(Reading time: 7 - 14 minutes)

சொத்து - ஸ்வேதா

" ப்பா!!?? " கடுப்பில் இருந்தான் வினோத். ஹைதராபாத்திலிருந்து ஈரோடு வரை ரயில் பயணம் அதன் பின் பேருந்தில் பயணம் அதற்க்கு பின்னும் மினி பஸ் பயணம். 

Sothuகாதலித்து கல்யாணம் செய்துக்கொண்டு சொந்த ஊரை மறந்தே போனார் அவன் தந்தை.  மறப்பதற்கு அவரின் அரசாங்க  உத்யோகமும் காரணமாக அமைந்தது. தேர்தல் ஆணையத்தில் வேலை, அதனால் ஊர் மாற்றல் இருக்க இந்தியா முழுதும் சுற்றி ஆந்திராவில் இப்போதைக்கு குடியேறி இருக்கிறார்.

வினோத் பால்யம் கட்டுகோப்பான விதத்தில் உயர் பெரும் நகரங்களில் கழிந்ததால் ஒரு விதமான ஆர்வம் எழுந்தது  மனதில்  அந்த காவேரி கரையோரம் ஊரை பார்த்து.

கையிலிருந்த போன் அடிக்க எடுத்தவன், பெண் குரல் கேட்டது, "ஹலோ, வினோத் அண்ணாங்களா, நான் வித்யா பேசறேன்"

"ஆமாம் சொல்லுங்க.."

"நான் மினி பஸ் ஸ்டாப் கிட்ட இருக்கேன், நீங்க எங்க இருக்கீங்க இப்போ "

"வெல், எனக்கு தமிழ் படிக்க வராது" என்று அவன் சொல்லிக்கொண்டு இருக்க 

வித்யா பக்கம் நின்றிருந்த பாட்டி "கண்ணு, பத்து மணி பஸ் வர்ற நேரம்தா, வந்திரும் " என்று சொல்ல 

"சரிங்க ஆயா.. அப்போ " என்று போன் அழைப்பையும் துண்டித்தாள்.

த்து நிமிடத்தில் பஸ்சும் வந்தது அவனும் இறங்கினான். வித்யா அவன் பையை வாங்கி அந்த வண்டியின் முன் வைத்துக்கொண்டு "உட்காருங்க " என்றாள்.

அவன் நீண்ட கால்களுடன் அந்த பெண்களுக்கே உரித்தான அந்த சின்ன வண்டியில் அமர்வது கடினம் தான், ஆனாலும் அலுப்பும் அயர்வும் அவனை அமர செய்தது.

சற்று தூர போகையில் வண்டி பஞ்சர் ஆக, வினோத் கொஞ்சமும் தயக்கமின்றி சாதரணமாக ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளை பிரயோகித்தான்.

அதன் அர்த்தங்கள் தெரிந்தவள் "மைண்ட் யுவர் வோர்ட்ஸ் மிஸ்டர் " என்றாள்.

நடந்தப்படியே பேச தொடங்கினார் "நீ எந்த வகையில எனக்கு தங்கச்சி ??" என்று கேட்டான் அவன்.

"நான் உங்க அத்தை கல்யாணியோட பொண்ணு, ஆனால் அவங்க ரெண்டு பேரும் இறந்துட்டதனால உங்க பெரியப்பா என்னை தத்து எடுத்துகிட்டாங்க " என்றாள் கதை சொல்லும் விதமாக .

கண்கள் பளிச்சுடன் "எஸ்.., ரெண்டு வருஷம் முன்னாடி என் அப்பா கூட உன்னை தான் எனக்கு கல்யாண பண்ண யோசிச்சாரு!! "என்றான்.

"நல்ல வேளை, அது நடக்கல கடவுள்க்கு நன்றி சொல்லணும் " என்றாள்.

