இருபது தேதியில் மேற்குத் தொடரில் இப்படி வறட்சி நிலவுவதுண்டோ? மூடிக் கண் திறந்து வானவன் கண்ணாமூச்சி யாடுவதுடன் மறைந்து போகிறான். ஒரு மேகக் குஞ்சு சினையாவதில்லை; ஆறு மெலிந்து இழையாக ஓடுகிறது. எங்கோ சந்திர மண்டலத்தை எட்டிப் பிடிக்கிறார்கள். அரசியல் வானில் கொந்தளிப்பு, தனி மனிதர்களையும் அது ஆட்டிப் படைக்கிறது. ஆனால் இந்த மூலை நோஞ்சான் குழந்தையாய், கண்களில் மட்டும் ஒளியை வைத்துக் கொண்டு உயிர்த்திருக்கிறது.
கண்களில் மட்டுமே ஒளி...
"ஓ! சாலையில் பஸ் வந்து நிற்கிறதே?"
ரங்கன் நீளமான அந்த மாலைப் பெட்டியை, (மூங்கிலிழைகளால் ஒரு பெட்டி முடைந்திருக்கிறானே?) பஸ் உள்ளே ஏற்ற வேண்டுமென்று பிடிவாதம் பிடிக்கிறான்.
"ஊட்டி, ட்ராமாக்குப் போறது, பாரததேவிக்கு மாலை. இல்லாட்டி கண்டா முண்டா சாமான்களோடு மேலே போடலாம்" என்று மாலைப்பெட்டியுடன் நிற்கிறான்.
"இருக்கட்டுமேய்யா? அதான் பொட்டிக்குள்ள வச்சிருக்கியே? கீழே அல்லாம் மெறிச்சி துவையலாக்கிடுவாங்க..."
ரங்கனின் முகத்தில் கவலை கனக்கிறது.
"அதென்னமோ தெரியாதுங்க என் பக்கத்தில் அது இருக்கணும்."
"அப்ப அந்தாளையும் மேலே ஏத்திடுங்க!" என்று யாரோ ஒருவர் நகைச்சுவையுடன் சிரிக்கிறார்.
"இந்தாய்யா, ஒண்ணும் ஆகாது. நான் கியாரண்டி. போடப்பா, மேலே..." பெட்டியைக் காக்கிச் சட்டை ஆள் பற்றும் போது ரங்கன் அழுதுவிடுவான் போலிருக்கிறது.
"ரங்கனின் முகத்தைப் பாருங்க யமுனா!" என்று நகைக்கிறான் துரை.