(Reading time: 47 - 94 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

இரண்டு பேர்க்குச் சாப்பாடு கொண்டு வா. இனிமேல் நான் மறுபடியும் சொல்லும் வரையில், எது கொண்டு வந்தாலும் இரண்டு பேர்க்கு என்று நினைவு வைத்துக்கொள்" என்றேன். உடனே, அன்று மாலையில் பச்சைமலையாரின் வீட்டுக்கு வருவதாகச் சொல்லி விட்டு வந்தது நினைவுக்கு வந்தது. "அப்படியே பச்சை மலையாரின் வீட்டுக்குப் போய் அய்யா இன்று வரமாட்டாராம் என்று சொல்லி விடு" என்றேன்.

  

வேலையாள் சென்ற பிறகு தோட்டத்திற்குத் திரும்பி வந்து பார்த்தேன். உறங்கிக் கொண்டிருந்த சந்திரனுடைய முகம், நாற்பது ஐம்பது வயதுள்ள ஒருவனுடைய முகம்போல் இருந்தது. இளமையின் சாயலே இல்லாமல் அந்த முகத்தை நோய் மூடியிருந்தது. கால் விரல்களையும் கை விரல்களையும் நன்றாகப் பார்த்தேன். என் உள்ளத்தில் முன் இருந்த அருவருப்புச் சிறிதும் இல்லாமல் மறைந்து, இரக்கம் மட்டுமே நின்றது. பார்த்துப் பார்த்து வருந்தினேன்.

  

தொடக்கப் பள்ளியில் நான் படித்திருந்தபோது எனக்கு ஆசிரியராக இருந்தவர் ஒருவர் எப்படியோ தொழு நோய்க்கு ஆளானார். தொழு நோய் அவருடைய முகத்திலும் கை கால்களிலும் உருவெடுத்தபோது நான் உயர்நிலைப் பள்ளிக்கு வந்துவிட்டேன். அப்போது அவர் எதிரே வரப்பார்த்ததும் நான் பேசாமல் ஒதுங்கிவிடுவேன். அவருடைய கண்ணுக்குப் படாத படி சிறு சந்துகளின் வழியாகத் திரும்பிச் சென்று விடுவேன். வழக்கமாகத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களிடம் அன்பும் பணிவும் உடையவனாய் நடந்த நான் அந்த ஓர் ஆசிரியரிடம் மட்டும் அவ்வாறு நடக்க முடியாமற் போயிற்று. அவரே ஒருநாள் வீட்டுக்கு வந்து, "வேலு" என்று கூப்பிட்டார். வந்து பார்த்தபோது அவர் திண்ணையில் உட்கார்ந்திருப்பதைக் கண்டு தொலைவில் இருந்தபடியே பேசிவிட்டுப் போய்விட்டேன். அவர் உட்கார்ந்திருந்த திண்ணைமேல் மூன்று வாளித் தண்ணீர் கொட்டிக் கழுவச் செய்தேன். அதன் பிறகும் அந்தத் திண்ணை மேல் உட்காராமலே இருந்தேன். அவ்வாறு அளவுக்குமேல் பயந்திருந்த நான் இப்போது சந்திரனோடு நெருங்கிப் பழகுவதோடு அவனை வீட்டிலேயே வைத்துப் போற்றும் படியாகவும் நேர்ந்ததை எண்ணினேன்.

  

திரும்பி வந்து என் அறையில் உட்கார்ந்தபடி என்னென்னவோ எண்ணிக் கொண்டிருந்தபோது அவன் இருமும் ஒலி கேட்டது. எட்டிப் பார்த்தேன். அவன் அசைவதைக் கண்டு, காப்பி எடுத்துச் சென்றேன். முதுகைச் சொரிந்து கொண்டிருந்த அவன் என்னை நிமிர்ந்து பார்த்து, "என்னால் உனக்குப் பெரிய துன்பம்" என்றான்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.