(Reading time: 15 - 30 minutes)

காதல் - பாலா

காதல்

ந்தை மற்றும் தங்கையுடன் தன் சொந்த ஊருக்கு காரில் பயணித்துக் கொண்டிருந்தான் சுரேஷ். அவன் மனம் ஒரு நிலையில் இல்லை. முன் அமர்ந்திருந்த தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவரிடம் எந்த அசைவும் இல்லை. ஏதோ யோசனையிலே இருந்தார்.

இத்தனை வருடங்களாக அவர்கள் வருடா வருடம் தன் சொந்த ஊருக்கு சென்று கொண்டு தான் இருக்கிறார்கள். ஆனால் எப்போதும் இது போல் நிசப்தமாக இருந்ததில்லை. காரை ஓட்டிக் கொண்டே அவன் தந்தை சுபாஸ் தன் பிள்ளைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டே வருவார்.

அவன் தந்தை இருக்குமிடம் எப்போதுமே கலகலவென இருக்கும். ஆனால் இந்த இரு நாட்களாக அந்த சந்தோஷம் எல்லாம் எங்கோ சென்று மறைந்து விட்டது. எல்லாம் தன்னால் தானோ என்று சுரேஷ் வருத்தப் பட்டுக் கொண்டிருந்தான்.

எப்போதும் எங்கு சென்றாலும் பிள்ளைகளுக்கு பார்த்து பார்த்து எல்லாம் செய்வார். ஆனால் இன்றோ தங்கை ஸ்ருதி பசிக்கிறது என்றவுடன் தான் அவருக்கு நினைவே வந்தது. தான் அப்பாவை அந்த அளவுக்கா வருத்தப் பட வைத்து விட்டோம் என்ற எண்ணம் அவனை மிகவும் தாக்கியது.

ஆனால் நான் என்ன அவ்வளவு பெரிய தவறா செய்து விட்டேன் என்ற எண்ணமும் அவனுக்குள் இருந்து கொண்டு தான் இருந்தது. அவன் தந்தையின் மௌனம் தான் அவனை தவறு செய்து விட்டோமோ என்றும் எண்ண வைத்தது. அவனால் இது சரியா தவறா என்றே முடிவெடுக்க இயலவில்லை.

சுரேஷ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தான். எல்லோரையும் போல் அவனுக்கும் நண்பர்கள் இருந்தாலும், அவன் உலகம் என்னவோ அவன் குடும்பமாக தான் இருந்தது.

தாயை இழந்த அவனுக்கும் அவன் தங்கைக்கும் அவன் தந்தையே தாயாகவும் இருந்தார். அவர் தங்களை கவனித்து கொள்ளும் விதத்தாலே அவன் பொறுப்புள்ளவனாக வளர்ந்தான் எனலாம். தங்கையை கவனித்து கொள்வதிலும் சரி, படிப்பிலும் சரி எப்போதுமே அவன் பொறுப்பானவனாக தான் இருந்தான்.

இன்று வரை தந்தை சிறு விசயத்திற்கு கூட தன்னை கடிந்து கொண்டதில்லை. சுரேஷும் திட்டும் அளவுக்கு வைத்துக் கொண்டதில்லை. ஆனால் இன்று?

இன்றும் சுபாஸ் அவனை திட்டவில்லை. ஆனால் அவர் மௌனம் தான் அவனை மிகவும் தாக்கியது. தன்னிடம் மட்டும் பேசாமல் இருந்தாலாவது தந்தை தனக்கு கொடுக்கும் தண்டனை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவர் யாரிடமும் ஏதும் பேசவில்லை. அவர் தன்னையே வருத்திக் கொள்கிறாரே என்று தான் அவனுக்கு வருத்தமாக இருந்தது.

