(Reading time: 19 - 38 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

இப்படிப் பொருள்களை வாங்கிக் கொள்வதில் அம்மாவுக்கு எப்போதும் மகிழ்ச்சி உண்டு. அப்பா வாரத்துக்கு ஒரு முறை இருபது முப்பது ரூபாய் கொண்டுவந்து கொடுப்பார். அந்த நோட்டுகள் அம்மாவின் மனத்துக்குப் பெரிய பொருளாகத் தோன்றுவதில்லை. தம்முடைய தம்பி மாதத்துக்கு ஒருமுறை இரண்டு மூன்று ரூபாய்க்குப் பழங்கள் முதலியன வாங்கிக்கொண்டு வந்து பொருள்களாகக் கொடுப்பார். அவைகளே அம்மாவுக்குப் பெருமையாக இருக்கும். பெண்களுக்கு பொதுவாக உள்ள இந்தப் பண்பைச் சந்திரனுடைய அத்தை எப்படியோ தெரிந்து கொண்டு அன்று முதல்முறையாக வந்தபோதே கை நிறையப் பொருள் கொண்டுவந்தார். அந்த அத்தையும் ஒரு பெண் அல்லவா? பெண்ணின் மனம் நன்றாகத் தெரிந்திருக்கும். தவிர, அவர்கள் குடும்பத்திலேயே கற்ற குடும்பக்கல்வி அது.

  

பிற்காலத்திலும் அம்மாவிடம் இந்தப் பண்பைக் கவனித்திருக்கிறேன். எனக்கு ஓயாத வேலை; அதனால் சென்னையில் கடைக்குப் போய்ப் பொருள்களை வாங்கிச் சுமந்து கொண்டு ஊர்க்குப் போவதற்கு வாய்ப்பும் இல்லை. அது துன்பமாகவும் இருக்கும். அதனால் ஊர்க்குப் போகும் போதெல்லாம் அம்மாவிடம் பத்து இருபது என்று ரூபாய் நோட்டுகளைக் கொடுத்துவிட்டு இரண்டொரு நாள் இருந்து விட்டுச் சென்னைக்குத் திரும்புவேன். ஆனால் என் தம்பி பொய்யாமொழி அம்மாவின் மனத்தை மகிழ்விக்கும் முறையில் நடந்து கொள்வான். கடைகடையாகத் திரிந்து அம்மாவுக்கு விருப்பமான பொருள்களை வாங்கி இரண்டு மூன்று பைகள் நிறைய எடுத்துக் கொண்டு போய்க்கொடுத்துவிட்டு வருவான். அந்தப் பொருள்களின் மதிப்பு எல்லாம் சேர்ந்து ஐந்து ஆறு ரூபாய் இருக்கும். அவன் செய்வதுதான் அம்மாவுக்கு மிக விருப்பமாக இருக்கும். இப்படி ஐந்து அல்லது ஆறு ரூபாய்க்குப் பொருள்களைக் கொண்டு போய்க் கொடுத்து விட்டு, ஊரிலிருந்து வரும் போது அம்மாவிடமிருந்து பத்துப் பதினைந்து ரூபாய் கேட்டு வாங்கிக் கொண்டு வந்துவிடுவான். ஆனாலும் அவன்தான் அம்மாவுக்கு அன்பான பிள்ளையாக இருந்தான். இந்த உண்மை தெரிந்திருந்தும் ஓய்வு இல்லாத காரணத்தால் என்னால் அப்படி நடக்கவும் நடிக்கவும் முடியவில்லை.

  

சந்திரனுடைய அத்தை நடிக்கவில்லை; ஏமாற்றவில்லை பெண்களின் உறவு நீடிப்பதற்கு அது ஒரு வழி என்று கடமையாகவே கொண்டார். உண்மையாகவே அம்மாவுக்கும் அந்த அத்தைக்கும் உறவு வளர்ந்து நிலைபெற்றது. எந்த அளவிற்கு உறவு வளர்ந்தது என்றால், சந்திரனுடைய அத்தையை என் தாய் முதலில் அம்மா என்று பொதுவாக அழைத்தாலும், போகப்போகத் தன் தாயை அழைப்பது போலவே அன்புடன் அழைத்துப் பழகிவிட்டார்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.