Flexi Classics தொடர்கதை - வடம் பிடிக்க வாங்க, ஜப்பானுக்கு! - 02 - சாவி
”பாரிஸ் ஐஃபல் டவரைவிட இது உயரமா?" - முத்து கேட்டார்.
"ஆமாம். ஆனா, அது வெய்ட் அதிகம். 7000 டன் கனம். இது 400 டன் தான்" - புள்ளி சொன்னார்.
"அதாவது - இது கனம். அது மகாகனம்!" என்றார் முத்து.
"ஜப்பான்ல அடிக்கடி புயலும் பூகம்பமும் வருமே அதுக்கெல்லாம் தாக்கு பிடிச்சு நிக்குதா இது” - கணபதி ஸ்தபதி கேட்டார்.
”அந்த விஷயத்துல நம்ம கலைஞர் மாதிரிதான் இந்த டவரும் எந்தப் புயலுக்கும் பூகம்பத்துக்கும் அசைஞ்சு கொடுத்து ஸ்டெடியா நிக்கறார் பாருங்க. அதுபோலத்தான் இந்த டவரும். புயல் வந்தா 32 இஞ்ச் வரைக்கும் இப்படியும், அப்படியும் ஊசலாடி சமாளிச்சு நின்னுடும்! என்ஜினீருங்க அந்த மாதிரி இதை ஒரு ஆச்சரியமா அமைச்சிருக்காங்க!" என்றார் புள்ளி.
”ஜப்பான்காரன் மூளையே முளை!" என்று வியந்தார் மனோரமா.
"அது மட்டும் இல்லே. புயல் பூகம்பம் வரப் போகுதுன்னா அதை முன்கூட்டியே அறிஞ்சு எச்சரிக்கிற அபூர்வ எலக்ட்ரானிக் கருவிகளும் இந்த டவர் பொருத்தியிருக்காங்க" என்றார் புள்ளி.
”மேலே போய் ஒரு ஏரியல் சர்வே நடத்தலாம் வாங்க” என்று அழைத்தார் முத்து.
ஏழு பேரும் க்யூ வரிசையில் நின்று லிப்டில் ஏறியபோது லிப்ட் கால் ஒருத்தி பவ்யமா இடுப்பை வளைச்சு குனிந்து. வரவேற்றாள். ஒவ்வொரு தடவையும் "ஹய்! ஹய்!" என்றாள்.
”போறவங்க வர்ரவங்களுக்கெல்லாம் இப்படி. 'ஹய் ஹய்'னு வணங்கிக்கிட்டிருந்தா இந்தப் பெண் ணுக்கு இடுப்பு வலிக்காதா?" என்று கேட்டார் மனோரமா.
"ஜப்பான்ல இது ரொம்ப சகஜம். லிஃப்ட் கர்ல்ஸ் மட்டும் ஒரு நாளைக்கு இரண்டாயிரம் தடவை உடம்பை வளைக்கறதா ஒரு புள்ளி விவரம் சொல்லுது" என்றார் சுப்புடு.