யாரும் எப்போதும் அசோகரைப் பற்றிக் குறைவாகப் பேசியதே கிடையாது. உலக முழுவதும் போற்றும் அவருடைய பெருமைகளைக் கேட்டுக் கேட்டு, தானும் அவரைப்போல் பெருமைக்காளாக வேண்டுமென்ற ஓர் ஆசை அவன் உள்ளத்தின் அடியிலே ஊறியது. எல்லாவற்றுக்கும் முதலாக அவன் தன் காட்டை அசோகரின் ஆட்சியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தான். தன் ஆட்சியில் நாடு வரும்போது, நிச்சயமாக அடிமைத் தளையை உடைத்தெறிந்து சுதந்திர ஆட்சியை நிலைநாட்ட வேண்டுமென்று அவன் வீர உள்ளம் துடித்துக் கொண்டிருந்தது. தன் காட்டை அடிமைப்படுத்தி யிருப்பவர் என்ற முறையில் அவனுக்கு அசோகர் மீது ஒரளவு வெறுப்பு இருந்தபோதிலும், அவருடைய புகழைக் கேட்டு கேட்டு அவரைத் தன் இலட்சிய நாயகராக அவன் ஏற்றுக் கொண்டிருந்தான். அந்த இலட்சிய நாயகரைக் காணப் போகிறோம் என்ற நினைப்பில் அவன் மனம் கிளர்க் தெழுந்தது வியப்பிற்குரியதல்லவே!
அசோகர் வரும் நேரத்தை எதிர்பார்த்து அவன் ஆவலோடு காத்திருந்தான். அவன் கொண்டு வந்த மான் அன்று சிறப்பான கறியாகச் சமைக்கப்பட்டிருந்தது.
மாலை உணவுக்குத்தான் அசோகர் வருவதாக இருந்தார். எனவே அந்திப் பொழுது நெருங்க நெருங்க அரண்மனையில் எல்லோரும் சுறுசுறுப்பாகவும் பரபரப்பாக வும் வேலைகளைக் கவனிக்கலானார்கள். கோட்டை வாயிலிலேயே, மன்னர் மாமன்னரை எதிர் கொண்டு வரவழைக்க ஆயத்தம் செய்யப்பட்டது.
கதிர் மறைய இன்னும் ஒரு காழிகைப் பொழுது இருந்தது.
வீரமுரசம் அதிர்ந்தது.
தொடர்ந்து கணகணவென்ற மணியோசை எழுந்தது.
புத்தம் சரணம் கச்சாமி !
தருமம் சரணம் கச்சாமி !