Flexi Classics தொடர்கதை - வேத வித்து - 02- சாவி
பாடசாலைப் பிள்ளைகள் ஆசார சீலர்களாய் எதிர் எதிராக அமர்ந்து ’ஆவர்த்தம்’ சொல்லிக் கொண்டிருந்தார்கள்
பூஜை அறையிலிருந்து வந்த சாம்பிராணி வாசனையும் சமையலறையிலிருந்து வந்த ரசம் கொதிக்கும் வாசனையும் சங்கமமாகிப் பாடசாலைப் பிள்ளைகளின் மூக்கைத் துளைத்து பசியைக் கிளப்பிவிட்டது
"அனுஷ்டானம் முடிப்பதற்குள் சமையலாயிடும். சீக்கிரமே இலை போட்டுருவா. துவாதசியாச்சே நொண்டி கிட்டா இருந்தா இத்தனை நேரம் வாழை ஏடுகள் சீவி, கூடம் பெருக்கி வைத்திருப்பான். மூர்த்தியானா இன்னும் தோட்டப்பக்கமே போகலை, அவனுக்கு என்ன ஆச்சோ தெரியலையே! கேட்டாலும் சொல்ல மறுக்கிறான்."
குண்டு பட்டாபி மனதை ஆவர்த்தத்தில் ஈடுபடுத்தாமல் சாப்பாட்டில் செலுத்தி யிருந்தான்.
"மூர்த்தி! மணி எட்டாகப் போறதுடா! தோட்டப்பக்கம் போய் அந்தச் சருகிட்டுச் சுருங்கிப் போன வாழை மரத்தை வெட்டிண்டு வந்துடு. தண்டும், பட்டையும் உதவும்" என்றாள் பாகீரதி.
"ஆவர்த்தம் அனுஷ்டானமெல்லாம் எனக்கில்லையா?" என்றான் மூர்த்தி.
"நொண்டி கிட்டா நாளைக்கு வரதா கடிதாசி போட்டிருக்கான். நாளையிலேர்ந்து அவன் எல்லா வேலையும் கவனிச்சுப்பான். அப்பாவும் காஞ்சீபுரம் போறாளாம். யாகம் பண்ண பிராம்மணோத்தமர்களையெல்லாம் சதஸ் கூட்டி சால்வை போர்த்தி சன்மானம் தரப் போறாளாம் பெரியவா."
”கனபாடிகள் காஞ்சீபுரம் புறப்படுவதற்குள் அவரிடம் காலம்பற சமாசாரத்தைச் சொல்லி விடலாமா?" என்று யோசித்தான் மூர்த்தி,
”வேண்டாம்; சொல்ல வேண்டாம். அதான் அர்க்கியம் விட்டு சூரிய பகவானிடம் வேண்டிக் கொண்டாச்சே மனத்தாலும், வாக்காலும். கைகளாலும், வயிற்றாலும், ஆண் குறியாலும் எந்தப் பாவத்தைச் செய்தேனோ, இன்னும் என்னிடத்தில் வேறு என்ன பாவம் உண்டோ அவ்வளவையும் நீக்கியருள வேண்டும் என்று சூரியவடிவான பரஞ்சோதியில் ஹோமம் செய்தாச்சே" என்று உள் மனம் வாதாடியது.
மூர்த்தி அந்த மூத்த வாழைமரத்தை அடியோடு வெட்டி வந்து துண்டு போடத் தொடங்கினான். அலைபாயும் எண்ணங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் மனதை ஒரு நிலைப்படுத்த இயலாத நிலையில் குழம்பிக்கொண்டிருந்த அவனுக்குள் "அந்தச் சங்கிலி எங்கே போயிருக்கும்? எப்படிப் போயிருக்கும்?" என்ற கேள்வியே மீண்டும் மீண்டும் எழுந்து வாட்டிக் கொண்டிருந்தது.
