ஆனந்த பாஷ்பம் பொங்கி வழிந்தது. உவகையுடன் உள்ளம் - பூரிக்க, பெருமிதத்துடன் சாவித்திரியைக் கட்டி அணைத்துக் கொண்டாள்.
“வீட்டிலே எல்லோரும் சௌக்யந்தானே, மாமி?" என்று ஸரஸ்வதி மங்களத்தை விசாரித்தபோது, 'சௌக்யந்தானே?" என்று தன்னை நேரில் கேட்பதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு ஸரஸ்வதி மறைமுகமாகத் தன் தாயை விசாரிப்பதாக நினைத்த சந்துரு, ”சீதா உன்னை ரொம்பவும் விசாரித்ததாகச் சொல்லச் சொன்னாள். உன்னிடம் கற்றுக்கொண்ட பாட்டுகளைப் பாடம் பண்ணிவிட்டதாகவும் சொன்னாள்" என்றான்.
"ஓஹோ!" என்று அவனுக்குப் பதில் அளித்துவிட்டு ஸரஸ்வதி மற்ற அலுவல்களைக் கவனிக்க உள்ளே சென்றாள்.
இதற்குள்ளாக வெளியே போயிருந்த ரகுபதி திரும்பி விடவே சாவித்திரியும், மங்களமும் கூடத்திலிருந்து பின் கட்டுக்குச் சென்றார்கள்:
"வந்தவர்களை வா என்று கூடச் சொல்லத் தெரியாமல் பிரமித்து உட்கார்ந்திருக்கிறாயே ஸ்வர்ணம். நாலு வார்த்தைகள் நறுக்கென்று பேசத் தெரிய-வில்லையே உனக்கு!" என்று பாகீரதி அம்மாமி கையில் பிடித்த கரண்டியுடன் சம்பந்தி அம்மாளை வரவேற்று. ஸ்வர்ணத்தைப் பரிகாசம் செய்தாள்.
ஸ்வர்ணம் நிஜமாகவே பிரமித்துப்போய் இருந்தாள். ஒன்றரை வயதுக் குழந்தையிலிருந்து தகப்பன் இல்லாமல் அல்லும் பகலும் அரும்பாடுபட்டு வளர்த்த குழந்தைக்குக் கல்யாணம் ஆகி மனைவி வந்திருக்கிறாள் என்றால் அது எளிதான காரியமா? நாலு பேரைப்போல் அவளும் பேரன் பேத்தி எடுக்கப் போகிறாள். இருண்டிருந்த வீட்டில் ஒளி வீசப்போகிறது. இனிமேல் தன்னை மிஞ்சக்கூடியவர்கள் யாரும் இல்லை என்றே அவளுக்குத் தோன்றியது.
சாவித்திரி புக்ககம் வந்து இரண்டு மாதங்கள் ஓடிவிட்டன. அந்த இரண்டு மாதங்களில் ஸ்வர்ணம் நாட்டுப்பெண்ணுக்கு விதவிதமாகப் பூவைத்துப் பின்னினாள். நகைகள் பூட்டி அழகு பார்த்தாள். ஒரு வேலையும் செய்யவிடாமல் தானே எல்லா வற்றையும் கவனித்துக்கொண்டாள். சாதாரணமாகத் திருப்தி யடையும் மனமிருந்தால், மாமியாரின் இந்தச் சரளமான சுபாவத்தைப் புரிந்துகொண்டு சாவித்திரி ராஜாத்தி மாதிரி இருந்திருக்கலாம். அந்த வீட்டுக்கு நாட்டுப்பெண்ணாகவும், பெண்ணாகவும் இருந்து அருமையோடு வாழ்ந்திருக்கலாம். ஆனால், லேசில் ஒருவரையும் நம்பும் சுபாவம் படைத்தவள் அல்ல சாவித்திரி. அவள் எதிரில் தங்கப் பதுமைபோல் வளையவரும் ஸரஸ்வதியைப் பார்த்தபோதெல்லாம் அவள் நெஞ்சு பொறாமை யால் வெடித்துவிடும் போல் இருந்தது.
”இவளுக்கு என்ன இந்த வீட்டில் இவ்வளவு சலுகை?' என்று தன்னைக் கேட்டு அதற்கு விடை புரியாமல் தவித்தாள் சாவித்திரி, சதாகாலமும் முகத்தை 'உப்' பென்று வைத்துக்கொண்டு