(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

இடத்திற்குச் சென்று, "மிகவும் நன்றி! எவ்வளவு நேரம் இருந்தீர்கள்" என்றான். அவர்களுள் ஒருத்தி "மிக மிக நன்றாக இருந்தது உங்கள் நடிப்பு; பெரிய வெற்றி. எங்களுடைய பாராட்டுக்கள். அடுத்த வாரத்தில் எங்கள் நாடகத்திற்கு நீங்கள் தவறாமல் வரவேண்டும்" என்றாள். மற்றப்பெண்களின் முகத்திலும் புன்முறுவல் இருந்தது. அவர்கள் புறப்பட்டார்கள். சந்திரனும் அவர்களைப் பின்தொடர்ந்து சென்றான்.

  

"இன்னும் இருக்கவேண்டுமா?" என்று மாலன் கேட்டான்.

  

"சரி, போகலாம்" என்று ஒரு பெருமூச்சு விட்டு நகர்ந்தேன்.

  

"இதுதான் காதல்" என்றான் மாலன்.

  

என் மனம் அதை வேடிக்கையாகக் கொள்ளவில்லை. பெருங்காஞ்சி சாமண்ணா சொன்ன சொல் நினைவுக்கு வந்தது. நம் சந்திரனா இப்படி ஆனான்? என்னைப் பார்த்தும் பேசாமல் அந்தப் பெண்களின் பின் ஓடினானே என்று எண்ணிக் கொண்டே வந்தேன்.

  

உணவுக் கூடத்திற்குச் சென்று உண்ட பிறகு சந்திரனுடைய அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தேன். சந்திரன் இருந்தான். பலர் அவனைச் சூழ்ந்து நின்று பாராட்டிக்கொண்டும் சிரித்து ஆரவாரம் செய்துகொண்டும் இருந்தார்கள். நானும் அவர்களோடு சேர்ந்து அவனெதிரில் நின்று புன்முறுவலால் பாராட்டிவிட்டுத் திரும்பினேன்.

  

நாடகம் முடிந்த பிறகு நாள்தோறும் சந்திரன் இரவில் உட்கார்ந்து படிக்கத் தொடங்கினான். ஆனால் அவனுடைய அறையில் யாரேனும் போய்ப் பேசிக்கொண்டிருந்ததையே பெரும்பாலும் கண்டேன். பகலில் சந்திரனை அவனுடைய அறையில் காண்பது அரிதாயிற்று. மாலையில் நானும் மாலனும் எறிபந்து, உதைபந்து முதலிய ஆட்டங்களில் ஈடுபட்டோம். சந்திரன் அங்கும் வருவதில்லை. இடையிடையே காண நேர்ந்தபோது, என்றேனும் ஒருநாள், "என்ன செய்தி? நன்றாகப் படிக்கிறாயா?" என்று கேட்பான். நானும், "உன் படிப்பு எப்படி இருக்கிறது?" என்று கேட்பேன். அந்த அளவில் எங்கள் உறவு நின்றது. நானாக வலிய அவனுடைய அறைக்குச் சென்றாலும் என்ன பேசுவது என்று தெரியாமல் சும்மா இருந்துவிட்டு வந்தேன். ஏதாவது தொடங்கிப் பேசினாலும், பேச்சில் அவன் அவ்வளவாக ஈடுபடாமல், புறக்கணித்தாற்போல் இருந்தான். இவ்வாறு எங்கள் உள்ளங்களுக்கு இடையே ஏதோ ஒரு திரை இருந்து வந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.