சோஷலிசவாதியான ஸின்னாஜியின் மனைவியாம் மாதாஜி. அவளுடைய தந்தை அந்தப் பழைய நாட்களில் காந்தியடிகளுடன் சம்பாரன் சத்யாக்ரகத்தில் கலந்து கொள்ளச் சென்றபோது அவர்களுடைய இல்லத்தில் தான் தங்கினாராம். பாரத நாடு விடுதலையடைவதைப் பார்க்காமலே கண்களை மூடிவிட்டார் ஸின்னாஜி. ஒரு மகள், மகன், அம்மையார் எல்லாருமே அரசியலில் பங்கு பற்றியவர்கள். மருமகன் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தான்.
எல்லாச் செய்திகளையும் மாதாஜியே மூச்சுவிடாத கீச்சுக் கிரலில் அப்பட்ட ஹிந்தியில் தெரிவிக்கிறாள். அவர்களுக்கெல்லாம் விடை கொடுத்துவிட்டு, சிறுவர் சிறுமியருக்கு உற்சாகமான பாராட்டுகளை வழங்கிவிட்டு அவள் திரும்பும் வரையிலும் கமலம்மா வண்டியில் அமர்ந்திருக்கிறார். ஜோசஃப் கதவடியில் நிற்கிறார்.
"மன்னிக்கணும். நீங்க ஏம்மா காத்திருக்கணும்? முன்ன போயிட்டா நான் வர மாட்டேனா..."
"நீங்களும் வரீங்களா அம்மாவா?"
"இல்ல நீ போயிட்டு வா யமு. காலையிலே வரேன்..."
வண்டி ஓட்டி, கதவை அறைந்து சாத்துகிறான்.
கமலம்மாவின் கை மென்மையாக அவள் தோளில் படிகிறது.
"வெகு அழகாகப் பண்ணிட்டேம்மா. எனக்குச் சொல்லவே தெரியலே. இத்தனை குழந்தைகள் மனசிலும் நீ சொல்ல வந்தது பதிஞ்சிருக்கும்" குரல் தழுதழுக்கிறது. கமலாம்மா ஏன் இவ்வளவு நெகிழ்ந்து போகிறார்!
சுதீர் மேநாடு சென்று ஏதோ ஒரு தொழிற் பட்டத்தையோ நிர்வாகப் பயிற்சியையோ பெற்று வந்து, தந்தை ஆலமரமாகப் பெருக்கிய வர்த்தக நிறுவனங்களை ஒரு குடைக்கீழ் ஆண்டு கொண்டிருந்தால் கமலம்மா இப்படி அற்பத்துக்கு நெகிழ்ந்து போவாரோ? இந்தச் சேலையின் மீது நலிந்த கையைப் போட்டு அன்பை இழைய விடுவாரோ?