சிறுகதை - நல்லவராவதும் தீயவராவதும் - ரெ.கார்த்திகேசு
ஏலக்காய் போட்டதனால் இறைச்சிக் குழம்பிலிருந்து கும்மென்று மணம் வந்தது. அடுப்பினடியில் உட்கார்ந்திருந்த பார்வதிக்கு வியர்த்துக் கொட்டியது. இருந்தாலும் இன்று இப்படி உட்கார்ந்து பிள்ளைகளுக்குச் சமைப்பதில் மகிழ்ச்சி இருந்தது. இரண்டு வாரங்களாகத் தொடர்ந்து அதிகாலை ஷி·ப்டும் ஓவர் டைமுமாக சனி ஞாயிறு உட்பட உழைத்ததில் வீட்டில் சமைக்க முடியவில்லை. பிள்ளைகள் ரொட்டியும் கடையில் வாங்கிய குழம்புமாக கிடைத்ததைத் தின்றுவிட்டுப் பள்ளிக்கூடம் போவதைத் தொழிற்சாலையில் இருந்த நேரத்திலெல்லாம் நினைத்துக் கவலைப் படுவாள் பார்வதி.
இன்றையிலிருந்து ஒரு வாரத்துக்கு மத்தியான ஷி·ப்ட். காலையில் மார்க்கெட் போய் பிள்ளைகளுக்குச் சமைத்து வைத்து விட்டுத் தானும் சாப்பிட்டுப் போகலாம். ஐந்தாம் வகுப்பில் படிக்கும் சின்னவள் லட்சுமிக்குக் காலைப் பள்ளிக் கூடம். பஸ் ஸ்கோலாவில் போய் வந்து தானாகப் போட்டுச் சாப்பிடுவாள். பெரியவன் முத்தையா இரண்டாம் பாரம் படிக்கிறான். மத்தியானப் பள்ளிக் கூடம். சைக்கிளில் போவான். அவனை உட்கார வைத்து சாப்பாடு போட்டு அனுப்பலாம்.
கறி அடுப்பில் பாதி கொதித்துக் கொண்டிருக்க வியர்வையை வழித்தவாறு அவள் திரும்பிய போது முத்தையா பள்ளிச்சீருடையெல்லாம் போட்டுக் கொண்டு தயாராக நின்றான். அவளுக்கு வியப்பாக இருந்தது. இப்போதுதானே மணி பதினொன்று! அதற்குள் ஏன் இவன்...?
"என்ன முத்தையா, அதுக்குள்ள கிளம்பிட்டே?" என்றாள்.
"இன்னைக்கு டெஸ்ட் இருக்கும்மா. அதினால நானும் ·பிரன்டும் அவன் வீட்டில வெள்ளன உக்காந்து கொஞ்ச நேரம் படிக்கப் போறோம்" என்றான்.
அவளுக்கு சந்தோஷமாகவும் ஏமாற்றமாகவும் இருந்தது. முன்பெல்லாம் நன்றாகப் படிக்கிற பிள்ளைதான். ஆனால் போன வருஷத்திலிருந்து அவனுக்கு மார்க்கெல்லாம் குறைந்து விட்டது. தான் வீட்டிலிருந்து அவனைப் படிக்கச் சொல்லி ஒழுங்காகக் கவனிக்க முடியாததுதான் காரணம் என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு அதிகமாக இருந்தது. ஆகவே பிள்ளை தானாகவே டெஸ்டுக்குப் படிக்கப் போகிறேன் என்று கிளம்பியது அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இன்றைக்கென்று சாப்பிடாமல்...