(Reading time: 6 - 11 minutes)

சிறுகதை - காலம் மாறிப்போச்சு - K.சௌந்தர்

Necklace

நிர்மலா வேக வேகமாக கடைக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். அன்று ஞாயிற்றுக்கிழமை. காலையில் எழும்போதே கணவர் சந்திரனிடம்   

"என்னங்க..எங்க தங்கச்சி பொண்ணு ருச்சிகாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம். நா நகைக் கடைக்குப் போயி நல்ல டிஸைனா ஒரு அஞ்சு பவுன் நெக்லஸ் எடுக்கணும். இன்னிக்கு காலைல போகலாம்னு இருக்கேன், வர்றதுக்கு சாயங்காலம் ஆகிடும். உங்களுக்கு சாப்பாடு ஹாட் பேக்கில் வச்சுடறேன். சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க " என்றாள்.

"இரும்மா..இப்போ என்ன அவசரம், கல்யாணத்துக்கு ஒருவாரம் முன்னாடி எடுத்தா போதாதா..இதுக்காக ஏன் இவ்ளோ அலையறே" என்றார் சந்திரன்.

"ஆமாம்..இதுவே உங்க சொந்தக் காரங்களா இருந்தா இப்பிடி சொல்லுவீங்களா..." என்றாள் எகத்தாளமாக.

"நிறுத்து நிம்மி...நா அப்படிப் பட்டவன் இல்லைன்னு உனக்கே தெரியும் . முதல்ல

நீ என்ன நகை எடுக்கப் போறேன்னு உன் தங்கச்சி பொண்ணு கிட்ட பேசி முடிவு பண்ணு. இல்லைன்னா தங்கக் காசா எடுத்து வச்சிடு. அவுங்க இஷ்ட்டத்துக்கு நகை செய்துக்குவாங்க.  நீ ஏதாவது எடுத்து அவுங்களுக்குப் பிடிக்காமப் போயிடப் போவுது" என்றார் சந்திரன்.  

"அது எப்பிடி பிடிக்காமப் போகும்? அவளுக்கு என்ன டிசைன் அழகா இருக்கும்னு எனக்குத் தெரியாதா என்ன? நா எப்படி எடுத்துக் கொடுத்தாலும் அது என் பாசத்தின் வெளிப்பாடு  இல்லையா.. அது எப்படி அவளுக்கு பிடிக்காம போகும்? எங்க பாட்டி எனக்கு எடுத்துப்போட்ட ஒற்றைக்கல் மோதிரத்தை இன்னும் அவுங்க ஞாபகமா வச்சிருக்கேன் தெரியுமா? உங்களுக்கு நா கடைக்குப் போகாம வீட்டிலேயே இருந்து உங்களுக்கு சண்டே ஸ்பெஷல் பிரியாணி செய்ஞ்சு தரணும்னு ஆசை. அதால தான் இப்பிடி இல்லாத காரணங்களா சொல்லி தட்டிக் கழிக்கறீங்க" என்றாள்.

“ஹீம் நீ என்னிக்குத்தான் நா சொல்றதக் கேட்டிருக்கே. உன் இஷ்ட்டம்.  அப்புறமா நீ வருத்தப் படக்கூடாதுன்னுதான் நா இதை சொன்னதே. போயிட்டுப் பொறுமையாவே வா . நா பக்கத்துல இருக்கற லைப்ரரி போயி வர்றேன்" என்றபடி தானும் கிளம்பினார் சந்திரன்.

சந்திரன் ஒரு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்.  நிர்மலாவும் ஓய்வு பெற்ற ஆசிரியைதான்.  அவர்களது ஒரே மகள் நீலிமாவை திருமணம் செய்து கொடுத்துவிட்டனர்.

மகளும் மருமகனும் போனவருடம் லண்டன் சென்று விட்டனர். இவர்களையும் தங்களுடன் வரும்படி மகள் வற்புறுத்திக் கொண்டே இருந்தாள். நிர்மலாவுக்கு சொந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு அங்கு போவதில் விருப்பமில்லை. அதனால் தட்டிக் கழித்துக் கொண்டே இருந்தாள்.  

மாலை நேரம் . ஷாப்பிங் முடித்த களைப்பில் கால்நீட்டி அமர்ந்திருந்தாள் நிர்மலா. லைப்ரரிக்கு சென்றிருந்த சந்திரன் அப்போதுதான் உள்ளே நுழைந்தார்.

"ஓ நீ வந்தாச்சா.. நா சீக்கிரம் வந்து உனக்கு காபி போட்டு வைக்கணும்னு நெனைச்சேன், ஆனா என்னோட பால்ய ஸ்நேகிதன் வைரமணியை வழியில பாத்துட்டேனா அதான் கொஞ்சம் லேட்டாயிடுச்சி" என்றபடி ஈசீச்சேரில்  சாய்ந்தார்.

