(Reading time: 11 - 21 minutes)

 

இரவு உணவு உண்ணும் சமயத்தில் தன் தம்பியை பார்த்த ஆதிநந்தனோ "அடேய் ஈவனிங் வந்து எல்லாத்தையும் சொல்றவனா டா நீ..... உனக்காக வீட்டுல பொய்லாம் சொன்னேன் டா" என்று மனதினுள்ளே பொருமிக்கொண்டிருந்தான். சக்திவேல் தாத்தாவோ பிரியாவை பார்த்து "இந்த பொண்ணை தான் நந்து லவ் பன்றானோ... ஒரு வார்த்தை சொல்லை அவன்..... வர வர வீட்டுல நமக்கு மரியாதையே இல்லாம போச்சு..... டேய் நந்து உனக்கு இருக்கு டா" என்ற கோபமாய் நந்தானை மனதினுள் திட்டிக்கொண்டிருந்தார்.

 

 நந்தன் இருவரின் கோப பார்வையையும் உணர்ந்து எனக்கு தூக்கம் வருது பா... யாரும் என்னை டிஸ்டர்ப் பண்ணாதீங்க... என்று எழுந்தவன் "டேய்... நந்து..." என்ற தாத்தாவின் குரலும் ஆதியின் குரலும் ஒருசேர ஒலிக்க தனக்கு காது கேட்காததை போல் ரெடி ஜூட் என்று தன்னறைக்கு ஓடியே விட்டான்.

இரவு உணவருந்திவிட்டு அனைவரும் உறங்க சென்றுவிட, நந்தனும் களைப்பினால் படுத்த உடனே உறங்கிவிட்டான். 

 

தனக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறைக்குள் வந்த ப்ரியாவோ உறக்கம் வராமல் அந்த அறையின் வெளியே பால்கனி போல் இருந்த முகப்பில் அமைந்திருந்த இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டாள். அவள் நன்றாக உறங்கி பல நாட்கள் ஆகிவிட்டதே இன்று மட்டும் எப்படி உறக்கம் வரும். 

 

இரவு நேர ஊதக்காற்று சில்லென்று முகத்தில் மோத அந்த அமைதியான இயற்கையின் பேரழகை ரசித்து உள்ளம் சிலிர்த்தாள் ப்ரியா. 

 

நந்தனின் அறையிலோ, "ஹே அம்மு வேண்டாம் டா.... டாடி பாவம்ல" 

 

"அப்போ மும்மியும் தான் பாவம்...... நீ மட்டும் மம்மி மேல கலர் பூசுன தான" என்று க்ரிஷ்ணப்ரியாவின் சாயலில் இருந்த ஒரு குட்டி வாண்டு மருத்துவமனைக்கு கிளம்பி வந்திருந்தவன் மேல் தன் கையில் இருந்த சிகப்பு சாயப்பொடியை பூசுவதற்கு தயாராக நிற்க.... நந்தன் அந்த வாண்டுவின் கைகளில் சிக்காமல் ஓடிக்கொண்டிருந்தான். 

 

"செல்லம் டாடி ஹாஸ்பிடல் போகணும்ல... நாம சண்டே கலர் பூசி விளையாடலாம்...." என்று அவளுக்கு ஐஸ் வைத்துக்கொண்டிருந்தான். 

 

"அதெல்லாம் முடியாது.... நீ நேத்து மம்மி ஹாஸ்பிடல் போகும்போது தான பூசுன" என்று சிணுங்க... 

 

"அது நேத்து செல்லம்.... நான் சொல்றது இன்னைக்கு..." என்று அவள் கைகளில் சிக்காமல் ஆட்டம் காட்டினான். 

 

அந்த வாண்டு விடாமல் அவனை துரத்த, வீட்டின் பின்புறம் இருந்த நீச்சல்குளத்தில் கால் தவறி விழுந்துவிட்டான். 

 

ஐயோ தண்ணி தண்ணி என்று பதறியடித்து உறக்கத்திலிருந்து விழித்து அமர்ந்தவன், "கனவா......" என்று தன் தலையிலே தட்டிக்கொண்டான். 

 

"கனவு என்னமோ நல்லா தான் இருக்கு... ஆனா நிஜத்துல இப்படி லாம் நடக்க இன்னும் எத்தனை வருஷம் காத்து இருக்கணுமா..." என்று அவனின் ஒரு மனம் பேச "காத்திருந்தா தான் பாஸ் அன்பு அதிகரிக்குமாம்" என்று இன்னொரு மனம் அதை அடக்கியது. 

