(Reading time: 15 - 29 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

குடும்பத்துக்கும் நல்லது. வீட்டுக்கு எழுது. உன் நிலையில் நான் இருந்தால், முடி வேண்டா என்று துணிந்த இளங்கோவடிகள் போல், எனக்கு இப்போது திருமணம் வேண்டா என்று பிடிவாதம் செய்வேன். சந்திரன் வழி தெரியாமல் இருளில் இடறி விழுகிறான்; நீயோ பட்டப்பகலில் நேர்வழி தெரிந்தும் ஆசை மிகுதியால் குறுக்கு வழியில் நடக்கிறாய்" என்றேன்.

  

அறைக்குள் நுழைந்தபோது அவன் முகத்தில் இருந்த மகிழ்ச்சி, போகும் போது இல்லை. அவன் வருந்தினாலும் உண்மையைச் சொன்னதே நல்லது என எண்ணினேன்.

  

மறுநாள் பெருங்காஞ்சியிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. சந்திரன்தான் எழுதினானோ என்று பார்த்தால், அவனுடைய கையெழுத்தே இல்லை. அவனுடைய தந்தையார் சாமண்ணா எழுதியிருந்தார். பிள்ளை வீட்டார் வந்து கற்பகத்தைக் கேட்பதாகவும், பிள்ளை எங்கள் கல்லூரியில் படிப்பதால் குணம் முதலியவை அறிந்து தெரிவிக்கும் படியாகவும் எழுதியிருந்தார். என் மனம் திகைப்பு அடைந்தது, அடுத்த வரியில் பிள்ளை பி.ஏ. படிப்பதாகவும் பெயர் மாலன் என்பதாகவும் குறித்திருந்ததைப் படித்தவுடன் என் அறிவும் மனமும் நிலைகொள்ளாமல் புரண்டன. நான் கனவிலும் கருதாத தீமை நெருங்கிவிட்டது போலவும் யாரோ மறைந்திருந்து என்னை வதைப்பது போலவும் உணர்ந்தேன். மாலன்மேல் எனக்கு வெறுப்புத் தோன்றியது. அடுத்த விநாடியில் கற்பகத்தின் மேல் சினம் எழுந்தது. சந்திரனை நன்றி கெட்டவன் என்று நொந்தேன். வெறுப்பும் சினமும் மாறித் துயரமும் கண்ணீரும் ஆயின. அறைக்குள் இருக்கவும் மனம் கொள்ளவில்லை. அறையை விட்டு வெளியே செல்லவும் முடியவில்லை மனம் படாதபாடுபட்டது. கடிதத்தைக் கிழித்து எறியலாம் என்று எடுத்தேன். கொஞ்சம் பொறுமையுடன் முற்றிலும் படித்து முடிக்க முயன்றேன். "திருமணத்தைப் பற்றி இப்போது எண்ணியிருக்கமாட்டேன். ஆனால், என்ன செய்வது? என் அக்கா - சந்திரனுடைய அத்தையும் எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். உலகத்தில் நான் தனியாக நிற்கிறேன். என் ஆவியும் எந்த நிமிசத்தில் பிரியுமோ அறியேன். சந்திரனுடைய போக்கும் செயலும் எனக்கு வாழ்க்கையில் வெறுப்பையே உண்டாக்கிவிட்டன. ஆகவே, நானும் கண்ணை மூடிக் கொள்வதற்கு முன்னே அந்த ஒரு பெண்ணுக்குச் செய்ய வேண்டியதைச் செய்து விட்டால், சிவனே என்று மூச்சை விட்டு விடுவேன்" என்று கடைசிப் பகுதியைப் படித்ததும் மனம் கலங்கினேன். நல்ல பண்பும் உண்மை அன்பும் உடைய அந்த அத்தையின் வாழ்வும் முடிந்து விட்டதா என்று வருந்தினேன்.

  

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.