ஏற்படும். குடும்ப வாழ்க்கைக்கு வேண்டிய ஊதியம் வந்தால் போதும் என்று வியாபாரம் செய்கிறவர்கள் அவ்வளவாகக் கெடுவதில்லை. அளவுக்கு மேல் ஒன்றுக்குப் பத்தாக எதிர்பார்த்து வியாபாரம் செய்கிறவர்கள் சிலர் கடைசியில் அடியோடு அழிந்து மண்ணோடு மண்ணாய் போகிறார்கள். சரி, சரி, பட்டுக் கெட்டு நான் கற்றுக் கொண்ட பாடங்களை உனக்கு ஏன் சொல்ல வேண்டும். நீதான் ஒழுங்காக வாழ்க்கை நடத்துகிறாயே. உன்னுடைய வாழ்க்கையைப் பார்த்து மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நான் தான் கற்றுக் கொள்ளத் தவறிவிட்டேன்" என்றான்.
சிறிது பொறுத்து மறுபடியும் அதே போக்கில் பேசலானான். "நீ மண் அகலாக இருந்த காலத்தில் நான் பித்தளை அகலாக இருந்தேன். சிறிது காலம் பள பள என்று மின்னினேன். என் அழகையும் அறிவையும் அப்போது எல்லோரும் விரும்பினார்கள்; பாராட்டினார்கள். என்ன பயன்? வர வர, எண்ணெயும் கெட்டது, திரியும் கெட்டது. சிட்டமும் பிடித்தது. ஒளி மங்கியது. மங்கிவிட்டேன். நீதான் நேராகச் சுடர்விட்டு அமைதியாக எரியும் ஒளி விளக்கு" என்றான்.
அன்று மாலை மறுபடியும் உணர்ச்சி வேகத்தால் கதறுவான், அலறுவான், அதனால் காய்ச்சல் மிகும் என்று எண்ணி அவனெதிரே போய் உட்கார்ந்து பேசாமலே தப்பித்துக் கொண்டிருந்தேன். மாலை சிற்றுண்டியும், காப்பியும் கொடுத்துவிட்டு, அங்கே நிற்காமல் உடனே வந்து விட்டேன். சந்திரன் தானாகவே அழைத்தான். "இன்றைக்குக் காய்ச்சல் முன்னமே வந்துவிட்டது. கண்ணெல்லாம் எரிகிறது. உடம்பெல்லாம் எரிகிறது. கணுவெல்லாம் வலி பொறுக்க முடியவில்லை. மருந்து ஏதாவது வாங்கி வந்தால் தான், தாங்க முடியும்போல் இருக்கிறது" என்றான்.
"உடனே எனக்குத் தெரிந்த மருத்துவரிடம் போய், தொழுநோய் என்பது தவிர மற்றச் செய்தி எல்லாம் சொல்லி மருந்து வாங்கிவந்தேன். மருந்தை உட்கொண்டதும், ஏதோ பேசத் தொடங்குவான் போல் தெரிந்தது. அதற்கு இடம் கொடுக்காமல் வந்து விடவேண்டும் என்று எண்ணி உடனே நகர்ந்து வந்துவிட்டேன். ஊருக்குக் கடிதம் எழுதலாம் என்று எண்ணி மேசையருகே உட்கார்ந்து ஏழெட்டு வரிகள் எழுதினேன். சந்திரன் கூப்பிட்ட குரல் கேட்டது. போய் நின்றேன்.
"இன்றைக்கு என் பக்கத்தில் நிற்க மாட்டேன் என்று போய் விடுகிறாயே. என்மேல் வருத்தமா? நான் ஏதாவது தப்பாகச் சொல்லிவிட்டேனா?" என்றான்.