"ஒன்றும் ஆகாது பவானி அக்கா! நீயும் பிடிச்சுக்கோ, நானும் பிடிச்சுக்கிறேன். கொஞ்ச தூரம், என்ன? ப்ளீஸ்!"
"ஆல்ரைட், அதோ அந்த இரண்டாவது விளக்குக் கம்பம் வரைதான்" என்ற பவானி காரைக் கிளப்பினாள். விசு அவள் அருகே ஆசனத்தின் மீதே மண்டியிட்டு ஸ்டியரிங்கைப் பிடித்துக் கொண்டான்.
"அது சரி, நீ இங்கே எப்படி வந்து சேர்ந்தாய்?" - பவானி கேட்டாள்.
"கல்யாணம் மாமாதான் என்ன உதவி வேண்டுமானாலும் தம்மை வந்து பார்க்கும்படி சொல்லியிருக்கிறாரே. அதனால் தான் வந்தேன். "நீங்க காரை விட்டு இறங்கி உள்ளே போவதைப் பார்த்தேன். புதுக் கார் ஜோரா இருக்கு அக்கா."
"என்ன உதவி இப்போ தேவைப்பட்டது கல்யாணத்திடம்?"
"கிணற்று ஜகடைக்கு கிரீஸ் போடணுமாம். கீங் கீங் என்று சத்தம் போடறதாம். அக்காவுக்கோ எனக்கோ எட்டலை. கிணற்று மதில் மேல் ஏறி நிற்கப் பயம். அதனால் கல்யாணம் மாமாவை அழைத்துக்கொண்டு வருமாறு கமலாக்கா சொன்னாள். இங்கே வந்தா அந்தச் செல்லம் மாமி வள்ளுன்னுவிழுந்து விரட்டறா. பேர்தான் செல்லம் வெல்லம் என்று."
"இன்னும் இரண்டு நாட்களிலே வந்துவிடுவார் கல்யாணம் மெட்ராஸிலேருந்து, சொல்லி அனுபறேன்" என்றாள் பவானி.
"இரண்டு நாளென்ன இருபது நாட்கள் கழித்து வேணுமானாலும் வரட்டும், ஒன்றும் அவசரமில்லை" என்றான் விசு. "கிணற்று ஜகடை கீங் கீங் என்று கத்தினால் கத்திட்டுப் போகட்டும். யாருக்கு நஷ்டம் அல்லது கஷ்டம்?"
"அது சரி" என்று சிரித்தாள் பவானி. "சரியாக உட்கார், ஊர்வலம் போனது போதும். வேகமாய் விடலாம் வண்டியை."