சுரேஷின் தாய் இருந்த வரை அவர்கள் ஊரில் தான் இருந்தார்கள். அவன் தாய் இறந்த கொஞ்ச நாட்களில் சுபாஸ் தனக்கு மாற்றல் வாங்கி கொண்டு சென்னைக்கு வந்து விட்டார். பிள்ளைகளின் படிப்பிற்கு அது தான் வசதி என்று அவர் சொல்லிக் கொண்டாலும், தாயையும், அவர்கள் அங்கு வாழ்ந்த வாழ்வையும் அவரால் மறக்க இயலாமல் தான் மாற்றல் வாங்கினார் என்று சுரேஷ் பின்பு தான் தெரிந்துக் கொண்டான்.

அது மட்டுமின்றி அங்குள்ள உறவினர்கள் எல்லோரும் சுபாஷை மறுபடியும் திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினார்கள். சுபாஷும் முடிந்த அளவுக்கு நாசூக்காக வேண்டாம் என்று சொல்லி பார்த்தான். ஆனால் அவனின் நெருங்கிய சொந்தங்கள் அவனை விடவில்லை. விடாமல் தொந்தரவு செய்தனர். அதன் பின்பே முடிவு செய்து அவன் சென்னைக்கு வந்து விட்டான்.

அவன் தாய் இறக்கும் போது சுரேஷிற்கு ஏழு வயது. அவன் தாயின் நியாபகங்களும், அவர் இருந்த போது தாங்கள் வாழ்ந்த சந்தோசமான வாழ்க்கையும் சுரேஷிற்கு நியாபகம் இருந்தது. அவர் இறந்த போது தந்தை அழுத அழுகையும், அந்த சில நாட்கள் தந்தை நடைபிணம் போல் இருந்ததும் இன்றளவும் அவனுக்கு நினைவிருக்கிறது. அந்த நாட்களில் தாயும் இல்லாமல், தந்தை இருந்தும் அவர் அவரின் நினைவே இல்லாமல் இருந்ததும், தங்கை அம்மா அம்மா என்று கதறியதும் அவன் கண்களிலேயே நிற்கின்றது.

ஆனால் எல்லாம் சில நாட்கள் தான். அப்பா அதிலிருந்து மீண்டு வந்தார். பிள்ளைகளை நன்றாக கவனித்துக் கொள்ள ஆரம்பித்தார். இன்றளவும் அது தொடர்கிறது. பிள்ளைகள் இருவருக்குமே தாயின் நினைவு எப்போதாவது தான் வரும். அந்த அளவுக்கு சுபாஷ் அவர்களை பார்த்துக் கொண்டார்.

பிள்ளைகள் இருவருமே அப்பா அப்பா என்று அப்பாவின் பைத்தியம். எல்லா பிள்ளைகளுக்கும் தனது அப்பா தான் முதல் ஹீரோவாக இருப்பார். ஆனால் அது காலப்போக்கில் மறைந்து விடும். ஆனால் இன்றும் சுரேஷிற்கும் ஸ்ருதிக்கும் சுபாஷ் தான் ஹீரோ.

எந்த வயதில் அம்மாவின் அரவணைப்பு தேவைப்படுமோ அந்த வயதில் அவர்களுக்கு தாய் இல்லாமல் போனார். ஆனால் சுபாஷ் அவர்களுக்கு தாயாக இருந்து அரவணைத்து, தந்தையாக வழிநடத்தி, தோழனாக தோள் கொடுப்பவர்.

ரம்ப காலத்தில் பிள்ளைகளை வளர்க்க கஷ்டப்பட்டவர் பின்பு அதில் தேர்ந்தவராகி விட்டார். முதலில் சமையல் தெரியாமல் சமைத்து பின்பு அதை சாப்பிட வாயில் வைத்து அவர் பட்ட அவதிகளை சிரித்துக் கொண்டே சொல்லி பிள்ளைகளையும் சிரிக்க வைப்பார். சுரேஷும் அப்போது சிரித்தாலும் தன் அப்பா எவ்வளவு கஷ்டப்பட்டுள்ளார் என்று எண்ணிக் கொள்வான்.

