(Reading time: 25 - 50 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

"உண்டு."

  

"நானும் சந்திரனும் அப்படி அடிக்கடி சண்டையிட்டிருக்கிறோம். இங்கே வீட்டில், கடற்கரையில் அம்மா அப்பா எதிரில்."

  

"கல்லூரியில் எங்கள் விடுதியில் மாணவர்கள் சிலர் உங்கள் இருவரையும் காதலர் என்று எண்ணியிருக்கிறார்கள் தெரியுமா?"

  

"இருக்கலாம். உடன் பிறந்த அண்ணனும் தங்கையும் புதிய ஊரில் ஒரு தெரு வழியாக போனால், அந்த ஊரார் பலர் அவர்களைக் காதலர் என்றுதான் எண்ணுவார்கள். அது உலக இயற்கை! மனிதரின் மனத்தில் பொதுவாக உள்ள காம இச்சை அப்படி எல்லாரையும் பார்த்துச் சொல்லச் செய்கிறது!"

  

அவளுடைய அறிவின் திட்பத்தைக் கண்டு வியந்தேன். இன்னொன்றும் கேட்கவேண்டும் என்று தோன்றியது; கேட்டேன். "இந்த அனுபவத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் தங்கைக்கு என்ன வழி சொல்வீர்கள்" என்றேன்.

  

"எதைப்பற்றி?"

  

"ஆண்களோடு பழகுவதில்!"

  

"அம்மா எனக்குச் சொன்னதையே சொல்வேன்."

  

"அதனால் குறை ஏற்படுகிறதே; இப்படி ஒரு வாழ்வு பாழாகிறதே."

  

இதைச் சொன்னவுடன், அவளுடைய திட்பமும் தெளிவும் பறந்து போயின. "அதை நினைக்கும்போதுதான் எனக்குத் துயரமாக இருக்கிறது. நான் குற்றவாளி அல்ல என்பதை உங்களிடம் சொல்லி, என் மன வேதனையைத் தீர்த்துக்கொண்டேன். ஆனால் என் அன்புக்குரிய சந்திரனுடைய வாழ்வு கெடுவதை நினைத்தபோது எனக்குத் துயரமாக இருக்கிறது" என்று வருந்தினாள். அவளுடைய முகம் வாடியது. ஒரு பெருமூச்சு விட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.