நிருபர் : வணக்கம் ஐயா..
காமராஜர்: வணக்கம் வணக்கம்.. சொல்லுப்பா....
நிருபர் : ஐயா உங்களை பேட்டி எடுக்க வந்திருக்கிறேன்...
காமராஜர்:அதை ஏற்கனவே சொல்லப்போய் தானே இந்த நேரத்தை ஒதுக்கி வந்திருக்கிறேன்... பிறகு அதையே திரும்ப சொல்லி ஏன் என் நேரத்தை வீணாக்குற...
நிருபர் : மன்னிக்கணும் ஐயா... நேரடியாக கேள்விக்கு வருகிறேன். தமிழ் நாடு அரசியல் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..
காமராஜர்:பெருசா நினைக்க என்ன இருக்கிறது... அதான் பாமரன் முதல் படித்தவர் வரை எல்லாரும் நாட்டை பற்றி நல்லா தெரிஞ்சு வச்சிருக்காங்களே....
நிருபர் : தமிழ்நாட்டை மீண்டும் நல்ல நிலைக்கு கொண்டுவர முடியுமா ?
காமராஜர்:முடியுமா முடியுமான்னு கேட்டே முடிவில்லாமல் போய்கிட்டு இருக்குதே...
நிருபர் : மழைக்காலத்தில் வெள்ளம் வருது... வெயில் காலத்தில் தண்ணீர் பஞ்சம் வருது... இதற்கு தீர்வே இல்லையா
காமராஜர்:தீர்வா... தீர்வு எப்படி வரும்கறேன். டெண்டர் வாங்கிட்டு கட்டாத அணைக்கு நிதி போதாது என்று கணக்கு காட்டுறது... கடலுக்குள்ள மழைத்தண்ணீரை திறந்து விட்டுட்டு கடல் எல்லையையே தாரைவார்த்துடுறது... அப்புறம் எப்படி தீர்வு வரும்கறேன்.
நிருபர் : படிக்காத நீங்க செய்த நல்லாட்சியை நல்லா படிச்சவங்க கூட செய்வதில்லையே ஏன்..
காமராஜர்:கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கி இருந்தால் செய்திருப்பார்கள்,நாங்க வயிற்றை கட்டி வாயகட்டி ஸ்கூல் காலேஜ் கட்டி வச்சோம்... எந்த கஷ்டமும் தெரியாமல் பள்ளியில் சேர்ந்தவன் படிச்சிட்டு வேலை இல்லேன்னு வெளிநாட்டுக்கு போய்டுறான். படிக்க கிட்னியை விக்கிற சூழ்நிலைக்கு கொண்டு போயாச்சு... வேலையை வாங்க உயிரையும் விடுறான்.... பணத்தை பெட்டி பெட்டியா வாங்கிட்டு பட்டத்தை தூக்கி கொடுத்துடுறாங்க, புத்தகத்தை மட்டும் படிச்சா போதுமா, மனசை படிக்க வேண்டாமா... பெட்டி பெட்டியா பணத்தை கொடுத்தவன் பணத்தை வாங்க பார்ப்பானா இல்லை இன்னும் தானம் பண்ண பார்ப்பானா... இதுல கஷ்டம் தெரியலன்னா கூட பரவால்லை நஷ்டமும் தெரியாம இருக்கிறானே அவனை என்னத்தை சொல்ல... பாடத்தை படிக்காமல் பெஞ்ச்சை தேச்சி சுத்தம் பண்ணிட்டு படிக்காமலே பள்ளி வகுப்பு முடிச்சிட்டு வீட்டுக்கும் நாட்டுக்கும் பிரயோஜனம் இல்லாம கழுவி சுத்தம் பண்றாங்க பொது கஜானாவை...
நிருபர் : உங்கள மாதிரி ஒரு தலைவர் வரணும்னு ஒவ்வொருத்தரும் ஆசைப்படுறாங்க ஐயா அந்த ஆசை நிறைவேறுமா...
காமராஜர்:உங்க ஆசையை தூக்கி இடுகாட்டில் வச்சி எரிக்க தான் செய்யணும்கறேன்...
