இனிப்பு – சுமதி
ராஜம் வேலையெல்லாம் முடித்து திரும்பும் பொழுது வளர்மதி ராஜம் கையில் ஒரு இனிப்பு பொட்டலம் கொடுத்தாள். ராஜம் வளர்மதி வீட்டில் வீட்டு வேலை மற்றும் தோட்ட வேலை செய்பவள் . அன்று அவர்கள் வீட்டில் விசேஷம் என்பதால் செய்த இனிப்பு கொஞ்சம் ராஜத்துக்கும்.
ராஜம் இது மாதிரி இனிப்பெல்லாம் சாப்பிட்டு வருடங்கள் பல ஆகிவிட்டன . நன்றாக வாழ்ந்தவர்கள் தான் அவர்களும் . அவள் கணவன் சிறு வயதிலேயே தவறிவிட்டான். அவளுக்கு ஒரே மகன் செந்தில் . கஷ்ட்டப்பட்டு ஆளாக்கினாள். அவன் நிறைய பணம் சம்பாதிக்க வெளிநாடு செல்கிறேன் என்று போனவன் தான் . அவன் செல்லும் பொழுது அவனுக்கு திருமணமாகி அவன் மனைவி வானதி கர்ப்பவதி . குழந்தை குமரனும் பிறந்து அவனுக்கு ஐந்து வயதாகிறது . செந்தில் என்ன ஆனான் எப்படி இருக்கிறான் என்று ஒரு தகவலும் இல்லை . செந்தில் திரும்ப வருவான் என்ற நம்பிக்கையும் மங்கிவிட்டது. ராஜமும் அவள் மருமகள் வானதியும் வீட்டு வேலை செய்து குமரனை படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்கள் . குமரன் தான் அவர்கள் வாழ்கையின் ஒரே நம்பிக்கை . ஆதாரம் . எல்லாமும் .
குமரன் பள்ளியிலிருந்து வருவதற்காக ராஜம் ஆவலுடன் காத்துகொண்டிருந்தாள் . அவன் வந்ததும் அவனுக்கு இனிப்பை ஆசையுடன் நீட்டினாள் .
“என் ராசா .. இனிப்பு சாப்பிடு கண்ணு ”.
அவன் அதில் கொஞ்சம் சாப்பிட்டு பார்த்துவிட்டு
“ஐயே பாட்டி இது நல்லாவே இல்லை .. நீயே சாப்பிடு … இந்தா ” என்று கொடுத்துவிட்டு வீட்டினுள் சென்றான் .
ராஜத்தால் இதை தாங்க முடியவில்லை. அவளுக்கு கண்ணில் நீர் பெருக்கெடுக்க ஆரம்பித்துவிட்டது . அவள் சாப்பிட்டும் பார்த்தாள். ருசியாகத்தான் இருந்தது . அவள் பாசத்தை புரிந்துகொள்ளாமல் பேசிவிட்டானே என்று அங்கலாயித்துகொண்டே பக்கத்தில் உள்ள கோவிலுக்கு நடக்க ஆரம்பித்தாள்.
இதே சமயம் வீட்டுக்குள்ளே நடந்த உரையாடல் – வானதி குமரனிடம்
“ஏன்டா இப்படி பேசினே …உன் பாட்டி மனசை புண்படுத்தலாமா சொல்லு ?” என்று கோபமாக கேட்டாள் .
அதற்கு குமரனோ
“ அட போம்மா எந்த நல்ல சாப்பாடு கிடைத்தாலும் பாட்டி எனக்கு தான் கொடுக்குது . இன்று ஒரு நாளாவது அது சாப்பிடட்டுமே என்று தான் அப்படி பேசினேன் . அது இந்த மாதிரி இனிப்பு சாப்பிட்டு எவ்வளவு நாள் ஆகி இருக்கும் … இப்போ ஒண்ணுமில்ல … பாட்டி வந்தவுடன் நான் போய் ஆசையா பாட்டின்னு கூப்பிட்டா அது ரொம்ப சந்தோசமாயிடும் … நான் பார்த்துக்கறேன்ம்மா” என்று பெரிய மனுஷத்தோரணையில் பேசிக்கொண்டு இருந்தான் .
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.