(Reading time: 6 - 11 minutes)

பொக்கிஷம் - வத்சலா

பொக்கிஷம்

சந்தின் கைகள் கார் ஸ்டீயரிங்கின் மீது இருந்தன. கால்கள் பிரேக்கையும், ஆக்சிலேடெரையும் இயக்கி கொண்டிருந்தன. அவன் மனம் மட்டும் அந்த காரின் சக்கரங்கள் போலவே சுழன்று கொண்டிருந்தது.

நண்பன் பரத்தை சந்திக்க சென்று கொண்டிருக்கிறான். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு பிறகான சந்திப்பு. எத்தனை ஆழமான நட்பு அவர்களுடையது. எப்போதும் இப்படியா இருக்கும் அவர்களது சந்திப்பு ? பரத்தை சந்திப்பது என்றாலே வசந்தின் மனதிற்குள் உற்சாகம் பொங்கி வழியுமே. இன்று என் இப்படி குழம்புகிறது ?

காரணம் இல்லாமல் இல்லை. தேடி வருகிறான் பரத். அந்த பொக்கிஷத்தை தேடி வருகிறான். ஐந்து வருடங்களுக்கு முன்னால் பரத் தனக்கு வேண்டாம் என்று தூக்கி எறிந்த பொக்கிஷம் அது. அவன் தூக்கி எறிந்த இரண்டாம் நாள் , வசந்த் அதை அப்படியே அள்ளிக்கொண்டு வந்துவிட்டிருந்தான். அது தன்னிடம் இருக்கிறது என்று அவனிடம் சொல்லியது கூட இல்லை.

நேற்றே செய்தி வந்தது . அந்த பொக்கிஷத்தை அள்ளிக்கொண்டு வந்த இடத்திலிருந்து "உன் நண்பன் அதை தேடி வருகிறான் " என்று செய்தி வந்தது.

பின்னாலேயே வந்தது டெல்லியிலிருந்து பரத்தின் அழைப்பு , "உன்கிட்டே கொஞ்சம் பேசணும்டா. நாளைக்கு சென்னை வரேன் "

"அந்தப்பொக்கிஷம் ஒரு பெண். அவள் ஒரு தேவதை. இதுவரை ஆண்டவன் அவனுக்கு கொடுத்திராத பொக்கிஷம் . அவள் அவன் வீட்டிற்கு வந்த பிறகு கிடைத்திருக்கும் மகிழ்ச்சி இணையில்லாதது . அதை எந்த நிலையிலும் வசந்த் இழப்பதாக இல்லை."

சில மாதங்களுக்கு முன் பரத் தன் காதல் மனைவியை விவாகரத்து செய்த செய்தி காதுகளை எட்டிய போதே பகீரென்றது வசந்துக்கு. அடுத்ததாக இங்கேதான் வருவான் என்று நினைத்தான். நினைத்தது நடந்தே விட்டது.

கார் ஏர்போர்ட்டை நெருங்கிக்கொண்டிருந்தது.

"இல்லை. வாய்ப்பில்லை. இழக்கவே முடியாத பொக்கிஷம் அவள்." பொய் சொல்லி விட வேண்டியதுதான் . அவள் என்னை விட்டு போய் விட்டாள் என்று பொய் சொல்லிவிட வேண்டியதுதான் "

காரை நிறுத்தி விட்டு இறங்கினான் வசந்த்.

" முடியுமா ? பரத்தின் கண்களை பார்த்து பொய் சொல்லிவிட முடியுமா ? தெரியவில்லை . ஆனால் " எப்படியும் சொல்லியே ஆகவேண்டும் " முடிவுடன் நடந்தான் வசந்த்.

வந்திறங்கிவிட்டிருந்தான் பரத் . வசந்தை தன் தோளோடு அணைத்துக்கொண்டான். இந்த ஐந்து ஆண்டுகளில் தீபாவளிக்கும் , பொங்கலுக்கும் வாழ்த்துக்கள் பரிமாறிக்கொண்டதை தவிர பெரிதாய் பேசியதில்லை இருவரும்.

வீட்டிற்கு அழைத்து செல்லாமல் நேரே ஹோடேலில் சென்று இறக்கிய வசந்த்தை ஆழமாய் பார்த்தான் பரத்

"இல்லைடா " என்றான் வசந்த். " வீட்டிலே நிறைய கெஸ்ட். உனக்கு இங்கே தான் freeya இருக்கும்"

குளித்து, சாப்பிட்டு முடிக்கும் வரை எதையும் துவக்கவில்லை பரத் . பரத்தின் லேப்டாப்பில் எதையோ தட்டிக்கொண்டிருந்தான் வசந்த் . அவன் அருகில் அமர்ந்தபடி " உன்கிட்டே கொஞ்சம் பேசணும்டா " என்றான் பரத் .

"சொல்லுடா கேட்டிட்டிருக்கேன் " திரையிலிருந்து பார்வையை அகற்றாமல் பதில் வந்தது

சில நொடி மௌனத்திற்கு பிறகு சட்டென சொன்னான் பரத் " என் சொத்தை எனக்கு திருப்பி கொடுத்திடுடா "

"எந்த சொத்துடா? புரியலை " வசந்தின் கண்கள் லேப்டாப்பின் திரையிலேயே இருந்தன

"விளையாடாதே வசந்த். நான் எதைப்பத்தி , யாரைப்பத்தி பேசறேன்னு உனக்கு நல்லா தெரியும்" பரத்தின் குரலில் உஷ்ணம் ஏற துவங்கியது.