”வெள்ளத்தில் போயிருக்குமோ? அந்தக் கழைக்கூத்தாடிப் பெண்-மஞ்சு எடுத்துப் போயிருப்பாளோ? ஊஹூம், அவள் எடுத்திருக்க மாட்டாள். அப்படிப்பட்ட பெண் அல்ல அவள் - "உயிரைக் காப்பாற்றுவது ஒரு கடமை இல்லையா?" என்று கேட்டவளாச்சே! சாப்பிடக் கூப்பிட்டபோது வேண்டாம். உழைக்காமல் சாப்பிடுவது எங்க வழக்கமில்லை" என்று மறுத்தவளாச்சே! அவள் எடுத்திருக்க மாட்டாள். வெள்ளம்தான் கொண்டு போயிருக்கணும்." - மஞ்சு ஜல தேவதைபோல் நனைந்த ஆடையில் யெளவனத்தின் பூரிப்பில் ஒருகணம் அவன் கண்முன் மின்னலாய்த் தோன்றி மறைந்தாள்.
”மூர்த்தி! இது உன் அம்மாவின் சங்கிலிடா, மூணு பவுன். இதை எப்போதும் கழுத்தில் அணிந்து கொண்டிரு. அம்மா இந்தச் சங்கிலி ரூபமாக உன்னை ஆசீர்வதித்துக் கொண்டிருப்பாள் அப்பா சொன்ன அந்த வார்த்தைகள் நினைவுக்கு வர மூர்த்தி கண்களில் நீர் தளும்ப "அம்மா" என்று புலம்பி விட்டான்.
இதற்குள் பாகீரதி சமையலறை வேலைகளை முடித்துக் கொண்டு, "ஆச்சாடா மூர்த்தி? இலை போடலாமா? அப்பா காஞ்சீபுரம் புறப்படப் போறதாச் சொன்னார். பிரயாணத்துக்கு உச்சி வேளை ரொம்ப நல்லதாம்!" என்று துரிதப்படுத்தினாள்.
மூர்த்தி வாழைப்பட்டைகளைச் சிவிக் கொண்டிருந்த போது கூர்மையான கத்தி அவன் கை விரல்களைப் பதம் பார்த்துவிட, குப்பென்று ரத்தம் பெருக "பாகீ." என்று அலறிவிட்டான். பாகீரதி ஓடி வந்து ரத்தப் பெருக்கில் நனைந்திருந்த அவன் விரல்களை ஈரத் துணியால் துடைத்து சுண்ணாம்பு வைத்துக் கட்டினாள்.
"உனக்கு என்னமோ ஆயிருக்கு. உன் புத்தியெல்லாம் எங்கேயோ லயிச்சிருக்கு. என்னதான் நடந்தது? மறைக்காமச் சொல்லுடா! எதுக்கு ரெண்டு தரம் ஸ்நானம் பண்ணினே?" என்று கேட்டாள்.
மூர்த்தி மெளனமாயிருந்தான்.
"பதில் சொல்லுடா? ஏன் பேச மாட்டேங்கறே?" அவன் கழுத்தில் துண்டு போர்த்தியிருந்தான்.
"பிரம்மசாரி மேல்துண்டு போடக் கூடாது. இடுப்பு வேட்டியோடுதான் இருக்கணும்னு சாஸ்திரம் சொல்லுவயே, இன்னைக்கு நீயே போட்டுண்டிருக்கயே!" என்று அவன் கழுத்தைச் சுற்றிப் போர்த்தியிருந்த துண்டை இழுத்து அகற்றியவள், "என்னடா உன் கழுத்து வெறிச்சோடிக் கிடக்கு? சங்கிலி எங்கே?" என்று கேட்டுக்கொண்டே அவன் கழுத்தைத் தடவிப் பார்த்தாள். வாழைத் தண்டு போன்ற வாளிப்பான அவன் கழுத்தை தடவியபடியே, "எத்தனை அழகுடா உன் கழுத்து வாழைத் தண்டு மாதிரி" என்று ரசித்தாள்.