 

தூக்கம் கலைந்து எழுந்தவன் தண்ணீர் பாட்டிலை தேட, அதில் நீர் இல்லாமல் இருப்பதை உணர்ந்து படிகளில் இறங்கி சமையலறை நோக்கி சென்றான். நீர் அருந்தியவன் பிரியா இருந்த அறையின் வெளியே வெளிச்சம் தெரிவதை பார்த்துவிட்டு இன்னொரு வழியில் அதன் முகப்பை அடைந்தான். அங்கு ப்ரியா உறங்காமல் அமர்ந்திருப்பதை பார்த்துவிட்டு "என்ன கிருஷ்ணா தூங்கலையா????" என்று வார்த்தைகளுக்கு கூட வலிக்குமோ என்று அத்தனை மென்மையாய் கேட்டான். 

 

இரவின் நிசப்தத்தில் திடீரென கேட்ட நந்தனின் குரலில் திடுக்கிட்டவளாய் அவனை திரும்பி பார்த்தாள் பிரியா. அவள் நடுங்கியதை கண்டவன் "ஹே கிருஷ்ணா ரிலாக்ஸ்... நான் தான்" என்று அவளை ஆறுதல் படுத்தினான் நந்தன். 

 

தன்னை சமன்படுத்திக் கொண்ட ப்ரியா "தூக்கம் வரல" என்றாள். 

 

"புது இடம் இல்லையா அது தான் உனக்கு தூக்கம் வரல போல போய் படு தூக்கம் வரும்" என்ற நந்தனை பார்த்தவள் மனதினுள் "நான் நல்லா தூங்கி பல நாள் ஆகுது" என்று அவனுடன் பேசினாள். 

 

அமைதியாய் எழுந்து அறையினுள்ளே செல்ல திரும்பியவள் அவளையே பார்த்துக்கொண்டிருந்த நந்தனிடம் "உங்க கிட்ட ஒன்னு கேட்கணும்" என்று மெதுவாய் பேச்சை துவங்கினாள். அவளாக நந்தனிடம் பேசுவது உலகின் எட்டாவது அதிசயம் அல்லவா அதை தவற விடுவானா அவன். நந்தனும் என்ன என்பதாய் ஒரு புருவத்தை உயர்த்தி கேட்டான். 

 

"இல்ல அந்த குழந்தை......" என்று பிரியா இழுக்க அவள் எதை பற்றி கேட்கிறாள் என்பதை அறிந்தவன் "பத்திரமா இருக்கு" என்று மட்டும் பதிலளித்தான். "குழந்தையை நான் பார்க்கணும்..." என்று அதுவரை குழந்தையை பற்றி தான் யோசிக்காத குற்ற உணர்வுடன் வருத்தமாய் அவள் கேட்க... 

 

"சரி நாளைக்கு போய் பார்க்கலாம் ஓகே தான. இப்போ போய் தூங்கு" என்று அவளது நலத்தில் அக்கறையாய் இருந்தான் நந்தன். "ம்ம்ம்" என்று தலையாட்டியவள் உறங்க சென்றுவிட்டாள். அவள் சென்று கட்டிலில் படுக்கும் வரை வெளியே நின்று பார்த்துக்கொண்டிருந்தவன் தானும் தன்னறைக்கு சென்றுவிட்டான். 

 

இப்பொழுது உறக்கம் வராமல் தவிப்பது நந்தனின் முறையாயிற்று. "இவளை எப்படி இங்கவே தங்க வைக்கிறது... காலைல மொத வேலையா அம்மா அப்பா கிட்ட இதை பற்றி பேசணும்" என்று ஏதேதோ யோசித்து ஒரு முடிவெடுத்தவன் உறங்கியும் போனான். 

 

நந்தகோபாலனின் அறையில் அகல்யாவோ வெகு நேரம் உறக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்க அதில் விழித்த நந்தகோபாலன் "என்ன அகல்யா.... என்ன ஆச்சு?" என்று கேட்க 

 

"ஒன்னும் இல்ல மாமா நீங்க தூங்குங்க" ....அகல்யா

 

"என்னோட தர்மபத்தினி ஏதோ யோசனைல இருக்கும் போது எனக்கு மட்டும் எப்படி தூக்கம் வரும்..." என்று எழுந்து அமர்ந்தவர் "என்ன யோசனை மா??" என்று பாசமாய் கேட்டார். 

