(Reading time: 16 - 32 minutes)

மனதை தொட்ட ராகங்கள் - 05 - வத்சலா

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்

சிற்றஞ்சிறுகாலே வந்துன்னைச் சேவித்து, உன்
பொற்றாமரையடியை  போற்றும் பொருள்கேளாய்...

கீழேயிருந்து பத்மா மாமியின் குரல் கேட்டது. திடுக்கிட்டு எழுந்தாள் சஹானா. இன்று மார்கழி முதல் நாள். இவ்வளவு நேரம் தூங்கி விட்டேனே. மாமியிடம் இன்று வாங்கி கட்டிக்கொண்டே ஆக வேண்டும்.

அவள் பல் தேய்த்து முடித்த சில நிமிடங்களிலேயே மாமி மேலே ஏறி வந்தார்.

Manathai thotta ragangal

கடங்காரி... இன்னும் குளிக்கலியாடி நீ? உன்னை கார்த்தாலயே எழுந்து ஆத்து வாசல்லே கோலம் போட சொன்னேனோல்யோ? நானே எழுந்து வாசல் தெளிச்சு, கோலம் போட்டுட்டு, குளிச்சு, திருப்பாவை சொல்லி, பெருமாள் சேவிச்சு முடிச்சாச்சு. இன்னும் விழுப்போட நின்னுண்டிருக்கா.

அதான். அதான். பெரியவா பேச்சை மதிக்கற பழக்கம் நோக்கு இருந்திருந்தா இந்த நிலைமை  வந்திருக்குமாடி? சரி போ. குளிச்சிட்டு திருப்பவையானும் சொல்லு. அந்த கண்ணன் இனிமேலானும் நோக்கு நல்ல புத்தியை கொடுக்கரானான்னு பார்க்கலாம்.

கீழே திருப்பாவையை சொல்லி முடித்து விட்டு, இங்கே வந்து தனது வழக்காமான சுப்பிரபாதத்தை பாடி சென்றார் பத்மா மாமி. பதிலே சொல்லவில்லை சஹானா.

வீட்டில் எப்போதும் கேட்பது பத்மா மாமியின் சத்தம் மட்டுமே. மாமா ஸ்ரீனிவாசன் குரலை  அதிகம் கேட்டதே இல்லை சஹானா.

ஆனால் பத்மா மாமியின் இந்த சுப்ரபாதத்தை ஒரு நாள் கேட்காமல் போனால் கூட அவள் மனதில் வெறுமை சூழ்ந்துகொள்ளும்.

வாழ்கை முழுவதும் இதை கேட்கும் சந்தர்ப்பம் கிடைக்குமா?

குளித்து விட்டு வந்தாள் சஹானா.

அம்மா இருந்த போது மார்கழி மாதத்தில் திருப்பாவை சொல்வது வழக்கம்தான். அதன் பிறகு வாழ்கை திசை மாறி போன பிறகு, அதெல்லாம் விட்டுப்போனது.

மாமியின் குரல் காதில் ஒலித்தது போல் இருந்தது திருப்பவையானும் சொல்லு. அந்த கண்ணன் இனிமேலானும் நோக்கு நல்ல புத்தியை கொடுக்கரானான்னு பார்க்கலாம்.

ஏனோ மனம் திருப்பாவையில் லயிக்கவில்லை. பூஜையறையில் இருந்த அந்த ஒற்றை படத்தில் சிரித்துக்கொண்டிருந்தான் கண்ணன்.

அந்த கண்ணனை பார்க்கையிலே அவள் மனதில் ஓடியது, நாச்சியார் திருமொழியின் அந்த ஒற்றை வரி.

மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத

முத்துடைத்தாம நிறைத்தாம பந்தற்கீழ்

மைத்துனன் நம்பி மதுசூதனன் வந்தென்னை

கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி நான்.

மதுசூதனன். அவன் பத்மா மாமியின் ஒரே மகன். சஹானாவின் உயிர் நண்பன்.

'இந்த கனவை காண்பதற்கு கூட உனக்கு தகுதி கிடையாது' சொன்னது அவள் உள் மனம். சில நாட்களாக அவளுக்கு மிகப்பெரிய எதிரியாக மாறிக்கொண்டிருக்கிறது அவள் மனம்.