அவனுக்குக் கூச்சமாக இருந்தது.
இதுநாள் வரை என்னைத் தொட்டுப் பேசாத இந்த பாகீரதிக்கு இன்று மட்டும் இத்தனை துணிச்சலும் சுவாதீனமும் எப்படி வந்தது?’ என்று யோசித்தான்.
”சொல்லுடா சங்கிலி எங்கே, சொல்லு, குளிக்கும்போது ஆற்றிலே போயிட்டுதா?"
"ஆமாம்; நானே வெள்ளத்தில் முழ்கிப் போனேன். நல்லவேளை கழைக்கூத்தாடிப் பெண் ஒருத்தி என்னைத் தூக்கிக் கரை சேர்த்தாள். அவள் இல்லையென்றால் இன்று நான் செத்துப் போயிருப்பேன். இரண்டு வாய் தண்ணீர் கூடக் குடித்து விட்டேன்."
"கழைக் கூத்தாடிப் பெண்ணா! அந்த நேரத்தில் அவள் எதுக்கு அங்கே வந்தாள்? சங்கிலியை அவள்தான் எடுத்துப் போயிருப்பாள்."
"அப்படியெல்லாம் பழி போடாதே! அவள் ரொம்ப நல்ல பெண். உத்தமமானவள்..."
"தெருத் தெருவா கூத்தாடி பிச்சை எடுக்கிற பெண் மீது உனக்கேன் இத்தனை கரிசனம் அவளுக்கு ஏன் இத்தனை பரிந்து பேசறே? நானும் பார்க்கிறேன்; ஆற்றிலிருந்து வந்தது முதல் நீ சரியாவே இல்லே. ஏதோ பித்துப் பிடிச்ச மாதிரி இருக்கே! அவள் ஏதாவது சொக்குப் பொடி போட்டு விட்டாளா, என்ன?"
"சீ, சீ!" என்றான் மூர்த்தி.
"எத்தனை வயசிருக்கும்டா அவளுக்கு?"
"பதினாறு பதினேழுக்குள்ளதான். உன் வயசுதான் இருக்கும். உன்னைப் போலவே ரொம்ப அழகா இருக்கா!"
“சரிதான்; அவள் உன்னை மயக்கிட்டா போலிருக்கு? அப்பா கிட்டே சொல்லி கல்யாணம் பண்ணி வைக்கட்டுமா?"
"அவர் ஊருக்குப் போற சமயத்திலே எதையாவது சொல்லி அவர் நிம்மதியைக் கெடுத்துடாதே! வேணாம்!"
பூஜை முடித்து, ஆகாரம் முடித்து கனபாடிகள் மடிசஞ்சியுடன் காஞ்சீபுரம் புறப்படத் தயாரானபோது ஆற்றங்கரை பிள்ளையார் கோயில் அர்ச்சகர் "மூர்த்தி இருக்கானா?" என்று கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்தார்.
“புறப்படும்போதே எதிரில் ஒத்தை பிராம்மணனா? மூர்த்திக்கு என்ன கொண்டு வந்திருக்கே?" என்று கேட்டுக் கொண்டே பரிகாரமாகச் சற்று திண்ணையில் உட்கார்ந்தார் கனபாடிகள்.
“சங்கிலி…”
"சங்கிலியாl."
"ஆமாம்; இந்தச் சங்கிலி ஆற்றங்கரை படித்துறையில் கிடந்தது. இது மூர்த்தி கழுத்தில் இருந்த சங்கிலிதான் என்று எனக்குத் தெரியும். அவனைக் கூப்பிடுங்கோ!" என்றார் அர்ச்சகர்.
இதற்குள் மூர்த்தியே வாசலுக்கு வந்து, "அது உங்க கையிலே கிடைச்சுட்டுதா! நல்லவேளை" என்று வாங்கிக் கொண்டான்.
