(Reading time: 4 - 8 minutes)

கருத்துக் கதைகள் – 38. பொறாமை எனும் தீ... - தங்கமணி சுவாமினாதன்

No jealousy

ரு ஊரில் ஏழை விவசாயத் தொழிலாளி ஒருவன் இருந்தான்.அவன் பெயர் பொன்னன்.அவன் ஏழைதான் என்றாலும் தான் உழைத்துச் சம்பாதிக்கும் பொருளில் கொஞ்சமேனும் உதவி என்று கேட்டு வருபவர்களுக்குக் கொடுப்பான்.தன்னாலான உதவியை பிறருக்குச் செய்வான்.மொத்தத்தில் அவன் மிகவும் நல்லவன்.

அவனிடம் பசு மாடு ஒன்றிருந்தது.அதை அவன் மிகுந்த அன்போடும் வாஞ்சையோடும் காப்பாற்றிவந்தான்.

தினமும் அதைக் குளிப்பாட்டுவான்.அதற்கு புல் அறுத்து வந்து சாப்பிடத் தருவான்.எங்காவது பூச்செடிகளில் பூவைப் பார்த்தால் அவற்றைப் பறித்து மாலையாகக் கட்டி அப்பசுவிற்கு மாலையாப் போட்டு அதனைத் தெய்வமாகக் கருதி கும்பிடுவான்.தனியாய் அவன் தெய்வத்தைக் கும்பிடுவதில்லை.காரணம் அவன் கடுமையான உழைப்பாளி.அவனுக்கு நேரமே கிடைக்காது கோவிலுக்குச் செல்ல.சாதாரணமாய் ஒரு பசுவின் உடலில் எல்லா தெய்வங்களும் அனைத்து தேவர்களும் குடியிருப்பதாகவும் பசுவை வணங்கினாலே எல்லா தெய்வங்களையும் வணங்கிய புண்ணியம் கிடக்கும் என்பர்.ஆனால் பொன்னனுக்கு இது பற்றியெல்லாம் தெரியாது.

தினமும் காலை மூன்று லிட்டர் மாலை மூன்று லிட்டர் பாலைத் தந்து தன் குடும்பத்தைக் காப்பாற்றும் தனது பசுவே தனக்கு தெய்வம் என்று நினைப்பான் பொன்னன்.தனது பசு தரும் பால் அனைத்தையும் பொன்னன் தன் குடும்பத்திற்காக மட்டும் பயன் படுத்த மாட்டான்.அவன் வசிக்கும் தெருவில் இருக்கும் ஏழை குடும்பத்துக் பச்சிளம் குழந்தைகளுக்கு காசு வாங்காமல் பால் தருவான்.அருகில் இருக்கும் மாரியாத்தா கோயிலுக்கு யாரிடமாவது அபிஷேகத்திற்கு பால் கொடுத்தனுப்புவான்.யாராவது அவசரத் தேவையென்று வந்து பால் கேட்டால் வைத்துக்கொண்டு இல்லையென்று சொல்ல மாட்டான்.அனியாயமாய் தண்ணீர் கலந்து விற்க மாட்டான்.அத்தெருவில் வசிக்கும் அனைவருக்குமே இவனைப் பிடிக்கும் பக்கத்து வீட்டுப் பெருமாளைத் தவிற....தெரியாமல் செய்யும் புண்ணியத்திற்கும் சரி..பாவத்திற்கு சரி அதனதற்கான பலன் உண்டல்லவா?  இப்படி எல்லோருக்கும் உதவியாய் நல்லவனாய் இருந்த பொன்னனை கடவுளுக்கும் மிகவும் பிடித்தது.அவனுக்கு நல்லது செய்யக் காத்திருந்தார் கடவுள்.

திடீரென என்ன மாயம் ஏற்பட்டதோ தெரியவில்லை.அவனுடைய பசு நன்றாய் புஸுபுஸு வென்று ஆகியது.

வேளைக்கு மூன்று லிட்டர் கொடுத்த அப்பசு வேளைக்கு இருபது லிட்டர் பால் கொடுக்க ஆரம்பித்தது.

