இல்லையே" என்றான். காப்பி குடித்த பிறகு இன்னும் தெளிவாகப் பேசினாள். உடம்பின் காய்ச்சல் போலவே, உள்ளத்தின் உணர்ச்சி வேகமும் காலையில் அடங்கியிருந்தது. பகலெல்லாம் மெல்ல மெல்ல வளர்ந்து, மாலையில் மலர்ந்து விடுகிறதே என்று எண்ணினேன். அன்று காலையில் தான் அவன் என் குடும்ப வாழ்க்கையைப் பற்றி மிக்க அக்கறையோடு கேட்டான். அப்போது அவன் காட்டிய அன்பால் என் மனம் உருகியது.
"இல்வாழ்க்கை எப்படி நடக்கிறது? மனைவியும் நீயும் மனம் ஒத்துப் போகிறீர்களா? அன்பாக இருக்கிறீர்களா?" என்று கேட்டான்.
"ஒன்றும் குறைவு இல்லை. ஆனால் விட்டுக் கொடுத்துப் போகத் தெரியாதவள். உண்மையானவள்; அன்பானவள்" என்றேன்.
"உண்மையும் அன்பும் இருந்தால் போதுமே. நீதான் விட்டுக் கொடுத்துப்போ. அதனால் ஒரு கெடுதியும் இல்லை. என்னைப்போல் தலைக்கொழுப்போடு நடக்காதே."
"நான் விட்டுக்கொடுத்துக் கொண்டுதான் போகிறேன். ஆனால்?"
"என்ன குறை? சொல் வேலு! இங்கு இல்லாதபோது பேசினால் என்ன?"
"ஒன்றும் இல்லை. கொஞ்சம் செருக்கு உண்டு."
"என்ன செருக்கு? பணச் செருக்கா? படிப்புச் செருக்கா அழகுச் செருக்கா?"
"அந்தச் செருக்கு ஒன்றும் இல்லை. அவற்றிற்கு இடமும் இல்லை."
"வேறு என்ன? சிலருக்கு ஒழுக்கச் செருக்கு இருக்கலாம்."
"ஆமாம் அதுதான். மிகப் படித்த பெண்களையும் மதிக்க மாட்டாள். அவர்கள் ஒழுங்கானவர்களா என்று கேட்பாள்."
"அந்தச் செருக்கு இருந்து போகட்டுமே. அதனால் ஒரு கெடுதியும் இல்லை, நல்லதாச்சு. என்