நிருபர் : ஐயா நீங்க ஒரு நல்ல தலைவர். நீங்க இப்படி பேசலாமா அய்யா...
காமராஜர்:வேற எப்படி தான் பேசணும்கறேன்.. காமராசன் போல வரணும் வரணும்னு வாய் கிழிய பேசி வெற்று கனவு காண்றியே... அது எப்படி பலிக்கும்கறேன்... ஆத்தா பிள்ளையாய் இருந்தாலும் வாயும் வயிறும் வேறு தானே... வாங்கிய கொஞ்சம் காசு சம்பளத்தில் கொஞ்சம் அனுப்பி இதுக்குள்ள சமாளி ஆத்தானு சொன்னேன்... ஆனா இப்போ வாங்குற சம்பளம் போதாதுனு சம்பளத்துக்கு மேலே கிம்பளமும் வாங்கிட்டு பெத்த வயிற பட்டினி போட்டுட்டு, அப்புறம் அனாதை ஆசிரமத்தில் தள்ளிட்டு, எங்களை காப்பாற்ற ஒருத்தன் வருவானா என்று கேட்டால் எப்படி வருவான்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்... அப்போ உன் புள்ள எப்படி வருவானு யோசி...அதனால் ஒன்னு நீ மாறு... இல்லன்னா உன் ஆசையை மாத்துன்றேன்...
நிருபர் : அப்போ ஒவ்வொருத்தரும் மாறினால் நாடு வளம் பெறும் என்று சொல்கிறீர்களா
காமராஜர்: கேள்வி கேட்கிறது நிறுத்து....
நிருபர் : என்ன.....
காமராஜர்: கேள்வி கேட்கிறது நிறுத்திட்டு ஒருத்தனும் கேள்வி கேட்காத மாதிரி தலை நிமிர்ந்து வாழ்ந்து பார்னு சொல்றேன்...இல்லைன்னா இப்படி செத்துப்போன என்னை எழுப்பி கேள்வி கேட்கிற நிலைமை வந்திருக்குமா....
நிருபர் : சரிதான் ஐயா... வாழத் தெரியாமல் தான் வணக்கம் செலுத்தி மரியாதை கொடுக்க வேண்டிய உங்களை எழுப்பி கேள்வி கேட்டுட்டேன் ஐயா.. மன்னித்து கொள்ளுங்கள்...
இன்னைக்கு உங்களுக்கு பிறந்தநாள் அதனால தமிழ்நாட்டு மக்கள் சார்பில் உங்களுக்கு இந்த பூங்கொத்து கொடுத்து வாழ்த்து சொல்கிறேன் ஐயா...
காமராஜர்: எவனுக்கு வேணும் உன் பூங்கொத்து. அதை தூக்கி குப்பையில கடாசு...
நிருபர் : ஐயா... ஆசையாக கொடுத்ததை இப்படி தூக்கி வீச சொல்றீங்களே..
காமராஜர்: சரி வேற என்ன செய்யணும்னு சொல்லு...
நிருபர் : ............
காமராஜர்: குப்பைத்தொட்டியா வச்சிருக்கிற மனசை சரி செஞ்சு பூந்தோட்டம் ஆக்க சொல்லுன்றேன்...அதுதான் எனக்கு சொல்ற உண்மையான வாழ்த்துங்கறேன்.. மண்டையில் உரைச்சதா....
நிருபர் : நல்லா உரைச்சது ஐயா...
காமராஜர்: குறை சொல்றதை நிறுத்தி விட்டு குற்றம் செய்யாம வாழுங்கறேன்.... ஒவ்வொருதரும் உன்னை மட்டும் மாற்றி கொள்... உலகமே மாறி விடும்... ஆட்சி மட்டும் அல்ல வாழ்க்கையே மாறி விடும்... வரட்டுமா...
நிருபர் : சரி ஐயா...
இது கற்பனையாக எழுதியது.. மேதையான காமராசர் முன் நிற்க முடியாது.நாம் சிந்திக்க மட்டுமே..