"மாஜிக்காவது, மேதாவிலாசமாவது. சுத்தப் போக்கிரித்தனமா இருக்கிறதே. சொந்தக்காரன் அனுமதியின்றிப் பூட்டை உடைத்துக் கொண்டு உள்ளே போவதா? இதைச் சும்மா விடக் கூடாது! கேஸ் போடப் போகிறேன்."
"கண்டிப்பாகச் செய்யுங்கள். ஆனால் ஒன்று. வக்காலத்து என்னிடமே வர வேண்டும். உங்களுக்குத் தான் தெரியுமே. இந்த ஊருக்குப் பவானி வந்ததிலிருந்து மற்ற வக்கீல்களுக்குக் கேஸ் கிடைப்பதென்பதே குதிரைக் கொம்பாகி விட்டது."
"ஸார்! ஸார்! அதோ பாருங்கள். வாசற்படிக்கு மேல் என்ன எழுதியிருக்கிறது?" என்று விசுவநாதன் கை காண்பித்தான்.
அவன் சுட்டிக் காட்டிய இடத்தில் "வெல்கம்" என்று எழுதியிருந்தது. "இப்படி, 'நல்வரவு' என்று எழுதிவிட்டுத் தாத்தா கோபித்துக்கொள்ளலாமா?"
"ஏண்டா பயலே! என்னைப் பார்த்தால் உனக்குத் தாத்தாவாகத் தோன்றுகிறதா?"
"இல்லை, இல்லவே இல்லை. கொள்ளுத் தாத்தாவாகத்தான் தோன்றுகிறது."
"பையன் சுத்த வாலாக இருக்கிறான். குடும்பத்தில் மற்றவர்களும் இப்படித்தான் இருப்பார்கள். இவர்களை ஒருநாளும் குடி வைக்க முடியாது. இப்போதே கிளப்பிவிட்டு மறு காரியம் பார்க்கவேண்டும்" என்று கூறியவாறே உள்ளே நுழைந்தார் ரங்கநாதன்.
அவர் கால் நிலைப்படியில் தடுக்க, விழப் போனார். கல்யாணம் சட்டென்று அவரைத் தாங்கிக் கொண்டான்.
"பார்த்தீரா? இதற்குத்தான் வீட்டுக்கு எலெக்ட்ரிக் லைட் போடும் என்றேன். கேட்டீரா?" என்றான் கல்யாணம். "கொஞ்சம் இருங்கள். ஓர் அரிக்கேன் லாந்தர்