பொன்னனுக்கு இதற்கான காரணம்புரியவில்லை.கடவுளல்லவா மாயம் செய்வது.இப்போது அவனிடம் நிறைய பணம் புழங்க ஆரம்பித்தது.அவன் செருக்கடையவில்லை.மாறாக இன்னும் அதிக அளவில் பிறருக்கு உதவி செய்ய ஆரம்பித்தான்.

இவனின் வளர்ச்சி கண்டு பக்கத்து வீட்டுக்காரன் பெருமாளுக்கு இவன் மீது மிகுந்த பொறாமை ஏற்பட்டது.

பொன்னனின் வளர்ச்சிக்கு அவனிடம் இருக்கும் பசுவே காரணம் என நினைத்த பெருமாள் அவனிடமிருந்து அப்பசுவைப் பிரிக்க நினைத்தான்.திட்டம் போட்டான்.

அத்திட்டத்தைச் செயலாக்குவதில் தானே நேரிடையாக ஈடுபட்டால் எங்கே ஊரார் கண்டு பிடித்துவிடுவார்களோ என்ற அச்சத்தில் பக்கத்து ஊருக்குச் சென்று அவ்வூரில் இருந்த மாடுபிடித் திருடன் ஒருவனிடம் நிறையப் பணம் தருவதாகவும் பொன்னனின் மாட்டை இரவோடிரவாக திருடிச் செல்லும் படியாகவும் சொல்லிப் பணம் கொடுத்தான்.

சரியென்று ஒப்புக்கொண்ட அம்மாட்டுத் திருடன் ஒரு நாள் இரவு ..நடு நிசியில் பொன்னனின் வீட்டின் பின்புறம் மாட்டுத் தொழுவத்தில் கட்டப்பட்டிருந்த பசுவைத் திருடிச் செல்ல எண்ணி அதன் கழுத்துக் கயிற்றை அவிழ்க்க எத்தனித்தான்.அப்போது பாம்பு ஒன்று அவன் மீது சீறிப் பாய்ந்தது.அவன் பயந்து ஓடிவிட்டான்.மீண்டும் ஒரு நாள் முயல அன்றிரவு காற்றும் மழையும் கடுமையாய்த் தாக்க அவன் பெருமாள் வீட்டிலேயே தங்க நேர்ந்தது.

அப்படி அத் திருடன் பெருமாள் வீட்டில் தங்கி இருந்தபோது விலையுயர்ந்த பொருட்கள் வீட்டில் இருந்ததையும் பெருமாளின் மனைவி நிறைய நகைகள் அணிந்திருந்ததையும் பார்த்தான்.ஒரு முடிவுக்கு வந்தான் அத்திருடன்.

பெருமாளின் மனைவியின் தந்தை இறந்துவிட வீட்டைப் பூட்டிக்கொண்டு மனைவியோடு மாமியார் ஊருக்குப் போனான் பெருமாள்.

இவன் வீட்டையே கண்காணித்துக் கொண்டிருந்த அந்த மாட்டுத் திருடன் இதுதான் சமயமென்று பெருமாள் வீட்டில் இருந்த விலையுயந்த பொருட்கள்,பணம் நகைகள் அனைத்தையும் ஆட்டையைப் போட்டுவிட்டான்.

திரும்பி வந்த பெருமாள் வீடு சுத்தமாகத் துடைக்கப் பட்டிருப்பதைக் கண்டு கதறி அழுதான்.பொன்னனின் வளர்ச்சி கண்டு பொறாமைப் பட்ட தனக்கு ஆண்டவன் தந்த தண்டனை இது என உணர்ந்தான்.

முதலை வாயில் சென்ற உயிரினமும்..திருட்டுப் போன பொருட்களும் அவ்வளவு எளிதாய் திரும்பக் கிடைத்து விடுமா என்ன..?

 

கதை சொல்லும் கருத்து:

பொறாமைக்கிடம் கொடேல்...

Story # 37 - Mana Azhutham

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.