(Reading time: 17 - 33 minutes)

 

தினம் தோறும் அக்காவிடம் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளாவிட்டால் எனக்கு தூக்கமே வராது. என்னை சிறு பிள்ளை போலவே அக்கா பேணுவாள்.

அக்காவிற்கு கோபப்படவே தெரியாது ஆனால்,கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்தில் காட்டுவாள்.

"ஸ்லீவ்லெஸ் ட்ரெஸ் போடாதேன்னு சொன்னா கேட்டுக்கோ புரிஞ்சதா ?", 

"ரேகாம்மா, ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் காலேஜ் வரைக்கும் தான் வீட்டிற்கு எல்லாம் கூட்டிகிட்டு வர வேண்டாம்"....

"அம்மா அப்பா இல்லாத பொண்ணுங்கன்னு நம்ம பற்றி யாரும் ஒரு வார்த்தை சொல்ல வாய்ப்பு கொடுக்க கூடாது சரியா?" 

என அக்கா கண்டிக்கும் போது மறுக்க தோன்றாது.

இதோ ஆலயம் வந்து விட்டது, ரிக்ஷாவிலிருந்து இறங்கினாள் .அது அவர்களின் பங்குஆலயம் இயற்கை சூழலில் அமைந்துள்ள அந்த ஆலயததிற்கு வருவது எப்போதுமே மனதிற்கு ரொம்ப பிடித்த விஷயம். முதலில் அன்னை மரியாளின் கெபி அதை தொடர்ந்து நடந்தால் ஆலய அலுவலகம் இன்னும் 2 நிமிடங்கள் தொடர்ந்து நடக்க அழகு கொஞ்சும் அமைதி தரும் ஆலயம். கெபியை வணங்கி விட்டு ஆலயம் நோக்கி நடக்க ஆரம்பித்தாள்.

ஓரிரு நிமிடங்களுக்கு உள்ளாக அவள் எண்ணங்கள் மின்னல் வேகத்தில் சில வருடங்களுக்கு முந்தைய சம்பவங்களை அசைப் போட்டது. 

படிப்பை முடித்து தானும் வேலை பார்க்க ஆரம்பித்த சமயம் முன்பொரு போதும் தங்கள் வீட்டிற்கு வந்திராத அந்த தூரத்து சொந்த அத்தை தங்களை சந்திக்க வந்த போது அவ்வளவு சந்தோஷப்பட்டிருக்க கூடாதோ? என் தம்பி மகள் இருக்கும் போது நான் என் வெளியே போய் என் மகனுக்கு பொண்ணு தேடனும் என்ன சொல்றீங்க என்று மற்றொரு உறவினரோடு வந்து பேசவும் சகோதரிகளுக்கு தலை கால் புரியவில்லை.

"என் அக்காவிற்கு திருமணம் வாவ்" என்று சிறுபிள்ளையாக மனம் குதூகலித்ததே.அவர்கள் போனதும் ரேகாமா நீ என்ன சொல்ற? என கேட்ட தமக்கையிடம் ,"அக்கா,அத்தை நம்ம கிட்ட பாசமா பேசினாங்க இல்ல.ஆனா, அவங்க மகனை பற்றி நமக்கு எதுவும் தெரியாது நாம அவங்கள பற்றி யாருகிட்ட விசாரிச்சு தெரிஞ்சுகிறது நமக்கு பெரியவங்க யாருமில்லையே? என்று குழப்பத்தோடு பதில் சொன்னவளிடம். "எனக்கும் ஒண்ணும் புரியலடி.....என்று அக்காவும் குழம்பினாள்.

தொடர்ந்து அதே அத்தை பல முறை வந்ததும் "கரைப்பார் கரைத்தார் கல்லும் கரையும்" என்பதைப் போல ஒரே விஷயத்தை முன்வைத்ததும்

"இங்க பாரும்மா இப்போதான் ரேகா படிச்சி முடிச்சாச்சு ,வேலைக்கும் போறா இல்ல உனக்கு கல்யாணம் ஆனாத் தானே அடுத்து அவளுக்கும் நாங்க பார்த்து ஏற்பாடு செய்யலாம் என்ன சொல்றது? என்று இந்த முறை அவர் கேட்டதில் அக்கா ஒரு வேளை மனம் மாறினாள் போலும்.