"அய்யய்யோ  நீங்க காபி போட நெனைச்சீங்களா... ? நல்ல வேளை ஒரு பெரிய ஆபத்திலேர்ந்து தப்பிச்சேன்” என்று சிரித்தபடி, “சரி இந்த நெக்லசைப் பாருங்க எப்படி இருக்கு?" என்று நகைப் பெட்டியை திறந்து காண்பித்தாள் நிர்மலா.

இரட்டை வடமாக  முத்துக்கள் போன்ற டிசைனில் நெக்லஸ் மிகவும் அழகாகவே இருந்தது.

"ரொம்ப நல்லாருக்கு, ஆனா இது அவளுக்குப் பிடிக்குமா?" என்றார்.

“பிடிக்காமல் என்ன ...இது என்னோட செலக்ஷன். கண்டிப்பா நல்லாதான் இருக்கும். அவ எப்போதுமே இத கழுத்திலேயே போட்டுக்கிட்டு இருக்கப்போறா பாருங்க" என்றாள் நிர்மலா.

அவளைப் வினோதமாகப் பார்த்தார் சந்திரன். இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு வெகுளி இருக்க முடியுமா? பணம்தான் முக்கியம் என்று இருக்கும் இந்தக் கால உறவினர்களிடம் பாசமே முக்கியம் என்று கருதும் தன் மனைவி காயப்பட்டுவிடக் கூடாதே என்ற ஆதங்கம் அவருக்கு. எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டால் ஏமாற்றம் வராது இல்லையா? ஆனால் இதையெல்லாம் அவர் சொன்னால் ஏற்கும் நிலையில் அவள் இல்லை.

எனவே "அப்படி நடந்தா சந்தோஷம்தான்" என்று கூறிவிட்டு எழுந்து உள்ளே சென்றார் சந்திரன்.

திருமணம் நல்லபடியாக முடிந்தது. திருமணத்திற்கு நெக்லசை பெருமையுடன் அணிவித்தாள் நிர்மலா. அதோடு “இது எப்பவுமே உன் கழுத்திலேயே கிடக்கவேணும்டி" என்று எல்லோர் காதிலும் விழும்படி அன்புக் கட்டளை இட்டாள். அடுத்த வாரம் விருந்துக்கு வரும்படி முறைப்படி மணமக்களுக்கு அழைப்பு விடுத்துவிட்டு இருவரும் வீட்டுக்கு வந்து விட்டனர்.

மறுவாரம் வீட்டில் விருந்து தடபுடலாக நடந்தது. ஒருவாறு விருந்து முடிந்து எல்லோரும் திரும்பி சென்ற பின் சந்திரன் முன் மிகவும் அமைதியாக வந்து அமர்ந்தாள் நிர்மலா.

"என்ன நிம்மி, இப்போ உனக்கு முழு திருப்தி தான் இல்லையா? " என்றார்.

ஆனாலும் அவர் மனத்தில் ஒரு சந்தேகம். அந்தப் பெண்ணின் கழுத்தில் வைர நெக்லஸ் தான் டாலடித்ததே தவிர நிர்மலா அணிவித்த தங்க நெக்லசைக் கணவில்லை. ஒருவேளை நிர்மலா அதை கவனிக்கவில்லையோ? என்று அவர் யோசிக்கும்போதே நிர்மலா பேசினாள் "நீங்க சொன்னது தாங்க சரி. நா கடை கடையா ஏறி டிசைன்  பாத்து வாங்கினது வீண்தான். அவளுக்கு அந்த டிசைன் பிடிக்கலை போலருக்கு. அவள் அந்த நகையை உருக்கி தங்கக் கொலுசு செய்துக்கப்போராளாம். தங்கக் கொலுசுதான் இப்போ பேஷனாம். இதுக்காகவா நா இவ்ளோ கஷ்ட்டப்பட்டு கடை கடையா ஏறி வாங்கினேன்?" என்று பெருமூச்சு விட்டாள்.

"தப்பு நம்ம மேலயும் இருக்கு நிம்மி. இது உன் காலம் போல இல்லை. நீ அந்தக் காலத்துல பாசத்துக்கு மதிப்பு குடுத்து உங்க பாட்டி போட்டுவிட்ட மோதிரத்த இன்னும் கழட்டாம இருக்கற மாதிரி இந்தக் காலத்து பசங்க இருப்பாங்கன்னு எதிர்ப்பாத்தது தப்புதானே? இதுவே நீ தங்கக் காசா எடுத்து வச்சிருந்தீன்னா உனக்கு வீண் அலைச்சலும் இல்லை. இந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிருக்கும். எதிர்பார்ப்பு இல்லைன்னா ஏமாற்றமும் இல்லை. காலம் மாறிக்கிட்டு வருது.  அதுக்கேத்தாப்ல நாம தான் மாறியாகணும்" என்றார் சந்திரன்.

முதல் தடவையாக அவர் சொன்னதை முழுவதும் ஒப்புக்கொண்டு தலையசைத்தாள் நிர்மலா. 

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.