(Reading time: 28 - 56 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

உத்தமருக்காக - தலைவர்க்காக - நாம் வருத்தம் தெரிவிக்கக் கூடியிருக்கிறோமோ, அவருடைய கொள்கைகளை உணராமல் வீண் ஆரவாரம் செய்கிறோம். ஆசிரியர்களையும் சில மாணவர்களையும் எள்ளி நகையாடுகிறோம். ஏதோ மகிழ்ச்சிக் கொண்டாட்டம் போல் முகம் மலர்ந்து முழங்குகிறோம். வெள்ளைக்காரர் அழியவேண்டும் என்று காந்தியடிகள் விரும்பவில்லை. ஆனால் நம்முடைய ஆசிரியர்களும் நம்முடன் படிக்கும் மாணவர்களும் அழியவேண்டும் என்று ஆரவாரம் செய்கிறோம். இந்த ஒரு நாளாவது அவருடைய தூய கொள்கைகளை உணர்ந்து, அமைதியாக இருந்து நம்முடைய வருத்தத்தைத் தெரிவிக்கும் படியாகக் கேட்டுக்கொள்கிறேன்" என்றான்.

  

சிறிது நேரம் அமைதி நிலவியது. பிறகு மற்றொரு மாணவன் தன் கைகளை உயர்த்தி, "காந்தியடிகள் வாழ்க" என்று சிலமுறை முழங்கியபிறகு, வீரமாகப் பேசினான். முடிவில், "இந்தக் கூட்டம் இப்படியே கடற்கரை வரைக்கும் ஊர்வலமாகச் செல்லவேண்டும்" என்று வற்புறுத்திக் கூறினான். "ஆமாம்", "இப்பொழுதே புறப்படுவோம்" "தயார் தயார்" என்று பல குரல்கள் எழுந்தன.

  

கூட்டம் கல்லூரி எல்லையைக் கடந்து வெளியே செல்லப் புறப்பட்டது. சில மாணவர்கள் அதில் கலந்து கொள்ளாமல் விடுதியை நோக்கி வந்தனர். முதலில் பேசிய அந்த உயரமான மாணவரும் ஊர்வலத்தில் கலந்து கொள்ளாமல், வாடிய முகத்துடன் விடுதியை நோக்கி நடந்தார். மாலன் என்னைப் பார்த்து, "இதோ பார்த்தாயா? காந்தி பக்தர் போல் பேசினார். ஊர்வலத்தில் கலந்துகொள்ளாமல் விடுதிக்குப் போகிறார் இப்படித்தான் எல்லாம்" என்றான்.

  

"அதில் தவறு என்ன? அவர் ஊர்வலம் போகவேண்டும் என்று சொன்னாரா? பிறகு அதன்படி நடக்கவில்லையா? அவருக்கு ஊர்வலம் விருப்பம் இல்லை. அதனால் கலந்து கொள்ளவில்லை" என்றேன்.

  

"நீ ஊர்வலத்தில் கலந்துகொள்ளப் போகிறாயா, இல்லையா?"

  

"இல்லை?"

  

"அப்படியா? நான் கலந்துகொள்ளலாம் என்று எண்ணினேன்."

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.