நான் பேசாமல் நின்றேன். "தெரியுமா வேலு!" என்று என் முகத்தை பார்த்தான்.
"தெரியும்" என்றேன்.
"உனக்கு மட்டுமா? அம்மாவுக்கும் தெரியுமா?"
நான் பேசவில்லை.
"சொல்லு வேலு! இப்போது சொன்னால் என்ன, சொல்லு வேலு! அம்மா அப்பா எல்லார்க்கும் தெரியுமா?" என்று விடாமல் கேட்டான்.
"தெரியும்" என்றேன்.
"தெரியுமா!" என்று முதலில் மெல்லத் தலையை ஆட்டினான். பிறகு எங்கிருந்தோ உணர்ச்சி மேலிட்டு வந்து அவனை ஆட்டி வைத்தது. "அய்யோ! அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! நான் பொண்டாட்டியைக் கொன்றுவிட்டேன் என்று அம்மாவுக்கும் தெரிந்து போச்சா! என்னைப் பற்றி என்ன எண்ணினார்களோ, என்ன எண்ணினார்களோ? அய்யோ! அய்யோ!" என்று உடம்பெல்லாம் நடுங்கிக் கதறினான்.
சந்திரன் இப்படி உணர்ச்சி வசப்பட்டுக் கலங்கியதையும் கதறியதையும் என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. "பழைய கதையை எல்லாம் நினைத்து ஏன் மனத்தைப் புண்ணாக்கிக் கொள்கிறாய்? வேண்டா. சும்மா இரு" என்று அப்பால் நகர்ந்தேன்.
"பழைய கதையா? நான் நினைக்கிறேனா? அது போக’லையே! மனத்தை விட்டுப் போக’லையே! நான் என்ன செய்வது?" என்று இருமத் தொடங்கினான்.
இரவு எட்டு மணிக்கு வேலைக்காரன் உணவு கொண்டு வந்ததும்; ஒரு பகுதி உணவைத் தனியே எடுத்து வைத்து விட்டு, மற்றொரு பகுதியை அந்த உணவுத் தூக்கிலேயே வைத்திருக்கச் சொன்னேன். வேலைக்காரனை விட்டுச் சந்திரனுக்கு உணவு இடச் சொல்லலாம் என்றால் அவனுடைய நொந்த மனம் என்ன நினைத்து வருந்துமோ என்று