கனபாடிகள் எதுவும் சொல்லவில்லை. "உள்ளே போய் சுவாமிக்கு முன்னால் வைத்து நமஸ்காரம் பண்ணுடா. உன் தாயார் போட்டுக் கொண்டிருந்த சங்கிலி எனறு உன் அப்பா சொல்லியிருக்கார், நல்ல சொத்து. நான் வரட்டுமா! பாகீரதியைக் கூப்பிடு" என்றார்.
பாகீரதி வந்து நின்றாள், "பாடசாலையைப் பார்த்துக்கோம்மா. நாலே நாளில் திரும்பி வந்துடறேன். உனக்குத் துணையா முனியம்மாவை ராத்திரிலே வந்து படுத்துக்கச் சொல்லு. அநேகமா இன்னைக்கு நொண்டி கிட்டா வந்தாலும் வந்துடுவான். ஜாக்கிரதை, ஜாக்கிரதை" என்று சொல்லிக் கொண்டு புறப்பட்டார்.
பாயசத்தோடு கூடிய பலமான சாப்பாடு ஆனதால், பாடசாலைப் பிள்ளைகள் உண்ட மயக்கத்தில் மூலைக்கு ஒருவராய் உறங்கிக் கொண்டிருந்தார்கள். வாசலில் கல்சட்டி வியாபாரி கட்டைக் குரலில் கூவிக் கொண்டிருந்தான். தோட்டப் பக்கம் கிணற்றடியில் வேலைக்காரி முனியம்மா துணியை அறைந்து துவைக்கும் ஒசை!
"மூர்த்தி! வறயாடா, பல்லாங்குழி ஒரு ஆட்டம் போடலாம். பின்கட்டுப் பக்கம் வா, அங்கே முற்றத்தில் அரிசி வடாம் உலர்த்தியிருக்கேன். காக்கா வராமல் பார்த்துக்கலாம்" என்று கூப்பிட்டாள் பாகீரதி.
"தூக்கம் வரலையா உனக்கு? பாவம், ஓயாம வேலை செய்யறயே!"
"பரவாயில்லடா; பல்லாங்குழி ஆடி ரொம்ப நாளாச்சு. அப்பாகூட இல்லை. வா, வந்து உட்கார்!" என்றாள் பாகீரதி.
என்றைக்குமில்லாத உற்சாகம் தெரிந்தது அவள் குரலில் கனபாடிகளின் கண்டிப்பான கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்ற உற்சாகம்!
சோப்பினால் முகம் கழுவி, தலைவாரி கோடாலி முடிச்சுப் போட்டிருந்தாள். வெறிச்சோடியிருந்த அவள் நெற்றியில் மூர்த்தி மானசீகமாய் ஒரு குங்குமப் பொட்டு வைத்து அழகு பார்த்தான்!
வளையல் குலுங்க பாகீரதி தாயங்களை உருட்டினாள்.
"நீ அடாவடி ஆட்டம் ஆடறே! இந்த அலவான் எனக்குத் தான்" என்றான் மூர்த்தி. "இல்லை எனக்குத்தான்" என்று பல்லாங்குழியை பாகிரதி வேகமாகத் தன் பக்கம் இழுத்தாள். காய்கள் கலைந்து சிதறின. "நீ அடாவடி பண்றே?" என்று எழுந்திருக்கப் போன மூர்த்தியின் கைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்ட பாகீரதி, "உட்காருடா; ஏன் ஒடறே?" என்றாள்.
அந்த மென்மையான பிடியில், ஸ்பரிசத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருந்தன. "அப்படியும் இருக்குமோ?" என்ற அதிர்ச்சியில், பிரமிப்புடன் அவளையே கண் கொட்டாமல் பார்த்து நின்றான் மூர்த்தி.
Like & Follow our Facebook Page to be notified of the new episodes immediately.
----------
தொடரும்...
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.