அன்றே," ரேகாமா, இவ்வளவு நாள் வராதவங்க வந்து கேட்கிறாங்க நாம ஏதாவது சொல்லி உள்ள சொந்தத்தையும் இழந்திர கூடாது. இப்போ உனக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சி, எனக்கு இங்கேயே கல்யாணம் நடந்திடுச்சுன்னு வச்சிக்கோ உனக்கும் உடனே அவங்களே பார்த்து முடிச்சிடுவாங்க அதான் நான் சரின்னு சொல்லலாம்னு நினைக்கிறேன் " என்று கூறினாள் .

"எப்பவும் என்னை பற்றி மட்டும் தான் நினைப்பியா ?உன் கல்யாணம் அக்கா உனக்கு எப்படி இருக்கணும்னு ஏதும் யோசிக்க மாட்டியா?" என செல்லமாக சலித்து கொண்டவளிடம் ."அவங்க நம்ம அப்பாவ பற்றி எவ்வளவு அன்பா பேசினாங்க அதனால எனக்கு நம்பிக்கையா இருக்கு.அதெல்லாம் நல்லதாக தான் நடக்கும் பாரு" என்றாள் அக்கா தன் வழக்கமான புன்னகையோடு.

திருமணமும் விரைவில் நடந்தேற அக்கம் பக்கத்து வீட்டினர் துணையிலும், அக்கா வாழ்வு அமைந்து விட்ட நிறைவிலும் எனக்கு அப்போது தனிமை ஒரு பொருட்டாகவே தெரியவில்லை.

இரண்டு வாரங்கள் கழித்து அத்தானுக்கு உடல் நலமில்லை என்று தெரிய வரவும் அவள் வீட்டிற்கு செல்ல, காய்ச்சலில் துவண்டு கிடந்த அத்தானையும் அதற்கு மேல் தளர்ந்து அமர்ந்திருந்த அக்காவையும் பார்க்க மனம் வலித்தது.

"என்ன அக்கா அடுத்த வாரம் தானே ஊரிலிருந்து திரும்ப வருவேன்னு சொன்ன இப்ப என்ன ஆச்சு?" 

"என்னன்னே தெரியல 5 நாளா அத்தானுக்கு ஒரே காய்ச்சல் அதான் உடனே வந்துட்டோம்" என்றாள் அக்கா கவலை தோய்ந்த முகத்தோடு.

" அதெல்லாம் கவலை படாதே எல்லாம் சரியாயிடும்"என்று நம்பிக்கை அளித்து விட்டு திரும்பினேன்

அத்தானின் உடல் நலம் சீராகாமல் ஒன்று மாற்றி ஒன்றாக வர சிகிட்சை தொடர்ந்தது.அதே நேரம் அக்கா கருவுற்றிருப்பது தெரிய வந்தது மகிழ்ச்சியில் திளைத்தேன் .ஆஃபீஸில் எல்லோருக்கும் இனிப்பு கொடுத்து விட்டு அக்காவை சந்திக்க சென்றேன் "பாருக்கா நம்ம வீட்டில பாப்பா வர போகுது இனிமேல் அத்தானுக்கு சரியாகிடும், நான் தினம்தோறும் ஏசப்பாக்கிட்ட அத்தானுக்காக ஜெபிக்கிறேன் தெரியுமா" என்று சொன்னேன். 

ஏனோ யாருடைய ஜெபமும் கேட்க படாமல் அத்தான் தன் திருமணத்தின் நான்காம் மாதமே உயிரிழக்க அக்காவை எப்படி தேற்றுவது என்றே எனக்கு புரியவில்லை.அக்கா ஏனோ மிகவும் சோர்வாகவும், சிடு சிடுப்பாகவும் மாறிப் போனாள்.என்னிடம் முகம் கொடுத்து பேசுவதே இல்லை.

அக்கா தனக்குள்ளேயே இறுகிப் போனாள். அவள் புன்னகையை எங்கோ தொலைத்து விட்டிருந்தாள்.

