சந்திரா இதற்காகவா என் வீட்டை தேடி வந்தாய்? சாவதற்காகக் கடைசியில் என்னைத் தேடி வந்தாயா?" என்று அழுதேன்.
கதவு தட்டும் ஒலி கேட்டு எழுந்து சென்று, "யார் அது? என்றேன். "பச்சைமலை" என்ற குரல் கேட்டுத் திறந்தேன், பச்சைமலையும் பக்கத்தில் வேலையாளும் நின்றிருந்தனர். என் கண்களில் கலக்கத்தையும் முகத்தின் வாட்டத்தையும் கண்ட பச்சைமலை, "என்ன அய்யா! ஏன் அழுகிறீர்கள்? என்ன காரணம்?" என்றார். நடந்ததைச் சொன்னேன். "நேற்று முந்தாநேற்று ஆபீசில் பேசிக் கொண்டிருந்தபோது ஒன்றுமே சொல்லவில்லையே" என்றார்.
"என்னுடைய வாழ்க்கையிலேயே பெறுவதற்கு அரிய நண்பர், இளமை நண்பர்" என்றேன்.
"முன்னே என் மனைவியும் அவளுடைய அக்காவும் சொன்னார்களே, அந்த நண்பரா?" என்றார்.
"ஆமாம்" என்று சொல்லி உடல் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றேன். பச்சை மலை சந்திரனுடைய உடம்பைக் கண்டதும், சிறிது தொலைவிலேயே நின்று திகைப்போடு என்னைப் பார்த்து, "தொழு நோயாளிபோல் தெரிகிறதே" என்றார்.
"ஆமாம்" என்றேன். "இவருடைய வாழ்க்கை குடும்பத்துக்கும் ஊருக்கும் ஒரு பொல்லாத கறைபோல் இருந்தது. ஆனாலும், நெருங்கிப் பழகிய என்னுடைய வாழ்க்கைக்கு இவர்தான் ஒரு நல்ல கரைபோல் இருந்தார். இவர் இல்லையானால் நான் படித்து முன்னேறியிருக்க மாட்டேன். இவர் பட்ட துன்பங்களிலிருந்து எனக்கு அறிவு வரவில்லையானால், நான் இப்படிச் சீராக வாழ்ந்திருக்கமாட்டேன். அப்படிப்பட்ட நல்ல நண்பர் கடைசியில் என்னைத் தேடி வந்து என் வீட்டில் இறந்துவிட்டார்" என்றேன்.
"மனைவி திருமகள் சொல்லியிருக்கிறாள். சந்திர அண்ணா கூர்மையான அறிவுடையவர் சிறந்த குணங்கள் உடையவர் என்று அவள் சொல்லியிருக்கிறாள்" என்றார்.
"அறிவு மட்டுமா? குணம் மட்டுமா? இளமையில் இவரைப் போல் சுறுசுறுப்பும் அழகும் உடையவர்கள் நான் கண்டதில்லை" என்றேன்.
"அய்யோ! அவ்வளவு அழகான உடம்பு இப்படிநோயால் கெட்டு மாறிவிட்டிருக்கிறதே" என்று