வாசற்படிக்கு அப்பால் மனைவி கண்களைத் துடைத்தபடி நின்றிருந்தாள். அத்தையின் கை என் முதுகைத் தடவியது. நான் உடனே எழுந்து உட்கார்ந்து, "என்ன அத்தை! இரண்டு பேரும் சேர்ந்து நாடகம் நடத்த வந்து விட்டீர்களா? என்ன சொன்னாள் இந்த நாய்?" என்று கேட்டு எழுந்தேன். அத்தை பரிவுமிக்க குரலில், "ஒன்றும் இல்லையப்பா. ஏன்டா கண்ணு இப்படி, ராசா போல இருப்பதை விட்டுவிட்டு" என்றார். "போ அத்தை போ. போய் உன் வேலையைப் பார்" என்று அங்கிருந்து எழுந்து அவர்களின் கண்ணுக்குப் படாமல் சட்டையை மாற்றிக் கொண்டு வெளியே வந்தேன். இவ்வளவு தண்டனை பட்ட பிறகும் என்னுடைய ஆணவம் அடங்கியதா? அடங்கவில்லை. வேலு! சொன்னால் நம்புவாயா வேலு! நம்முடைய நண்பன் சந்திரனா இப்படிச் செய்தான் என்று நீ எண்ணுவாய். அவ்வளவு கொடுமை செய்தேன் வேலு! என்னை அடித்துத் துரத்திய அந்த குடிசைக்கு ஒரு நாள் தீ வைத்துவிட்டேன். சந்திரனா செய்தான் என்று எண்ணுகிறாயா நான் அல்ல வேலு. என்னுடைய ஆணவம், என்னுடைய ஆணவம்" என்று பலமுறை கதறினான். மறுபடியும் நேற்றுப் போல் உணர்ச்சி வேகம் அளவுகடந்து போய் உடம்பைக் கெடுக்கக்கூடாதே என்று பயந்து, சொல்லாமல் நகர்ந்து வந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து, அம்மா அப்பா என்று அவன் மூச்சுவிடும் குரல் கேட்டுச் சென்று, "என்ன, ஏதாவது வேண்டுமா?" என்றேன். "ஒன்றும் தேவை இல்லை. நேற்றுப் போல் காய்ச்சல் வந்துவிட்டது. தலை கனமாக இருக்கிறது" என்று தலையைப் பிடித்துக்கொண்டு வருந்தினான். தலை வலித் தைலம் கொண்டுபோய்க் கொடுத்தேன். பூசிக் கொண்டான். அதன் பிறகும் அப்பா அம்மா என்று துன்பக் குரல் தணியவில்லை. "குடிப்பதற்கு ஏதாவது சூடாகக் கொடு" என்றான். சூடாக ஆர்லிக்ஸ் போட்டுக் கொண்டுபோய்க் கொடுத்தேன். குடித்துவிட்டு, "காய்ச்சல் வரவர ஏறுகிறது. என்ன செய்வேன்? நீ போ. நான் படுத்துப் பார்க்கிறேன்" என்றான். "இன்றைக்காவது மருந்து வாங்கி வந்திருக்கலாமே" என்றேன். வேண்டா என்று தடுத்தான்.
அன்று இரவு இரண்டுமுறை எழுந்து போய்ப் பார்த்தேன். முதன் முதலில் வாய் பிதற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து விட்டுத் திரும்பினேன். இரண்டாவது முறை சென்றபோது அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தான். மெல்லத் தொட்டுப் பார்த்தேன். காய்ச்சல் கன கன என்று மிகுதியாக இருந்தது. தொட்ட பிறகு ஏதோ மனக்குறை ஏற்பட்டது. உடனே சோப் இட்டுக் கையை நன்றாகக் கழுவி விட்டுப் போய்ப் படுத்தேன்.
மறுநாள் காலையில் முன்போலவே அருட்பா பாடிக்கொண்டிருந்தான். "காய்ச்சல் இருக்கிறதா, மருந்து வாங்கி வரட்டுமா?" என்று கேட்டேன். "எனக்கா? எதற்கு மருந்து? காய்ச்சல் இப்போது