவிடுங்க!" எமிலியின் அறிவுரை அவர்களுக்குப் புரிந்தது.

எமிலி, பெலிக்ஸ் இருவருக்கும் தங்கள் நன்றிகளை கண்ணீருடன் சொன்ன ப்ரீத்தியின் பெற்றோர், இனிமேல்மகளின் மனம்  புரிந்து நடப்பதாக சொன்னார்கள்.  உள்ளறையில் இருந்து ப்ரீத்தி எழுந்து வந்தாள், "ஏன்மா நான் இங்கே தூங்கிட்டு இருந்தேன்!" என்று குழப்பத்துடன் கேட்டவளை, "ஸ்கூல் விட்டு வரும் போது மயங்கி விழுந்துட்டியா! அதான் இங்கே கூட்டிட்டு வந்தேன் என்று எமிலி பாட்டி சொல்லவும், ப்ரீத்திக்கு நினைவுகள் குழப்பமாகவே இருந்தது. "அப்படியா பாட்டி! தேங்யூ சோ மச்!" என்றாள். "நல்லா சாப்பிடு, இப்படி மயங்கிலாம் விழமாட்ட என்றவர், இன்னொரு சின்ன அட்வைஸ் ப்ரீத்தி, இந்த வயசும் மனசும் கண்ணாடி மாளிகை மாதிரி தான், அதில் வெளியுலகம் பலவித கற்களை உதாரணமா, இனக்கவர்ச்சி, மது, சிகரட், போதை இதுமாதிரி எறிஞ்சு பார்க்கும், அதையெல்லாம் தவிர்த்து பத்திரமா இருக்கிறது நம்ம கையில் தான் இருக்கு! என்றார் அவளின் தோளில் தட்டியவாறு.! " ப்ரீத்திக்கு மாலை நடந்தது சற்று நினைவுக்கு வர, குற்ற  உணர்வுடன், "புரிஞ்சது பாட்டி!" என்றாள்.

"போ! பத்திரமா இரு!" என்று அம்மா, அப்பாவுடன் அவளை அனுப்பி வைத்தார். வாசலில் இருந்து ஒரு முறை உள்ளே  திரும்பிப் பார்த்தாள்.

கண்ணாடி மாளிகை போன்ற அந்த வீட்டில் எமிலி பாட்டி தேவதையாகத் தெரிந்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.