(Reading time: 16 - 32 minutes)
Verukku neer - Rajam Krishnan
Verukku neer - Rajam Krishnan

மடிந்தாற் போல் அவளுடைய மடல்கள் சிவந்து விடுகின்றன. எங்கோ ஒரு கிராமத்து மூலையில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று அமைந்த ஒதுக்குப்புறத்தில் பிறந்து வளர்ந்திருக்கும் அவன் காந்தி கிராமத்து அரிஜனச் சிறுவர் இல்லத்துக்கு வரும்வரையிலும் அந்தக் குப்பை மேட்டுச் சண்டை சச்சரவுகளையும் சல்லாப விநோதங்களையும் தானே அறிந்திருந்தான்? அந்தப் பருவத்தில் படியாததை பின்னே வாழ்நாளெல்லாம் படிய வைத்தாலும் அந்த ஈடுபாடு வராதோ?

  

யமுனா காந்தி நூற்றாண்டு விழாவுக்காக ஆசிரமக் குழந்தைகளைக் கொண்டு ஒரு கதம்ப நிகழ்ச்சி தயார் செய்திருக்கிறாள். உண்மைதான். ஆனால் இந்த ஆசிரமத்தில் யார் தாம் காந்தியடிகள் கண்ட அன்றைய பாரத சமுதாயத்தோடு சம்பந்தப்பட்டவர்கள்? யமுனாவின் தந்தை, இன்று நடமாட்டமில்லாமல் கட்டிலோடு முடங்கிவிட்ட தந்தை, அந்த நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்துக்கே புறப்பட்டவர்; யமுனாவின் தாயோ, காந்திஜீயின் சேவாக்கிராம ஆசிரமத்தில் கிடைத்த துணை. இவர்களெல்லோரும் கூடக் காந்தியடிகளைப் பற்றியோ, நாட்டுப்பற்றைப் பற்றியோ பேசும் போது இப்படி உணர்ச்சிவசப்பட்டு விடுவதில்லை. அவன்... அரிஜனங்கள் என்று தாய் போல் கனிவு கொண்ட அடிகளின் பெயரால் நிறுவப்பெற்ற கருணை இல்லத்திலேயே அரசு நீட்டிய கையைப் பற்றிக் கொண்டு சமுதாயம் மதிக்கத் தகுந்த மனிதனாக உருவாகி இருக்கிறான். 'துரைராசன் பி.ஈ.' என்று கடிதங்களில் வரும் வரியிலேயே அவன் தன்னைத்தானே பார்த்து மகிழ்ந்து கொள்ளுகிறான். எனினும், இந்த யமுனாவைப் போல் அவன் உணர்ச்சிப் பரவசனாகி விடுவதில்லை. ரங்கன் வைத்த ஒட்டுச் செடியில் மலர்ந்து நிற்கும் ரோஜாவைப் போன்ற அந்த முகம்; ஒட்டில் மலை ரோஜாவுக்குரிய வண்ணச் சிறப்பு உண்டு. அடுக்கடுக்கான இதழ்கள். ஆனால் மலை ரோஜாவுக்கில்லாத வாசனை, எண்ணங்களை நிறைக்கச் செய்கிறது. இந்த ஆசிரமத்துக்கு யமுனா ரோஜா; இல்லை... மான்! இல்லை... சிங்கம்...; இல்லை ராஜகுமாரி...

  

"என்ன நீங்கள் பஸ்ஸுக்குப் புறப்பட்டு விட்டீர்களா? திகைத்துப் போனாற்போல் நிற்கிறீர்களே?" என்று யமுனா கேட்கும் போது தான் அவன் ஒரு புன்னகை செய்து சமாளிக்கிறான்.

  

"மற்ற சாமான்களெல்லாம் ஜோசஃப் சாருடன் போயாச்சில்ல?"

  

"ஆமாம்; இந்த மாலைதான் எனக்குத் தெரிந்து பாக்கி. நீங்கள் முன்னே போய் ரங்கனுடன் பஸ்ஸைக் கொஞ்சம் பிடித்து வையுங்கள்; ஓட்டமாக வருகிறேன்!"

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.