அதிர்ந்தான் அவன். "ஏன்" என்றான்

"இப்படி கேவலமா பேசுற பையன் எனக்கு வேண்டாம்ப்பா, அதும் இல்லாம என்னை கட்டிக்கிறவனிர்க்கு தமிழ் தெரிஞ்சிருக்க வேண்டும் " என்றாள்.

"எனக்கும் இப்படி குக்கிரமாத்தில் வளர்ந்த பெண் வேண்டாம்ப்பா " என்றான் கிண்டலுடன் அவளை பார்வையில் அளந்துகொண்டே 

"நான் கிராமத்து பொண்ணு என்று உங்க கிட்ட சொன்னேன்னா??"

"சேலை கட்டிருகீங்க??, அதுவும் கம்பார்ட்டா  சேலைல  இருக்கீங்க !! முகத்தில் துளி மேக் அப் இல்லையே "

"சேலை கட்டினா கிராமத்து பொண்ணு என்று அர்த்தமும் இல்லை, மேக் போடலை என்றாள் சிட்டி பொண்ணு இல்லை என்றும் இல்லை "என்றாள் அவள் மிடுக்காக.

"எனக்கு தெரிஞ்ச வரை பார்கரவங்களை எல்லாம் பார்த்து சிரிக்கரீங்க, என் கிட்ட டிஸ்டென்ஸ் மைன்டையின் பண்ணறீங்க, அதை வைத்து அனுமானித்து சொல்றேன் "என்றான் அவன்.

"இது என் அப்பா அம்மா பிறந்து வளர்ந்த ஊரு, அவங்களை தெரிஞ்சவங்களிற்கு என்னையும் தெரிஞ்சிருக்கு"

"அப்போ நீங்க எந்த ஊரு "

"ஆமாம், உங்க அப்பா உங்க கிட்ட சொந்த பந்தம், அவங்க சின்ன வயசு குறும்பு இதை பத்தியெல்லாம் சொன்னதே இல்லையா?, உங்க அப்பா தான் அவர் காலத்தில் இந்த ஊர் மைனராம்"

"இல்லை அவருக்கு அவர் வேலையே தலைக்கு மலே இருக்க இதைப்பத்தியெல்லாம் பேசினதே இல்லை " என்றான் தந்தையின் அன்பை யோசித்தவனாக. அவர் பதவி உயர உயர அவர்கள் இருவருக்குள்ளும் இருந்த இணைப்பும் குறைந்துபோனது. அது அலுப்பாக இருக்க வெளிப்படையாக காட்ட முடியாமல் 

அவன் "இன்னும் எவளோ தூரம் நடக்கணும்ங்க, என்னால முடியல " என்றான் 

அவள் "இதோ வந்திருச்சி“ என்றாள்,பேச தொடங்களாம் என்று அவள் எத்தனிக்க 

"ஏங்க பிரிக்கிற  சொத்து எவ்வளோ தேரும் " என்று கேட்டான்.

அவள் நிமிடத்தில் எழுந்த கோபத்தை மறைத்துக்கொண்டு "மொத்தமா எட்டு கோடிக்கு கேட்கிறான் அந்த பில்டர்ஸ்காரன், பிரிச்சா எங்க அப்பா விற்க மாட்டேன் சொல்லிட்டார் அதனால் உங்க ரெண்டு பேர் பங்கு மட்டும் நாலு கோடிக்கு போகும் " என்றாள்.

அவள் பேச கேட்டு கொண்டே வந்தவன் சுற்றி முற்றும் பார்த்தான். கையிலிருந்த டிஜிட்டல் காமிராவில் படம் எடுத்தான். அவளையும் அவள் அறியாமல் எடுத்தான்.

