எண்ணினேன். நான் முன்னே சாப்பிட்டுவிட்டுப் பிறகு அவனுக்குப் போடலாம் என்றால், அதற்கும் மனம் வரவில்லை. வேலைக்காரனை அனுப்பிவிட்டேன். நானே உணவை எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்றேன். சந்திரன் கண்களைத் துடைத்துக் கொண்டிருந்தான், "ஏன் அழுகிறாய்?" என்று கேட்டேன்.
"வேலு! அம்மாவை நினைத்துக் கொண்டேன்'பா. எவ்வளவு அன்பான மனம் அப்பா! மறுபடியும் எப்போடா பார்க்கப் போகிறேன்? நீலகிரியிலிருந்து நான் வந்த பிறகாவது அம்மா செத்திருக்கக் கூடாதா? அம்மா இருந்திருந்தால் இவ்வளவு கெட்டுப் போயிருக்க மாட்டேன் அப்பா! ஒவ்வொன்றும் நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை அப்பா வேலு!" என்று மறுபடியும் கண்ணீர் விட்டு அழுதான். நான் ஆறுதல் சொன்னேன். "உன்னால் ஆறுதல் பெறலாம் என்றுதான் வந்தேன்’பா. ஆனால் இங்கே வந்த பிறகுதான் என் மனத்தில் மறைந்து போயிருந்த பழைய நினைவுகள் எல்லாம் புறப்பட்டு வருகின்றன. நான் என்ன செய்வேன் வேலு? என்னால் தாங்க முடியலையே! உடம்பின் எரிச்சல் தினவு பாதை எல்லாம் அடங்கிப் போயிருக்கிறாற் போல் தெரிகிறது. என் மனத்தில்தான் இப்போது எல்லாத் துன்பமும் சேர்ந்துவிட்டது. தாங்க முடியவில்லையே" என்று பொருமினான்.
சாப்பிடச் சொன்னேன். ஒரு சொல்லும் சொல்லாமல் சாப்பிட்டு முடித்தான். நான் இலை எடுத்துப்போட முயன்றபோது, "வேலு! உனக்கு இந்த வேலையும் வைக்கணுமா! இந்த ஒன்று மட்டும் நான் செய்கிறேன்’பா" என்று தானே இலையைச் சுருட்டி ஒரு மூலையில் எறிந்தான். கைகழுவ நீர் விட்டேன். கையைத் துடைத்துக் கொண்டு உட்கார்ந்ததும், "அப்பா, வேலு! அம்மாவுக்குப் பிறகு என் மனைவி அன்பாகத்தான் சோறு போட்டாள். நான் சாப்பிட்டு முடிகிற வரைக்கும் என் எதிரில் நின்றது நின்றபடி இருப்பாள். ஒரு நாளாவது உட்காரு என்று நான் சொன்னதே இல்லை. அன்பாகத்தான் சோறு போட்டாள். ஆனால் நான் அன்பு காட்டவில்லை. அடக்குமுறைதான். பயந்து நடுங்கினாள். நான் கொஞ்சம் அன்பு காட்டியிருந்தேனோ, அம்மாவுக்கு மேல் இருந்திருப்பாள், கொடுமை செய்துவிட்டேன். கொஞ்சம் அன்பு காட்டியிருந்தால், இப்போது எவ்வளவோ உதவியாக இருந்திருப்பாள், எனக்காக உயிரையும் கொடுத்திருப்பாள். ஆமாம் எனக்காகத்தான் உயிரையும் கொடுத்தாள்" என்று மெல்லச் சொல்லி அடங்கினான்.
இன்னும் இருந்தால் ஏதாவது பேசிக்கொண்டு வருந்துவான் என்று, "சாப்பிடப் போகிறேன்" என்று சொல்லி நகர்ந்தேன். அவன் நான் சொன்னதைக் கவனிக்கவில்லை. ஏதோ சிந்தையில்