(Reading time: 4 - 8 minutes)

அதிர்ஷ்டம் - சாரதா

அதிர்ஷ்டம்

டிசம்பர் 19,இன்று அர்ஜுன்-சாரு தம்பதியரின் முதல் மாத திருமண நாள். சென்ற மாதம் 19-ஆம் தேதியன்று சாரு கழுத்தில் திருமாங்கல்யம் அர்ஜுன் அணிவித்தான். அன்று முதல் பொருத்தமான ஜோடி என பலரும் புகழும் அளவிற்கு மகிழ்ச்சியாய் இருந்தனர்.

 

 அர்ஜுன் வேலை முடிந்து வீட்டிற்கு வந்தாலே 'சாரு','சாரு' தான்.அவனது அலுவலகத்தில் நடந்த சம்பவங்களை சுவாரிஸ்யமாய் சாருவிடம் வர்ணிப்பான். அவளும் வீட்டுற்கு பக்கத்து வீட்டு ரமணி மாமியின் சமையல் குறிப்புகளையும் அதை ரமணி மாமி சுவைப்பட கூறியதையம் அர்ஜுனிடம் விவரிப்பாள். நாட்கள் இனிமையாகவே கழிந்தன.

 

 ஆனால், இன்று முதல் மாத திருமண நாள் கொண்டாடவென்று மாலையில் ஹோட்டல் சென்று வந்ததிலிருந்து அர்ஜுன் முகமே சரியில்லை. ஆசையாய் வருவித்த உணவை சற்று நேரம் வளவளத்துக் கொண்டே சாப்பிட்டா அர்ஜுன், சிறிது நேரத்திற்கு பிறகு, அவனிடம் மௌனம மட்டுமே பதிலாய் இருப்பதை உணர்ந்த சாரு, அவனை வற்புறித்தி சாப்பிட வைத்தாள். பின்னர் இருவருமாய் வீட்டுற்கு திரும்பி வந்தார்கள்,

 

தன் பின்னும் அமைதியாய் இருந்த அர்ஜுனின் மௌனத்தை கலைக்க விரும்பிய சாரு, அவனிடம் சென்று "இது உங்களுக்காக அர்ஜுன்" என்று ஒரு கிரிஸ்டல் பிள்ளையாரை கொடுத்தாள். அவனுக்கு சிறு வயதிலிருந்தே பிள்ளையார் என்றால் உயிர். 'பரிட்சைக்கு போகும்போது கூட ஒரு சிறு பிள்ளையார் இணைந்த கீசெயினை கொண்டு போவேன்' என்று அர்ஜுன் ஒருமுறை சாருவிடம் சொல்லி இருந்தான். அந்த கீசெயின் தொலைந்தது நினைத்து வெகுநாள் வருத்தப்பட்டானாம். அதை நினைவில் வைத்து அழகிய கிரிஸ்டல் பிள்ளையாரை அவனுக்கு சாரு பரிசளிக்க அவனது முகம் தெளிந்தது.

 

 பின்னர் சாருவை நேராகப் பார்த்து "நான் உன்கிட்ட ஒன்று சொல்லனும், சாரு" என்றான்.

 

 "ஒன்று மட்டுமல்ல இரண்டு, மூன்று எல்லாம் சொல்லுங்க, எனக்கு ஒற்றை இலக்க எண் நன்றாகத் தெரியும்" எனக் கூறி அர்ஜுனின் முகத்தில் முறுவலை வரவழைத்துவிட்டு பின்னர் "எதுவானாலும் சொல்லுங்க" என்று ஊக்கினாள் சாரு.

 

 "வந்து இதை நீ எப்படி எடுத்துப்பனு தெரியல சாரு. ஆனா என்னை தப்பா மட்டும் நினைக்காதேடா. இதை உன்கிட்ட முதல்லயே சொல்லனும் நினைச்சேன், ஆனா தயக்கமாய் இருந்தது" என்று மென்று முழுங்கினான் அர்ஜுன்.

 

 அமைதியாய் அதை பார்த்து கொண்டிருந்த சாருவின் முகத்தை பார்த்த அர்ஜுன் மீண்டும் தயங்க சாருவே "சுபியை பத்திதான்னா தைரியமாய் சொல்லுங்க" என்று கூற ஒரு நிமிடம் அதிர்ச்சி ஆனான் அர்ஜுன்.