 

"எல்லாம் அந்த ப்ரியா பொண்ணை பத்தி தான் மாமா..... அவளை பார்க்கவே பாவமா இருக்கு... நீங்க சொன்னிங்க தான வானதியை கடைசியா பார்க்க சொன்ன பொது கூட அவ அழவில்லைனு... ஆனா அவளுக்கு நான் பரிமாறும்போது அவ கண்ணீர் என் கையில் பட்டுச்சு மாமா..." என்று வருத்தமாக கூற

 

 "நீ செஞ்ச சட்னி காரமா இருந்துச்சு... என் கண்ணுல கூட தண்ணீர் வந்துச்சே... நீ அதை பார்க்கலையா" என்று அவர் நக்கல் பேச அருகில் இருந்த தலையணையை எடுத்து அவரை மொத்த ஆரம்பித்திருந்தார் அகல்யா. 

 

"விளையாடாதீங்க மாமா..... அவளோட எல்லா கஷ்டத்தையும் அவளுக்குள்ளளே வைச்சுக்குறாளோனு தோணுது எப்படியாவது அவளை மாத்தணும்.." என்று பேசிய அகல்யாவிடம் 

 

"வீட்டுக்கு மருமகளா வரும் முன்னாடியே என்ன ஒரு அக்கறை" என்று சீண்ட அகல்யாவோ "அவ எனக்கு மருமகளோ இல்லையோ, அவளும் ஒரு பொண்ணு மாமா அதுவும் யாரும் இல்லாம தனியா வளர்ந்த பொண்ணு. இப்போ நம்ம வீட்டுல இருக்கா. நாம தான பார்த்துக்கணும்" என்று ஒரு முடிவெடுத்தவராய் கூறினார். 

 

"நேத்து என்னமோ பயந்தியே அவளால தான் உன் மகன் தனியா இருந்தானு.... இப்பவும் அப்படி தான் யோசிக்கிறியா அகல்யா...?" என்று ஒரு ஆழப்பார்வையோடு நந்தகோபாலன் கேட்க "அவ யாரையும் பிரிக்க மாட்டா மாமா. அவளுக்கு இப்போ தேவையானது ஒரு குடும்பம் தான்" என்று கூறினார் அகல்யா. 

 

மெச்சுதலாய் ஒரு பார்வையை தன் மனைவியை நோக்கி வீசியவர் "ஏதோ ஒரு முடிவு எடுத்து இருக்கனு தெரியுது. இந்த வீட்டோட நிர்வாகி நீ..... எல்லாம் உன் விருப்பம் தான். என் குட்டிமா வோட முடிவு எப்பவும் தவறாகாது இப்போ தூங்கு" என்று தன் மூக்கை பிடித்து ஆட்டிய கணவரை காதல் பொங்க பார்த்துக்கொண்டிருந்தார் அகல்யா. 

 

அனைவரும் நிம்மதியாக உறங்க, அடுத்த நாள் பிரியாவிற்கான புது விடியலுடன் அழகாய் அவள் முன்னே காபி கோப்பையை கையில் பிடித்தபடி நின்றிருந்தது அகல்யாவின் ரூபத்தில். 

 

"எதுக்கு யாழ்க்கு தூக்க மாத்திரை கொடுத்த என்று கௌசல்யா நிகாரிக்காவின் கழுத்தை நெறித்தபடியே கேட்க நிகாவின் தோழிகள் இருவரும் கௌசல்யாவின் கையை விலக்க முயன்றுக்கொண்டிருந்தனர். "அவளோட இடத்தை தட்டி பறிக்க உன் பிரண்டு வந்தா அவளுக்கு கோபம் வராதா" என்று நிகாவின் தோழி கூற நிகாவை விடுத்து அவள் தோழியின் புறம் திரும்பினாள் கௌசல்யா. 

 

"இப்போ நீ என்ன சொன்ன அவளோட இடமா? இங்க யாருக்கும் எந்த இடமும் சொந்தமானது இல்ல. இன்னைக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர் என்ற பட்டத்தை யாழ் வாங்கி இருக்கா.... அது அவளோட திறமைக்கு கிடைச்சது"

 

"ஏய் என்ன பேசிட்டே போற அப்போ எனக்கு திறமை இல்லைனு சொல்றியா?" என்று நிகா கோபமாய் கேட்க... 