பார்வையை நிமிர்த்தவில்லை வசந்த் " ஆமாம் தெரியும்" என்றான் நிதானமாக " அவங்க இப்போ உயிரோட இல்லைடா "

ஒரு நொடி திடுக்கிட்டு போனான் பரத். அடுத்த நொடி சட்டென சுதாரித்தான். " இல்லை. இருக்கவே முடியாது . பொய் சொல்கிறான் வசந்த். இவனால் என் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்க முடியவில்லை"

"டேய் பொய் சொல்லாதே. என்னை பார்த்து பதில் பேசு"

"எப்படி கேட்டாலும் , எப்படி சொன்னாலும் பதில் ஒண்ணுதான் . அவங்க இப்போ உயிரோட இல்லை" நிதானமாய் சொன்னான் வசந்த்

அடுத்த நொடி அவன் சட்டையை கொத்தாக பிடித்து விட்டிருந்தான் பரத். தன் கண்களுக்கு மிக அருகில் இருந்த பரத்தின் கண்களை நேராக பார்த்தான் வசந்த். வசந்தின் கண்களுக்குள் இருந்த தீவிரமும், கோபமும் பரத்தை உலுக்க அவன் பிடி தளர்ந்துவிட்டிருந்தது

மெல்ல விலகி ஜன்னலுக்கு அருகில் சென்று ரோட்டை வெறிக்க துவங்கினான் வசந்த். தன்னை நிதானப்படுத்திக்கொண்டு அவன் அருகே வந்து " ஸாரிடா........ " என்று பரத் துவங்க அவன் முகத்துக்கு நேரே கை நீட்டி நிறுத்தினான் வசந்த்

"அவங்களை உன்னோட அனுப்பறேன். ஆனால் ஒரு கண்டீஷன். அதுக்கு முன்னாடி நீ ரெண்டு மாசம் ஜெயில்ல இருந்திட்டு வரணும் சம்மதமா? வசந்த்தின் குரலில் கோபம் கொப்பளித்தது

"டேய் என்னடா பேசறே " என்றான் பரத்

" ஆமாம். நீ டெல்லி போறதுக்கு முன்னாடி அவங்களை ஒரு ஜெயில்ல தானே விட்டுட்டு போனே ? அதே வலியை நீயும் அனுபவிக்க வேண்டாமா?

பளார் என்று கன்னத்தில் அறை வாங்கியது போல் உணர்ந்தான் பரத். மெல்ல சுதாரித்து " இல்லைடா....." என்று பரத் துவங்க

"எனக்கு எந்த விளக்கமும் தேவையில்லை " இடைமறித்தான் வசந்த் "உனக்கு அவங்க சொத்து மாதிரி. தேவைன்னா வெச்சுக்கலாம், தேவையில்லைன்னா வித்துடலாம். அனால் எனக்கு அவங்க சுவாசம் மாதிரி. அவங்க இல்லாமல் நான் இல்லை .

உதடுகள் தாண்டி வார்த்தைகள் வரவில்லை பரத்துக்கு.

கண்களில் நீர் சேர சொன்னான் வசந்த் " எனக்கு அவங்க வேணும்டா. ப்ளீஸ்டா , என்கிட்டேயிருந்து அவங்களை பிரிச்சிடாதே. " அதற்கு மேல் பேச முடியாமல் ஜன்னலுக்கு வெளியே பார்வையை திருப்பி கொண்டான் வசந்த்

சாட்டையால் அடிபட்டவனாய் நின்றிருந்தான் பரத். அதற்கு மேல் ஒற்றை வார்த்தை பேச முடியவில்லை அவனால்.

மெல்ல நடந்து பாத்ரூமுக்குள் சென்று கதவை சாற்றிக்கொண்டான் பரத் . அங்கே சுவற்றில் சாய்ந்து கொண்டு அப்படியே குலுங்க துவங்கினான். "மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். காதல் கண்ணை மறைத்த நிமிடத்தில் பெற்றவளை முதியோர் இல்லத்தில் தவிக்க விட்டு சென்று விட்டேன். இன்று மனைவி இல்லை என்று ஆன பின்பு மறுபடி அம்மாவை' தேடி வந்திருக்கிறேன் . இது எந்த வகையில் நியாயம்? " உள்ளம் கரைந்து கொண்டிருந்தது.

"இடைப்பட்ட காலத்தில் என் தாயின் மடியில் வசந்த் இடம் பிடித்து விட்டான். அவனை அங்கிருந்து தள்ளி விடுவது எந்த வகையில் நியாயம்? அவன் சொன்னது போல் நான் அனுபவிக்க வேண்டும். தனிமையின் கொடுமையை, அம்மா இல்லாத வலியை நான் அனுபவிக்க வேண்டும் " கண்ணீர் வழிந்து ஓடியது.

எதுவுமே நடவாதது போல் மாலை வரை இருவரும் ஒன்றாகவே சுற்றி கொண்டிருந்தனர் அம்மாவை பற்றி மட்டும் பேசிக்கொள்ளவேயில்லை. கிளம்பும் நிமிடத்தில் தான் சொன்னான் பரத்

"உங்கம்மாவை பத்திரமா பார்த்துக்கோடா"

"எங்கம்மாவா? வியப்பாய் கேட்டான் வசந்த்.

"ஆமாம் இனிமே உங்கம்மாதான். அப்பப்ப phone பண்றேன் நல்லயிருக்காங்கன்னு மட்டும் சொல்லு. அது போதும் எனக்கு " என்றபடி கண்ணீருடன் கையசைத்துவிட்டு போகும் நண்பனை இமைக்காமல் பார்த்தபடியே நின்றிருந்தான் வசந்த்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.