இன்று வரை அவரே சமைத்து பிள்ளைகளுக்கு கட்டிக் கொடுத்து தானும் எடுத்துக் கொண்டு ஆபிஸ் செல்கிறார்.

“ஏன்ப்பா கஷ்டப்படறீங்க. சமையலுக்கு ஆள் வச்சிக்கலாம்” என்று கூறினால், “நான் கஷ்டப்படறேன்னு யார் டா சொன்னா, நான் என் பிள்ளைகளுக்கு இஷ்டப்பட்டு செய்யறேன்” என்பார்.

அப்படிப்பட்ட அப்பா இப்போது இரண்டு நாட்களாக தன்னிடம் பேசாமல் இருப்பது அவனுக்கு மிக பெரிய வலியை கொடுத்தது.

அப்படி சுரேஷ் என்ன செய்தான்?

சுரேஷின் குடும்பம் இருப்பது ஒரு பெரிய அபார்ட்மெண்ட்டில். பிள்ளைகள் விளையாட ப்ளே கிரௌண்ட், ஜிம் இப்படி பல வசதிகளுடன் கூடிய அபார்ட்மெண்ட்.

அங்கு ஆறு மாதத்துக்கு முன்பு வந்தவள் தான் காவ்யா. எல்லா டீன் ஏஜ் பசங்களை போல் சுரேஷிற்கும் ஹார்மோன்கள் வேலை செய்து காவ்யாவின் மேல் காதல். முதல் இரண்டு மாதம் வெறும் பார்வை. பின்பு லேசாக பேச ஆரம்பித்து அது காதலில் முடிந்தது.

எல்லாம் நன்றாக தான் போய்க் கொண்டிருந்தது இரண்டு நாட்கள் முன்பு வரை. இரண்டு நாட்களுக்கு முன்பு நண்பனின் வீட்டிலிருந்து வந்துக் கொண்டிருந்த சுரேஷ் காவ்யாவை வழியில் பார்த்தான். பின்பு அவளை தன்னுடய பைக்கில் காபி ஷாப் அழைத்து சென்று விட்டு திரும்ப அழைத்து வந்தான். தங்களுடைய தெருவிற்கு முன் தெருவிலேயே அவளை விட்டு விட்டான்.

சுரேஷ் வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரம் கூட ஆகியிருக்காது. அதற்குள் கோபமாக வந்த காவ்யாவின் தந்தை வீட்டில் ரகளையே செய்து விட்டார்.

காவ்யாவின் தந்தை இருவரையும் வழியிலேயே பார்த்து விட்டார். கோபமாக வீட்டுக்கு வந்து மகளுக்காக காத்திருந்தார். ஆனால் சுரேஷ் முதலில் வந்து விட மகள் சிறிது நேரத்தில் நல்ல பெண் போல் தனியாக வரவும் அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டார். வீட்டிற்கு வந்த மகளை அதட்டி உருட்டி கேட்டதில் அவளும் உண்மையை கூறிவிட்டாள்.

எல்லா பெண்களையும் பெற்றவரை போல அவரும் சுரேஷின் வீட்டிற்கு வந்து தன் பெண் ரொம்ப நல்லவள். சுரேஷ் தான் அவளை ஏதோ மயக்கி இருக்கிறான், அப்படி, இப்படி என்று சண்டையிட்டார்.

இந்த எந்த பேச்சுக்கும் சுபாஷ் எதுவுமே கூறவில்லை. நல்ல வேலையாக அந்த நேரத்தில் சுபாஷின் நண்பர் வேலாயுதம் வீட்டில் இருக்க அவர் தான் ஏதோ பேசி காவ்யாவின் தந்தையை அனுப்பி வைத்தார்.

