(Reading time: 32 - 63 minutes)
Vata malli
Vata malli

கோடிட்ட இடத்தை, நீங்களே பூர்த்தி செய்து கொள்ளுங்கள். நான், இப்படி கோடு போடுவதற்குக் காரணம், நீங்கள் என்னைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பது புரியாததால்தான். காதலர் என்று எழுதினால், சந்தோஷப்படுவேன். நண்பர் என்று இட்டுக் கட்டினால் ஒரு நம்பிக்கையோடு இருப்பேன். சகோதரி என்று எழுதினால் தற்கொலை செய்துகொள்வேன். அப்புறம் உங்கள் இஷ்டம்.

  

சுயம்பு மேற்கொண்டு அந்த நீண்ட கடிதத்தைப் படிக்க இயலவில்லை. சொட்டு சொட்டாகவும், அருவி போலவும் கொட்டிய கண்ணிர், அந்த காகிதத்தில் விழுந்து விழுந்து அவளின் காதல் மொழிகளை நனைத்து நனைத்து நையப் புடைத்தன. அவன் அழுதுகொண்டே இருந்தான். அவனுக்காக சுய இரக்க அழுகை, குடும்பத்திற்காக சுய வெறுப்பு அழுகை, அதோ, சிரிப்பும் கும்மாளமுமாய் எதிர்கால இனிமைகளோடு அந்த வாசற்பக்கம் நின்று குதித்தோடிப் போனாளே, அவளுக்காக ஒரு பரிதாப அழுகை.

  

சுயம்பு அந்தக் கட்டில் சட்டத்தைக் குத்தினான். கால்களைப் பின்சட்டத்தில் வைத்து அடித்தான். குப்புறப் படுத்தான். பக்கவாட்டில் நெளிந்தான். திடீரென்று ஒரு நினைப்பு. டேவிட்டின் நினைப்பு. அவன் தன் கையைப் பிடித்து அழைத்துப் போனது, மணவறையிலிருந்து இறங்கித் தன்னை அவன் வீட்டுக்கு அழைத்துப் போவது போன்ற கற்பனை... அதுவே அச்ச உணர்வாகத் துவங்கி, ஆசை உணர்வாக மயங்கி, ஆகாயமும் பூமியுமாக விசுவரூபம் எடுத்து, அவனை ஆக்கிரமித்தது. அவனுள்ளே ஒரு வெறி! டேவிட்டுக்குக் கடிதம் எழுத வேண்டும். எப்போது எழுதலாம்... இப்போதே... இந்த விநாடியே...

  

அவன், கடிதம் எழுதுவதற்காக தங்கையின் ரப் நோட்டை எடுத்து ஒரு முரட்டுத் தாளைக் கிழித்தான். அதை, அந்த நோட்டின் மேலேயே வைத்துக்கொண்டு, மாடத்தில் வைத்திருந்த பால் பாயிண்ட் பேனாவை எடுத்தான். அப்போது தலையைத் தூக்கவிடாமல் தடுத்த கயிற்றுக் கொடியைப் பார்த்தான். அக்காவின் பட்டுச் சேலை. தங்கையின் பாவாடை. இருவரில் எவருக்கு என்று தெரியாத பிரா.

  

இதுவரை அடைத்து வைத்த உணர்வுகள், அவன் உள்ளத்தை மட்டுமல்ல. உடம்பையும் உடைத்துக் கொண்டு பீறிட்டன. கண்கள் படபடத்தன. முகம் குழைந்தது. இடுப்பு வளைந்தது. பெருவிரல் தரையில் வட்டம் போட்டது. நாக்கு சுருண்டது. இதயம் அடித்துக் கொண்டது.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.