(Reading time: 47 - 94 minutes)
Akal vilakku - Mu. Varataracanar
Akal vilakku - Mu. Varataracanar

அவர் பின் வாங்கினார். பிறகு என்னைப் பார்த்து, "சரி, இனிமேல் ஊருக்குத் தந்தி கொடுக்கவேண்டும். முகவரி கொடுங்கள். நான் எழுதிக்கொடுப்பேன். வேலையாளை அனுப்பலாம். ஊரிலிருந்து வீட்டார் வந்த பிறகுதான் மற்ற வேலைகள்" என்றார்.

  

என் உள்ளத்தே துயரம் மேலெழுந்தது. அழுதேன். அழுதுகொண்டே, "நண்பருடைய வேண்டுகோளின்படி வீட்டார் யாருக்கும் தெரிவிக்கக்கூடாது" என்றேன்.

  

"நோயாளிகள் அப்படிச் சொல்வார்கள். ஆனால் நாம் அப்படிச் செய்யலாமா? அவர்கள் கேள்விப்பட்டால் உங்கள் மேல் வருத்தப்படுவார்கள்" என்றார்.

  

"அதையும் சந்திரனே சொன்னார். என்ன வருத்தப்பட்டாலும் வேண்டா வேண்டா என்றார். தம்முடைய கடைசி வேண்டுகோள் என்றும் தவறாமல் நிறைவேற்ற வேண்டும் என்று தெளிவாகச் சொல்லிக் கேட்டு கொண்டார்" என்றேன்.

  

"அப்படியானால் சரி" என்று சொல்லிவிட்டு, நண்பர் வேலையாளிடம் அடக்கத்திற்கு உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு ஏவினார். என்னிடம் நெருங்கிவந்து, அப்படியானால் வழக்கமான ஊர்வலத்துக்கு இடம் இல்லை. அக்கம் பக்கத்தில் யாருக்கும் தெரியாமல் ஒரு வண்டி வைத்து இடுகாட்டுக்கு கொண்டுபோய் விடுவோம்" என்றார். அதற்கு இசைந்தேன். ஆனால், வண்டியில் உடம்பை ஏற்றியபோது எதிர் வீட்டாரும் பக்கத்து வீட்டாரும் அணுகி வந்து பார்த்தார்கள். யார் என்ன என்று என்னைக் கேட்டார்கள். சொன்னேன்.

  

இடுகாட்டில் வேலையாளும் பச்சைமலையும் வண்டிக்காரனும் தவிர வேறு யாரும் இல்லை. தன் கிராமத்தில் பெரிய வீட்டில் செல்வ மகனாக வளர்ந்த ஒருவனுடைய வாழ்வு இப்படித் திக்கற்ற முடிவு அடைந்து விட்டதே என வருந்தினேன். சந்திரனுடைய முகத்தைப் பார்த்து நெஞ்சு உடைந்து கலங்கினேன். உடம்பைக் குழியில் இறக்குவதற்காக நாங்கள் நான்கு பேரும் பிடிக்கத் தொடங்கியபோது, "இருங்கள் இருங்கள்" என்று ஒலி கேட்டது. "அண்ணா!" என்று கதறிய பெண்ணின் குரல் கேட்டது வண்டி ஒன்று நிற்க, அதிலிருந்து மாலனும் கற்பகமும் இரண்டு குழந்தைகளும் இறங்குவதைக் கண்டேன். அழுதுகொண்டே எதிரில் சென்றேன்.

  

"அண்ணா போய்விட்டாயா? அண்ணாவா?" என்று கதறிக்கொண்டே வந்தாள் கற்பகம்.

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.