"சில்லென்ற காற்று, மிதமான குளிர், தாங்கும் அளவிற்கு வெயில் பக்கத்தில் ஒரு அழகான பொண்ணு அதும் டப்பா வண்டியோட!! என்ன ஒரு மயக்கம் கொடுக்கிற சூழல் " அவன் குறும்புடன் ரசித்து சொல்ல 

அவள் வெடுக்கென்று "ஆமாம் சூழல் தான்.. உங்களை இங்கே விட்டுட்டு போறேன் ரசிச்சிட்டே இருங்க 

" என்றப்படியே முன்னே வண்டியை தள்ளிகொண்டு போனாள் 

"ஏங்க சும்மா சொன்னதிற்கு கோப படறீங்க ஆனாலும் நீங்க கோபத்திலும் அழகா இருக்கீங்க " என்றான்.

"நான் பேசணும் "

"பேசுங்க "

"இது உங்களுக்கு உங்க அப்பாவோட சொத்து, ஆனால் என் பாட்டிக்கோ, அப்பாவிர்க்கோ இது அவங்களோட தெய்வம், இன்னும் மேல அதனால விற்க சமதிக்காதீங்க " என்றாள் .

அவன் அவளை விசித்திரமாக பார்த்து " ஏன் ??"

"காசு பணம் எல்லாம் வரும் போகும், ஆனால் நமக்காக ஒரு வகையில் உதவி செய்த இந்த நிலத்தை விற்றால் அது பூமிக்கு ஒரு வகையில் துரோகம் என நான் நினைக்கிறன் "

"நல்லா பேசறீங்க, நீங்க என்ன வக்கீலா "

"இல்லை "

"அப்போ "

"நான் யரென்றது முக்கியம் இல்லை, இந்த நிலத்தை விற்று விட்டால் இந்த ஊருக்கும் நமக்கும் இருக்கும் உறவும் முடிஞ்சிரும் "

"அதனால் என்ன "

"நம் அடையாளம் இது தானே?? நம் விதை இங்க தானே!!"

அவள் சொல்ல வருவது என்ன என்றே அவனிற்கு புரியவில்லை. வீடும் வந்தது பெரியவர்கெல்லாம் அவனை கொஞ்சி புகழ்ந்து என்று நேரம் கடத்தினர்.

அவன் அடுத்த நாளே திரும்ப வேண்டும் என்றதால் அன்று மாலை வீட்டின் பெரியவர் சொத்து பிரிப்பதை விற்பதை பத்தி பேச தொடங்க கடைசியில் மற்ற மூவர் வினோத்தையும் சேர்த்து விற்க தயாரில்லை என்று முடிவு சொல்ல, விற்க வேண்டும் என்று சொல்லிகொண்டிருந்தவர் சண்டையில் இறங்க பிரிப்பதே வேண்டாம் என முடிவாயிற்று.

அவன் காலை நடந்து வந்த வழியில் பக்கம் தெரிந்த நிலம் கண்ணுக்கு எட்டும் வரையில் அவர்கள் சொத்து என்று தெரிந்த பின் வினோத்தின் மூளையில் ஒரு ஓரத்தில் இந்த சொத்தினால் பயங்கரமான லாபம் வரும் என்று கணக்கு தொடக்கமாயிற்று.

கிளம்பிவிட்டான் அந்த கிராமத்தை விட்டு, வித்யா அவனிடம் பேசவேயில்லை. யாரோ கிண்டலாக "நியூஸ்பேப்பர் காரி"என்று அழைத்த பின் தான் அவனிற்கு அவள் பத்திர்க்கையாளர் என்பது தெரிந்தது.

திரும்புகையிலும் அவள் பேருந்தில் ஏற்ற கூட வந்தாள் "நன்றி " என்றாள் 

"கவலை படாதீங்க, உங்க அப்பாவிற்கும் சித்தப்பாவிற்கும் சண்டையை பார்த்தால் சொத்து இவ்ளோ சீக்கிரம் பிரிக்க முடியாது "

"ஆமாம், ஆனால் சண்டை தான் கஷ்டமா இருக்கு "

"என்னங்க...!! நீங்க சமாதானம் செய்ங்க.."

