(Reading time: 3 - 6 minutes)

சந்தோஷம் - வத்சலா

ன்று என் மகனுக்கு பள்ளித்தேர்வு முடிவுகள் வெளிவந்திருந்தன.

நல்ல மதிப்பெண்களுடன் நான்காவது வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்புக்கு போயிருந்தான்.

Santhoshamமனம் கொள்ளாத உற்சாகத்துடன், அவன் உடன் படிக்கும் நண்பர்களும் வீட்டுக்கு வந்திருந்தார்கள்.

எல்லாருமே சந்தோஷத்தில் மிதந்து கொண்டிருந்தார்கள்.

'சூப்பர்டா கணக்குலே ஏ பிளஸ்ஸா?. கலக்கிட்டே' என்று நான் மகனிடம் சொல்ல, அவன் முகத்தில் அப்படி ஒரு பெருமை.

அவன் நண்பன் சுனில் தன் மதிப்பெண் பட்டியலை என்னிடம் காட்டினான்

'நீ ஹிந்தியிலே 'ஏ' பிளஸ்ஸா. சூப்பர்டா. உன் மணி மணியான   கையெழுத்துக்கு நூத்துக்கு நூத்திபத்து போடலாம். சூப்பர் போ' அவன் கண்களில் அப்படி ஒரு மகிழ்ச்சி.

வாங்கி வைத்திருந்த பேனாக்களையும். ஸ்டிக்கர்களையும் பிள்ளைகளுக்கு பரிசளித்துவிட்டு, அவர்களுக்கு சாப்பிட டிபன் கொடுத்து, அவர்களை வீட்டுக்கு அனுப்பினேன்.

நானும் சாப்பிட்டு நிமிர்ந்தபோது,  ஒலித்தது அழைப்பு மணி.

வாசலில் நின்றிருந்தாள் அனிதா.

அனிதா எனது இன்னொரு கை.

என் தினமும் வீட்டில் பாத்திரம் தேய்த்து, வீடு பெருக்கி துடைப்பது அனிதா.

ஒரு நாள் அவள் வரவில்லை என்றால் அவள் தினமும் எவ்வளவு பொறுமையாக, எவ்வளவு வேலைகளை  செய்கிறாள் என்ற உண்மை தன்னாலே புரிந்துவிடும்.

அவளுக்கும் சாப்பிட டிபன் கொடுத்தேன்.

ஊர் கதைகளையும், உலக நடப்புகளையும் என்னுடன் பேசிக்கொண்டே ( அனிதாவோட பேசிட்டிருந்தாலே கதை எழுத நிறைய நாட் கிடைக்கும்) சாப்பிட்டு முடித்துவிட்டு சமயலறையில் இருந்த பாத்திரங்களை நிதானமாய் தேய்த்து முடித்தாள் அனிதா.

பிள்ளைகள் வந்து விளையாடிவிட்டு சென்றதை தரையில் சிதறிக்கிடந்த பொருட்கள் காட்டிக்கொண்டிருந்தன.

எல்லாவற்றையும் எடுத்து வைத்து பொறுமையாக வீட்டை பெருக்கி துடைத்தாள் அனிதா.

அதையே பார்த்துக்கொண்டிருந்த என் மகன் சட்டென சொன்னான் 'ஆன்ட்டி வீடு சூப்பர் கிளீன். எப்படி ஆன்ட்டி இவ்வளவு சீக்கிரம் இவ்வளவு நீட்டா ஆகிட்டீங்க?

னிதாவின் கண்களில் பளீரென ஒரு சந்தோஷ மின்னல்.

'நிஜமாவே நல்லா கிளீனா இருக்கா.? நீட்டா இருக்கா?' குரலில் கலந்திருந்த சந்தோஷத்துடன் கேட்டாள் அனிதா.

'சூப்பரா இருக்கு' என்றான் என் மகன்.

அனிதாவின் முகம் மலர்ந்து போயிருந்தது. நான் அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்று முன் நான் மனதார பாராட்டிய போது அந்த சின்ன குழந்தைகளின் கண்களில் தெறித்த அதே பெருமையும், ஆனந்தமும். இப்போது அனிதாவின் கண்களில்  தெறித்துத்கொண்டிருந்தது.

நிஜமாகவே இரண்டுக்கும் எந்தவொரு வித்தியாசமும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.

மாதாமாதம் முதல் தேதி  சம்பளம் கொடுக்கும் போதோ, பண்டிகை நாட்களில்  அனிதாவிற்கு ஏதாவது பரிசு கொடுக்கும் போதோ கூட நான் அவள் கண்களில் சந்தோஷத்தை பார்த்திருக்கிறேன். ஆனால் இது அதையெல்லாம் விட நிறைவான சந்தோஷமாக தோன்றியது.

எல்லார் மனமும் இதற்குதான் ஏங்கி கிடக்கிறதா என்ன? இன்று புதிதாக ஒரு பாடம் கற்றுக்கொண்டது போல் தோன்றியது.

ப்போதெல்லாம் அனிதாவை அடிக்கடி பாராட்ட துவங்கி இருக்கிறேன்.

'இந்த பாத்திரம் அடி பிடிச்சு கருப்பா இருந்தது. நீ இவ்வளவு சீக்கிரம் இதை அழகா தேய்ச்சிட்டியே. நான் தேய்ச்சியிருந்தா, கால் மணி நேரம் ஆகி இருக்கும்'

'நேத்திக்கு என் மாமியார். குக்கர் இவ்வளவு பளபளப்பா இருக்கே யார் தேச்சதுன்னு? அசந்து போய் கேட்டாங்க. அனிதாதான் சொன்னேன்.

அழகாய் சிரிக்கிறாள் அனிதா.

சந்தோஷம். இருவருக்குமே மகிழ்ச்சி. இருவருக்குமே மன நிறைவு. அடுத்த வீட்டில் சென்று வேலையை தொடர்வதற்கு அவளுக்கு ஒரு 'இன்ஸ்டன்ட் எனர்ஜி'.  

உங்கள் வீட்டில் யாரவது வேலை செய்தால் நீங்களும் முயன்று பாருங்களேன்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.