பயத்தைத்தான் பெற்றேன்."
அவன் முதலில் அன்பைத் தராமல் அதிகாரத்தைக் காட்டியிருப்பான். அதுதான் காரணம் என்று எண்ணிக் கொண்டேன்.
"ஊரில் கண்ட பெண்களோடு பழகினேன். அவர்கள் பயந்து பயந்து வந்தார்கள். அது ஒரு வாழ்வா! சே! ஊர்ச்சோற்றைத் திருடி உண்பது ஒரு வாழ்வா? நம் உரிமையான உணவு ஆகுமா? இப்படி என்னைப்போல் எத்தனை பிள்ளைகள் கெடுகிறார்களோ என்று எண்ணும்போது வருத்தமாக இருக்கிறது. அதனால்தான் பெண்ணன்பு பெறும் வரையில் பெண்ணழகு கண்ணுக்குத் தோன்றாமலே இருந்தால் நல்லது என்று கருதுகிறேன்" என்றான்.
மறுபடியும் அவனே பேசத் தொடங்கினான் "அல்லது, ஐரோப்பியர்களைப் போல் அமெரிக்கர்களைப்போல் நம்மவர்களும் வாழ்க்கையை மாற்றி அமைக்க வேண்டும். ஆண்களையும் பெண்களையும் இளமையில் பழகவொட்டாமல் பூச்சி பூச்சி என்று பயபடுத்திப் பிரிப்பதை விட்டுவிட வேண்டும். அழகுப் பசி இயற்கையாக இருக்கிறது. அப்படி இளமையில் கலந்து பழக நிறைய வாய்ப்புகள் இருப்பதால் ஐரோப்பிய இளைஞர்கள் அழகைக் கண்டு கண்டு மகிழ்ச்சி அடைகிறார்கள். இங்கே இயற்கையான பசியை அடக்க வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமா நாடகங்களில் அழகும் அலங்காரமும் இருப்பதால், அந்தப் பசி மறைமுகமாகத் தூண்டிவிடப்படுகிறது. சமுதாயத்திலோ பார்த்துப் பேசியும் பழகுவதற்கும் வாய்ப்பு இல்லை. இயற்கையான உணர்ச்சிகளை அடக்குவதில் சிலர் மட்டுமே வெற்றி பெறுகிறார்கள். பலர் கெட்டுப்போகிறார்கள்" என்றான்.
"ஆண்கள் அழகாக இல்லையா? அழகான ஆண்களோடு பழகி அந்த அழகுப்பசியைத் தீர்த்துக் கொள்ளக் கூடாதா?" என்றேன். வேண்டும் என்றே கேட்டேன்.
"நீ பெரிய பைத்தியக்காரன்! இயற்கை அப்படிப் படைத்திருக்கிறது. ஆணின் கண்ணுக்குப் பெண்கள் தான் அழகாக இருப்பார்கள். தெருவில் ஏழெட்டுப்பேர் ஆண்களும் பெண்களும் போவதைப் பார்க்கிறாய். யாரை நன்றாகப் பார்ப்பாய்? பெண்களே போகாவிட்டால் ஆண்களைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். அப்போது ஆண்களின் அழகு உன் கண்ணுக்குப் புலப்படாது. அப்படியே தான் பெண்களுக்கும், இயற்கை ஏற்படுத்திய கவர்ச்சி அது. நாய்க்கு இறைச்சியைப் பார்த்தால்தான் வாயில் நீர் ஊறும். பசுவுக்குப் புல்லைப் பார்த்தால்தான் வாய் ஊறும்.