தங்கை கற்பகத்துக்கும் அப்படிப்பட்ட செருக்கு உண்டு. தான் ஒழுங்கானவள் என்றும், கெட்டிக்காரி என்றும் எண்ணிக் கொண்டு, தன் கணவனை ஏமாந்த பேர்வழி என்று சொல்கிறாள். அப்படிப்பட்ட செருக்கு இருந்தால் இருந்து போகட்டும். அந்தச் செருக்கு இல்லாத மனைவியாக வேண்டுமானால் முப்பது வயது உள்ள விதவையாகத் தேடிக் கல்யாணம் செய்து கொண்டிருக்க வேண்டும்."
நான் சிரித்தேன்.
"நான் சொல்வது தப்பா? உள்ளதைத்தான் சொல்கிறேன். என்னிடத்தில் உண்மையாகப் பணிவோடு நடந்தவர்கள் இரண்டு பேர். ஒருத்தி நீலகிரித் தேயிலைத் தோட்டக்காரி, காரணம் அவளுடைய பழைய குறையான வாழ்க்கை. மற்றொருத்தி - இறந்துபோன மனைவி; காரணம் அவளுடைய பயம். பயந்த மனைவியைவிட, செருக்கு உள்ள மனைவியே மேல்" என்றான். திடீரென எதையோ நினைத்தவன் போல், "உன் மனைவியை நான் பார்க்கவே இல்லையே" என்றான்.
"பார்த்திருக்கிறாயே. வேலூரில் என் அத்தை மகள்."
"ஓ! அந்தப் பெண்ணா? சின்ன வயதில் உன் தங்கையோடும் என் தங்கையோடும் சேர்ந்து விளையாடிக் கொண்டு..."
"ஆமாம் அவளே தான்."
"நீ உன் அத்தை மகளை மணந்து கொள்ளமாட்டேன் என்று என்னிடம் சொல்லியிருக்கிறாயே, நினைவு இருக்கிறதா? அது சரி. இப்போது ஏன் அதைப் பற்றிப் பேசவேண்டும்? நான் ஒன்று சொல்கிறேன். உள்ளதைக் கொண்டு மகிழ வேண்டும். வியாபாரம், செல்வம் இவற்றில் மட்டும் அல்ல; மனைவியோடு வாழும் வாழ்க்கையிலும் இது வேண்டும். சில இளைஞர்கள் காலை மாலை இரண்டு வேளையும் பூசை, கோயில் வழிபாடு எல்லாம் ஓயாமல் செய்து, கடவுளிடம் நிறையப் பயன் எதிர்பார்த்து எதிர்பார்த்து, கடைசியில் பயன் கிடைக்காமல் ஏமாந்து திடீரென்று ஒருநாள் நாத்திகர் ஆகிவிடுகிறார்கள். தெரியுமா? அப்புறம் சாமியாவது பூதமாவது என்பார்கள். அதுபோல் மனைவியிடம் அளவுக்கு மேல் அன்பு பணிவு அடக்கம் ஒடுக்கம் அழகு ஆர்வம் எல்லாவற்றையும் எதிர்பார்த்தாலும் இப்படித்தான் கடைசியில் ஏமாந்து வருந்த வேண்டி