 

"நான் சொல்லல நீ தான்... உன்னோட திறமை மேல நம்பிக்கை இல்லாம யாழை தோற்கடிக்கணும்னு நினைச்சுட்டு இருக்க..... அந்த நினைப்பே இப்போ உன்னை தோற்கடிச்சுடுச்சு" கௌசல்யா எடுத்துக்கூற அதை எதுவும் கேட்காதவளாய் நிகா பேச ஆரம்பித்தாள். 

 

 "ug படிக்கும் போது நான் வடிவமைக்கும் ஆடைகளுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருப்பாங்க தெரியுமா... எல்லா போட்டியையும் நான் தான் வின் பண்ணுவேன்... ஆனா எப்போ நீங்க ரெண்டு பேரும் வந்திங்களோ.... அந்த யாழ் எப்போ போட்டிகளில் பங்கெடுத்தாலோ அன்னைக்கு இருந்து உங்களை தான் எல்லாரும் கொண்டாடுறாங்க.... எனக்கு இருக்க ஆத்திரத்துல அவளை நான் கொல்லாம விட்டேனு சந்தோசப்படு...." என்று பொறாமை குணம் மேலோங்க பேசிக்கொண்டிருந்தவளை கன்னத்தில் அறைந்தவள் "ஏய் நிறுத்து படிக்கும் போது போட்டி தான் இருக்கணுமே தவிர பொறாமை இல்லை. எங்களால தான் நீ வின் பண்ணலையா இல்லவே இல்லை உன்னோட சேர்க்கை அது தான் இங்க பிரச்சனை. இன்னும் கொஞ்சம் முயற்சி செஞ்சி இருந்தா நீ தான் வின் பண்ணி இருப்ப. உன்னோட டிசைன் எப்பவுமே மார்க்கெட்ல ட்ரெண்டிங் தான். ஆனா உன் பொறாமை குணம் உன் மூளையை மறைச்சுடுச்சு.... ஒரு பொண்ணு தோற்கணும்னு அவ உயிரோட விளையாடி இருக்க நீ.... உன்னை நான் மன்னிச்சு விட்டுட்டு போறேன்னு நினைச்சுக்கோ.... இன்னொரு முறை என் யாழ் கிட்ட நெருங்குன... இல்ல நீ அவளை பத்தி நினைச்சாலே உன்னை சும்மா விட மாட்டேன்... என்று கை நீட்டி எச்சரித்த கௌசல்யாவை கண்டு சற்று நடுங்கித்தான் போனாள் நிகாரிக்கா. 

 

இந்த அடி உங்களுக்கும் சேர்த்து தான் ஏதாவது தப்பு செஞ்சா அதை சொல்லி திருத்துறது தான் நட்புக்கு அடையாளம் உங்களை மாதிரி தப்பு செய்ய உசுப்பேத்தி விடறது இல்ல என்று நிகாவின் தோழிகளை பார்த்து ஆங்காரமாய் பேசிவிட்டு யாழ் இருந்த மருத்துவமனை நோக்கி சென்றுவிட்டாள் கௌசல்யா. 

 

 நிகாவும் அவள் தோழிகள் இருவரும் தங்களது அறையில் அமைதியாய் அமர்ந்திருந்தனர். கௌசல்யா பேசியதில் இருந்த உண்மை நிகாவிற்கும் புரிய யோசிக்க ஆரம்பித்தாள். பல விழாக்களில் அவளை ஆடை வடிவமைப்பாளராக இன்றும் அழைப்பார்கள் தான். "என் திறமை மேல எனக்கே நம்பிக்கை இல்லையா.... நான் எங்க தப்பு செஞ்சேன்...? என்று ஒவ்வொன்றாய் தன் மனதினுள் யோசித்தபடியே இருக்க அவளின் தோழியோ "இந்த கௌசல்யாவிற்கு எவ்வளவு தைரியம்.... உன்னையே அடிச்சுட்டு போறா அவளை சும்மா விட கூடாது நிகா" என்று ஒருவள் கூற.... "ஆமா சும்மா விடக்கூடாது" என மற்றொருவளும் ஒத்து ஊத அனைத்திற்கும் மூல காரணம் புரிந்தது நிகாவிற்கு. 