"அக்கா மறுபடி நம்ம வீட்டுக்கு வந்திடு நீ வேலைக்கு போக வேண்டாம் நான் உன்னையும் நம்ம பாப்பாவையும் பார்த்துப்பேன். நீ கவலையே படாதே அக்கா உனக்கு நான் இருக்கேன்"

என்று தினம் தோறும் சொல்லியும் அவளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். 

"நான் இங்கே தான் இருப்பேன் ரேகா நீ உன் வாழ்க்கையை பார்த்துக்கோ".

அதற்கு மேல் என்ன சொல்வது என்று எனக்கு புரியாது.மன வருதத்தோடு வீடு திரும்புவேன் . திருமணமாகி ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் கணவனை இழப்பது எவ்வளவு பெரிய துயரம் அதனால்தான் அக்கா இப்படி பேசுகிறாள் என்று மனதை தேற்றிக் கொள்வேன் .

ன்று "ரேகா நாளை செக்-அப்க்கு என் கூட வர்றியா"? என அக்கா கேட்டதும், மகிழ்ச்சியோடு "சரி அக்கா "என்றேன். வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு சென்ற எனக்கு ஒரு போதும் தாங்கிக் கொள்ள இயலாத அதிர்ச்சி தரும் செய்திகளை கேட்க போகிறோம் என்று அப்போது தெரியவில்லை.

போகிற வழியில், " ரேகா ஆஸ்பிடல் போக கொஞ்ச நேரம் இருக்கு பார்க் போலாமா ?"எனவும் இருவரும் சென்றோம் .

அக்கா ஏதோ பேச விரும்புவதை அறிந்தவளாக,

"என்ன அக்கா .....?" என்று கேட்க,

"ரேகா என் மேல கோபமா? 

" இல்ல அக்கா. உனக்கு உன் மனக் கவலை நான் என் உன் மேல கோபப்பட போறேன்"

பெருமூச்செறிந்தவளாக "ரேகா, உனக்கு அத்தான் எப்படி இறந்தாருன்னு தெரியுமா?"

"வெள்ளை காமாலைன்னு அத்தை சொன்னாங்க" 

"அப்படியா" என்று இகழ்ச்சியாக முகம் சுழிததவளிடம் ஒன்றும் புரியாமல்

" ஏன் அக்கா அப்போ அத்தானுக்கு என்ன?"

"அவருக்கு எய்ட்ஸ் நோய் ரேகாம்மா"

கேட்ட எனக்கு அதிர்ச்சியில் பேச்சே எழவில்லை அக்கா தொடர்ந்தாள்.

"இந்த விஷயம் எனக்கு அவர் இறந்த அப்புறமா தான் தெரியும்.ஒரு வேளை அவருக்கு இந்த நோய் இருப்பது பற்றி தெரியாததினால தான் திருமணம் நடந்துப் போச்சு ன்னு நினச்சேன். ஆனால்,அவர் ஒழுக்கம் சரியில்லாதவர் என்று இறந்த வீட்டில எல்லோர் பேசியது கேட்டு புரிஞ்சது.அவர் இதற்காக 2 வருடமா மருந்து வாங்கிட்டு இருந்திருக்கார்னு அவர் மெடிக்கல் ரிப்போர்ட் பார்த்து புரிஞ்சிக்கிட்டேன்.இப்படி ஒரு நோய் தனக்கு இருந்தும் அவர் எப்படி என்னை திருமணம் செய்ய நினைத்தார்னு எனக்கு புரியலடி எல்லோரும் ஊர் பெருமைக்காக என் வாழ்க்கையை பலி கொடுத்துட்டாங்க.அவங்க பெண் கேட்டு வந்தது நம்ம மேல இருந்த பாசத்த்துக்காக இல்லை. தாய் தந்தை இல்லாதவங்க தானே யார் என்ன கேட்க போறான்னு ஒரு தைரியம் தான்".

திகைப்பிலிருந்து வெளி வந்த நான் ,

"அப்போ அக்கா இதெல்லாம் அத்தைக்க்கும் தெரியுமா?" என்று அதிர்ச்சியோடு கேட்டேன்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.