ஏதும் பேசாமல் இருந்த சுபாஷை பார்த்த வேலாயுதமே சுபாஷிடம் திரும்பி இதை எல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் எனவும், சுரேஷை பற்றியும் அவருக்கு தெரியும் என்பதால், நம் பையன் நல்லவன் எனவும் கூறினார். ஆனால் அவர் தான் பேசினாரே தவிர சுபாஷ் எதற்கும் எந்த பேச்சும் பேசவில்லை. அன்றிலிருந்து அவர் ஏதும் பேசவில்லை.

இந்த ஊருக்கு செல்வதும் ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. அதன்படி எல்லோரும் கிளம்பி இதோ ஊருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

ருவழியாக அவர்கள் ஊரிலிருந்த அவர்கள் வீட்டிற்கு செல்லும் போது மணி ஆறாகிவிட்டது. அவர்கள் வந்த விவரம் தெரிந்த சுபாஷின் அண்ணன்கள், தங்கை, சித்தப்பா என்று எல்லா உறவினர்களும் அவர்களை வந்து பார்த்தனர். அவர்களிடமும் சுபாஷ் அளவாக தான் பேசினான்.

“என்னடா அமைதியா இருக்க. நீ இப்படி இருக்க மாட்டியே, என்ன ஆச்சி” என்று சுபாஷின் பெரிய அண்ணன் கேட்க

“அதெல்லாம் ஒன்னும் இல்லை. ட்ராவல் பண்ணி வந்த டையர்ட். அவ்வளவு தான்” என்று கூறி சமாளித்தான் சுபாஷ்.

“நீயும் திரும்ப கல்யாணமே பண்ணிக்காம எப்படியோ உன் பிள்ளைகளை வளர்த்துட்ட” என்றார் சின்ன அண்ணன்.

“பிள்ளைகளை இவ்வளவு பெரிசா வச்சிட்டு என்ன பேச்சு இது” என்று கடிந்துக் கொண்டான் சுபாஷ்.

அவர்களுக்கு இரவு உணவும் அவர்களே எடுத்து வந்து கொடுத்து விட்டு எல்லோரும் பேசிக் கொண்டு இருந்து ஒரு வழியாக அவர்கள் கிளம்புவதற்கு ஒன்பது மணிக்கு மேல் ஆகியது.

பிள்ளைகளுக்கு படுக்கை சரி செய்து விட்டு ஹாலில் தன் மனைவியின் படத்திற்கு முன் அமர்ந்த சுபாஷின் மனம் சோர்ந்த நிலையில் இருந்தது.

மனைவியின் படத்தை பார்த்து “நான் என்ன தப்பு டா செஞ்சேன்” என்றுக் கேட்டுக் கொண்டார்.

ஏதோ பெரிய தோல்வியை தழுவிய நிலையில் இருந்தது அவரின் மனம்.

தினோரு வருசத்துக்கு முன்னாடி முப்பத்தி மூணு வயசுல பொண்டாட்டியை இழந்துட்டு நின்னப்ப வாழ்க்கையே சூனியமா தெரிந்தது. அதுல இருந்து வெளிய வரர்து பெரிய துன்பமா இருந்துச்சி. ஆனா கடல்ல தத்தளிச்சிட்டு இருந்தவனுக்கு ஏதோ ஒரு கட்டை கிடைக்கறது போல தன் பிள்ளைகள் அதிலிருந்து வருவதற்கு காரணமாக இருந்தார்கள்.

பிள்ளைகள் இருக்கிறார்களே, அவர்களை நன்றாக வளர்க்க வேண்டுமே என்ற எண்ணமே ஒரு டிரைவிங் போர்ஸாக இருந்தது. அதிலிருந்து வெளியே வந்துட்டேன்னு சொல்றதை விட பிள்ளைகளுக்காக அதை மறைத்து நடித்தேன் என்று தான் சொல்ல வேண்டும். இன்றளவும் நாள் முழுக்க எல்லோரிடமும் நன்றாக பேசினாலும், தூங்குவதற்கு கண்ணை மூடிய பின்பு மனைவியின் உருவம் தானே கண் முன்னே வருகிறது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.