 

"சட் அப் அண்ட் கெட் லாஸ்ட் போத் ஆப் யூ" என்று நிகா கோபமாய் இருவரையும் முறைக்க அந்த இருவரும் தங்கள் குட்டு வெளிப்பட்டவர்களாய் அமைதியாய் வெளியேறினார். நிகா பெரிய இடத்து பெண் இப்பொழுதோ ஆடை வடிவமைப்பில் முதல் இடத்தில் இருக்கிறாள். அவளுடன் பழகினால் தாங்களும் அவளது உழைப்பில் முன்னேறிவிடலாம் என அவர்கள் கணக்கு போட்டு நிகாவை உசுப்பேத்தி விட யாழின் மேல் பகையுணர்வு கொண்டு நிகாவும் இப்படி செய்துவிட்டாள். சட்டென யாரையும் நம்பிவிடும் நிகாரிகா அவர்கள் இருவரையும் நம்பி இன்று இந்த நிலையில் இருக்கிறாள். 

 

மருத்துவமனையில் யாழ் கண்விழித்துவிட அவளை அணைத்துக்கொண்ட கௌசல்யா, "வாழ்த்துக்கள் சிறந்த ஆடை வடிவமைப்பாளரே" என்று கூற இருவருக்கும் அளவில்லா ஆனந்தம். 

 

யோசித்துக்கொண்டிருந்த நிகாவும் யாழ் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனையில் அவள் எந்த அறையில் இருக்கிறாள் என்பதை ரிசப்ஷனில் கேட்டு அவ்விடம் வந்து சேர்ந்தாள். நிகாவை கௌசல்யா யோசனையாய் பார்க்க, அவளோ யாழிடம் சென்று "சாரி யாழ் நான் தான் நீ வின் பண்ண கூடாதுனு தூக்க மாத்திரை கலந்த ஜூஸ் உனக்கு கொடுத்தேன்" என்று மன்னிப்பு கோர என்ன நடக்கின்றது என்பது புரியாமல் யாழ் கௌசல்யாவை நோக்க அவளோ ஆம் என்பதாய் தலையை ஆட்டினாள். 

 

தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்பவரை மன்னித்தலே சிறந்த பண்பன்றோ. யாழும் அதை தான் செய்தாள். "பரவால்ல விடு நிகா எனக்கு ஒன்னும் ஆகல ல" என்றாள் யாழ். கௌசல்யாவிடம் திரும்பிய நிகாவோ "தேங்க்ஸ் உண்மையான பிரண்ட்ஷிப் னா என்னனு எனக்கு புரிய வைச்சதுக்கு" என்று சொல்லிவிட்டு விடைபெற்றாள் நிகாரிக்கா. 

 

அவள் சென்றதும் "ஹே கேடி... என்ன பண்ண அவளை??? அவளா வந்து ஸாரிலாம் கேக்குறா...." என்று யாழ் கேட்க "எனக்கு ஒன்னும் தெரியாது பா என்று தோள்களை குலுக்கினாள் கௌசல்யா. "ஓஹ்..... உனக்கு ஒன்னும் தெரியாம தான் உனக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு போறாளா அவ....."என்று யாழ் கௌசல்யாவின் காதை திருக நடந்த அனைத்தையும் கூறி முடித்திருந்தாள் கௌசல்யா. 

 

"எப்படியோ புரிஞ்சுக்கிட்டா சரி தான்" என்ற யாழோ திடீரென நினைவு வந்தவளாய் "ஹே கௌ வீட்ல யாருக்கும் இங்க நடந்ததை சொல்லல தான" என்று பயத்துடன் கேட்க கௌசல்யாவோ சிரித்தபடியே, "சொல்லல யாழ். அது தான் நாளைக்கு நாம ஊருக்கு போய்டுவோம்ல அப்போ சொல்லிக்கலாம்" என்றாள். 

 

"வின் பண்ணதை மட்டும் தான் சொல்லணும் மயக்கம் போட்டதை இல்லை புரிஞ்சுதா" என்று தன் தோழியிடம் யாழ் சொல்ல "அது என்னோட மூட் பொறுத்து தான் இருக்கு.... நீ சமத்தா நான் சொல்றதைலாம் செஞ்சா நானும் நீ சொல்றபடி கேக்கறேன் டீல் ஓகே வா" என்று கௌசல்யா கையை உயர்த்தி கண்ணடிக்க "ஓகே டி கேடி.... இப்போ வா மொத இங்க இருந்து கிளம்பலாம்..... ஹாஸ்பிடல் செட்டப் பார்த்தாலே ஏதோ பெரிய பிரச்சனையோனு நினைக்க தோணுது" என்று சாதாரணமாக தான் யாழ் பேசினாள். ஆனால் அதை கேட்டுக்கொண்டிருந்த கௌசல்யாவின் முகமோ வெளிறிப்போனது.

 

(மகிழ்ந்திரு)

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.