கிளம்பியது. இடியும் மின்னலும் நான் நீ என்று முந்திக்கொண்டு பெருங்கூத்து நடத்தத் தொடங்கின. காற்று சுழற்றிச் சுழற்றி அடித்தது. மழையும் பெய்யத் தொடங்கியது. உடனே எழுந்து சென்று சந்திரனைப் பார்த்தேன். அவன் முன்போலவே அமைதியாய்ப் படுத்திருக்கக் கண்டேன். சன்னல் கதவுகளை எல்லாம் சாத்திக் கொக்கி இட்டுத் திரும்பி வந்தேன். காற்றும் மழையும் நடத்தும் போரைப்பற்றி எண்ணியவாறே படுக்கையில் படுத்தேன். காற்றின் பேரொலி சிறிது அடங்குவதுபோல் இருந்தபோது மழைத்துளிகளின் ஓசை மிகுவதும், மழை ஓசை அடங்கும்போது காற்றின் ஒலி மிகுவதும், போரின் வெற்றி தோல்விகளைக் காட்டுவன போல் இருந்தன. பேரிடியாக இருந்த ஒலி மாறி அமைதியான முழக்கம் மீண்டும் வானத்தில் இடையிடையே கேட்டது. சன்னல் கண்ணாடி வழியாக வானத்தின் மின்னல் ஒளி விட்டுவிட்டு என் அறைக்குள் புகுதல் கண்டேன். இவற்றிற்கு இடையே நண்பன் சந்திரன் பெற்ற மன அமைதியைப் பற்றி எண்ணியவாறே உறங்கிவிட்டேன்.
இரவு மூன்று மணிக்கு விழித்தபோது புயல் அடங்கி இருந்தது. மின்னலும் இடியும் களத்தைவிட்டு அகன்று ஓய்ந்திருக்கச் சென்றிருந்தன. காற்றுத் தோல்வியுற்று அடங்கி எங்கே ஒளிந்திருந்தது. மழையும் களைத்துச் சோர்ந்து விட்டாற்போல் சிறு சிறு தூறலாய் பெய்து கொண்டிருந்தது. எழுந்து போய்ச் சந்திரனைப் பார்த்தேன். பிதற்றாமல் புரளாமல் ஆடாமல் அசையாமல் இருந்தான். நல்ல அமைதியோடு உறங்குகிறான் என்று திரும்பி விட்டேன். மன அமைதி உள்ளபோது உடம்பும் நல்ல அமைதி பெறுவது இயற்கை என்று எண்ணியபடியே மறுபடியும் படுத்து உறங்கிவிட்டேன்.
காலையில் விழித்தபோது, வழக்கம்போல் சந்திரன் அருட்பா பாடுவது கேட்கும் என்று செவிகள் உற்று கேட்டன. ஒருகால் பாடி முடிந்திருக்கும் என்று எண்ணினேன். சிறிது நேரம் கண் மூடியவாறே படுத்திருந்து எழுந்தேன். சந்திரனிடம் சென்றேன். அவன் வழக்கத்திற்கு மாறாக, கதிரவன் வந்த பிறகும் படுத்திருந்ததைக் கண்டேன். சரி, உறங்கட்டும் என்று திரும்பிவிட்டேன். பல்துலக்கிக் குளித்தபிறகு சென்று கண்டேன். அப்போதும் அதே நிலையில் படுத்திருக்கக் கண்டதும், என் மனம் திக்கென்றது. நான்கு முறை பெயரிட்டு அழைத்தேன். ஒரு குரலும் இல்லை. அப்போதுதான் அவனுடைய உடம்பில் மூச்சின் அசைவும் இல்லாததை உணர்ந்து திடுக்கிட்டேன்! கைவிரலை மூக்கின் அருகே கொண்டு சென்றேன். காற்று இல்லாததை உணர்ந்ததும், என்னை மீறிச் "சந்திரா, சந்திரா!" என்று கூக்குரல் இட்டேன். என் உடம்பில் ஒருவகை அச்சம் ஊடுருவியது. கண்ணின் இமைகளை என் விரலால் நீக்கித் திறந்தேன். ஒளியற்றுப் பஞ்சடைந்திருந்தது. தலைமேல் கை வைத்துக் கொண்டு, "அப்பா