'அடுத்தவாரம் நான் மும்பை போக போறேன் "

"எதுக்கு " என்று கேட்டான். அவனுள் ஆயிரம் கேள்விகள் உருவாயிற்று.

"எனக்கு இந்தியா டுடேயில் வேலை கிடைத்திருக்கு " என்றாள்.

அவனுக்குள்ளும் மகிழ்ச்சி பொங்கிற்று. அவளே அவளை பற்றி சொன்னாள் "நான் படித்தது எம்.ஏ ஜர்னலிசம், வளர்ந்தது சேலம் " என்றாள்.

"இன்னைக்கு பீல் பண்றேன் எங்க அப்பா ஏன் காதல் கல்யாணம் பண்ணிக்கொண்டார்!! இந்த ஊருக்கு ஏன் வராம போனார் என்று " என்றான் பல அர்த்தத்துடன்.

பேசியப்படியே நடந்து கிராமத்து பஸ்ஸ்டாண்டிற்கு வந்தார்கள். பஸ்ஸ்டாண்டில் கடையிலிருந்து  பெரியவர் ஒருவர் "ஏப்பா.. நீ மணி பையன் தானே " என்று கேட்க 

வினோத் "ஆமாம், மணிசேகர் பையன் தான் நான் "

பெரியவர் ,"ஆமாய்யா பார்க்க அவனை போலவே இருக்க, அவன் நல்லா இருக்கானா??" என்றார் வாஞ்சையுடன் 

அவன் கண்களாலே வித்யாவை பார்த்து "யாரு " என்று கேட்க அவள் "தெரியாது " என்று உதட்டை பிதுக்கினாள் 

"என்னப்பா பன்ற நீ "

"நான் சாப்ட்வேர் ஆர்கிடெக்ட் " என்றான் 

"உன்னை பார்த்தால் "எதாவது பெருசா பண்ணனும் மாமா " என்று சொல்லிகிட்டே இருக்கிற உன் அப்பன் கண்ணுலே வந்து நிற்கிறான்"  என்றார்.

அவர் உச்சரிப்பு ஒவ்வொன்றும் பாசத்தை தெலிப்பதாக இருந்தது. விடைபெறுகையில் அவர் கடையிலிருந்து பழங்களை சிலதெடுத்து கட்டி கொடுத்து போகயில சாப்பிடு என்றார்.

தெரிந்தாலும் தெரியாத மாதிரி காட்டிக்கொள்ளும் வேகமாக நகரும் நகர வாழ்கை பழகியவனிற்க்கு பெரியவரின் செய்கை வித்தியாசமாக தெரிவதாக!

"உன் அப்பன கேட்டன் என்று சொல்லு, நல்ல படியாக ஊருக்கு போயிட்டு வா ராசா " என்று அவர் விடைகொடுத்தார்.  

வித்யாவின் முகம் அர்த்தத்துடன் புன்னகையுடன் மிளிர்ந்தது.

பஸ் ஏறி பயணம் தொடங்கியதும், அவன் மனம் அந்த ஆள் அரவமற்ற தொழில்நுட்ப வளர்ச்சியை அதன் பரிணாமத்தை உணர்த்திய  பெரிய வீடு, ஆயிரம் கதை சொல்லும் தூசி படிந்த தூண்கள். உயிரை கையில் பிடித்தபடி வயதான பாட்டி அவனை கண்டதும் கண்களில் கோடி மின்னல்களுடன் தழுவியது, அவன் அப்பாவை போலவே இருந்த பெரியப்பா, மஞ்சள் தோட்டம், கோழி கூவல், ரோட்டோரம் புளிய மரம், வாயாடி பெண், கடைசியாக பேச்சுகொடுத்த பெரியவர் சிலிர்க்க வைத்த  அவர் பாசம் என்று யோசிக்க  "பூர்விக சொத்து என்பது வெறும் நிலமும் வீடும் மட்டும் அல்லவோ" என்று கேட்டது .

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.