 

 "உனக்கு தெரியுமா சாரு? எப்போ? எப்படி?" என்று பரபரத்தான் அர்ஜுன்.

 

 நிதானமாய் "உங்க அம்மா தான் சொன்னாங்க. நம்ம கல்யாணத்திற்கு முன்னாடியே" என்றாள் சாரு.

 

 அதிசயமாய் அர்ஜுன் பார்க்க, சாரு தொடர்ந்தாள் "நீஙகள் சுபியை விரும்பினீஙக, அவளும்தான் விரும்பினா. ஆனா அவ விரும்பினது உங்கள இல்ல உங்களோட பணத்த மட்டும் தான். உங்களவிட அதிகம் சம்பளம் வாங்குறவன பார்த்ததும் அவ மாறிட்டா. நீங்களும் சரியான நேரத்துல அவள புரிஞ்சுக்கிட்டு அவள விட்டு விலகிட்டீங்க. இதுல உங்க மேல என்ன தப்பு இருக்கு சொல்லுங்க?".

 

 "அவ கூட பழகியும் அவளப் பத்தி நான் புரிஞ்சிக்காம, துளிக்கூட சந்தேகப்படாம இருந்தேனே, நான் எவ்ளோ முட்டாளா இருந்திருப்பேன், இல்ல சாரு" என்றான் அர்ஜுன்.

 

 "அப்படி என்ன பெருசா பழகுனீங்க. கடை கடையாய் சுத்தி ஷாப்பிங் பண்றதுக்கு பேரு பழகுறது இல்லங்க. அதுமட்டுமில்லாம எப்பவும் சந்தேக கண்ணோட இருக்க முடியுமா என்ன? அப்பவும் நீங்க தான் அவ பழகினது உண்மை அல்ல பொய் என்று கண்டுபிடிச்சீங்க. அவ குணம் புரியவும் அவள விட்டு விலகிட்டீங்க. உங்களைவிட சம்பளம் கூட வாங்குற ஆளப் பார்த்து அவளும் செட்டில் ஆகிட்டா. இன்றைக்கு ஹோட்டல்ல உங்க முகம் மாறவும் உங்க பார்வைய தொடர்ந்த எனக்கு எதிரே இருந்தவங்கதான் சுபின்னு புரிஞ்சுதுங்க" என்றாள் சாரு.

 

 "இதைப்பற்றி உன்கிட்ட முதல்லயே சொல்லனும்னு நினைச்சேன்டா. ஆனா எல்லா பெண்களுக்குமே தன்னோட கணவனுக்கு வேற எந்த காதலும் அவங்க வாழ்க்கையில இருக்க கூடாதுன்னு நினைப்பாங்க. எனக்கும் சுபிக்கும் இருந்தது காதல் இல்லனும் உன்கிட்ட பழகின பிறகு எது காதல்னும் புரிஞ்சிதடா. ஆனா நீ என்ன தவறா புரிஞ்சிக்க கூடாதுனுதான் சொல்லல" என்று தன்னிலை விளக்கம் அளித்தான் அர்ஜுன்.

 

 "புரியுதுங்க. எனக்கு தான் அத்தைய சின்ன வயசுல இருந்தே தெரியுமே. பக்கத்து வீடு வேற. அதான் இந்த விஷயத்தால நமக்குள்ள எந்த குழப்பமும் எப்பவும் வந்திடக் கூடாதுன்னு நீங்க சொன்ன எல்லாவற்றையும் அத்தை நம்ம கல்யாணத்துக்கு முன்னாடியே என்கிட்ட சொல்லிட்டாங்க. நீங்களே அது காதல் இல்லனு புரிஞ்சிகிட்டதுக்கப்புறம் அத பத்தி எதுக்கு பேசணும்னுதான் நான் உங்ககிட்ட் எதுவும் கேட்டுகல." என்றாள் சாரு.

 

 "உண்மையான காதலுக்கு அப்பழுக்கு இல்லாத அன்பும், நம்பிக்கையும் தான் முக்கியம். அந்த உண்மையான காதலோட எனக்கு நீ கிடைச்சது என்னோட அதிர்ஷ்டம் தான் இல்ல சாரு" என்று சாருவை நோக்கி கண்சிமிட்டியபடியே அர்ஜுன் அவளது கரத்தில் தனது முதல் மாத திருமண நாள் பரிசான பிரேஸ்லட்டை அணிவித்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.