லையை குலுக்கி மனதை மாற்றிக்கொள்ள முயன்றாள் சஹானா ஒலித்தது அவள் கைப்பேசி.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!
தினம் தினம் உந்தன் தரிசனம்
பெறத் தவிக்குதே மனமே!
இங்கு நீயில்லாத வாழும் வாழ்வுதான் ஏனோ?

இதுதான் அவளது ரிங்டோன். அவளது மனதின் தற்போதய நிலை இந்த பாடலுடன் அப்படியே பொருந்திப்போகும். ஒரு நாளைக்கு பலமுறை கேட்டுக்கொண்டிருக்கிறாள் இந்த பாடலை.

அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்திருந்தது. அலுவலகத்துக்கு வரசொல்லி அழைப்பு

'எஸ். எஸ் ஐ..ம் ஆன் தி வே' அழைப்பை துண்டித்தாள் அவள்.

மாமியின் கண்ணில் படாமல், வண்டியை நகர்த்திக்கொண்டு கிளம்பினாள் அலுவலகத்திற்கு..

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!

'இல்லை வேண்டாம். இப்படி ஒரு நினைவு கூட எனக்கு வரக்கூடாது.  என் வாழ்கை முடிந்தாகிவிட்டது. மறுபடி இன்னொரு துவக்கம் வேண்டாம்.' தனக்குதானே சொல்லிக்கொண்டே  நகர்ந்தாள்.

வண்டி முன்னோக்கி சென்றுக்கொண்டிருக்க மனம் பின்னோக்கி சென்றுக்கொண்டிருந்தது.

வள் நினைவில் ஆடினான் சுந்தர். ஒரு காலத்தில் அவன் புன்னகையிலும், பேச்சிலும், கொஞ்சலிலும் மயங்கித்தான் கிடந்தாள் சஹானா.

தினம் ஒரு செல்லப்பெயர் வைத்து அழைப்பான் அவன். இதற்கெனவே தனியாய் யோசிப்பனோ என்றுகூட தோன்றும் அவளுக்கு. தந்தையை  எதிர்த்துக்கொண்டு, எல்லார் வார்த்தைகளையும் மீறி, வீட்டின் படி தாண்டி அவன் கையை பிடித்தாள் சஹானா.

அவன் வீட்டிலும் யாரும் சம்மதிக்கவில்லை என்றான் அவன்.

உனக்கு நான், எனக்கு நீ செல்லம்மா' அவள் கன்னம் வருடி சொன்னான் சுந்தர்.

ஒரு கோவிலில் வைத்து தாலிக்கட்டினான். தாலிக்கட்டி சரியாய் இரண்டு மாதங்களில் அவன் மட்டுமே வாழ்கை என அவள் உருகிக்கிடந்த போதுதான் தெரிய வந்தது நிஜம்.

அவனுக்கென்று இன்னொரு மனைவி இருக்கும் நிஜம். அவள் உலகம் தகர்ந்துப்போனது.

மிக எளிதாக சொன்னான் அவன். 'உன்னை இதுவரைக்கும் அழ வெச்சிருக்கேனா. இனிமேலும் அழ விட மாட்டேன். எனக்கு நீங்க  ரெண்டு பெரும் ஒண்ணுதான். ரெண்டு பேரையும் கண்ணுக்குள்ளே வெச்சு பார்த்துப்பேன்'

கொதித்துதான் போனாள் சஹானா. அழுதாள், சண்டைப்போட்டாள். எதற்கும் அலட்டிக்கொள்ளவில்லை அவன்.

'உனக்கு பிடிக்கலைன்னா என்னை விட்டுடு. நான் இனிமே உன் வாழ்க்கையிலே தலையிட மாட்டேன். என்னாலே என் பொண்டாட்டியை விட முடியாது.

அப்படியென்றால் அவள் யாராம்? பதில் கிடைக்கவில்லை அவனிடமிருந்து.

அந்த நேரத்தில் அவள் கையில் வேலையும் இல்லை. தனது வீட்டுக்கு திரும்பிபோய் அவர்களை பார்க்கும் தைரியம் நிச்சியம் இல்லை. திசை தெரியாத பறவையாய் அவள் தடுமாறிய போதுதான் கைக்கொடுதான் மதுசூதனன்.

அவளது கல்லூரி காலத்து நண்பன். என்னை எங்கேயாவது கூட்டிண்டு போயிடு மது. அழுதாள் அவனிடம்.

சுந்தரை சட்டப்படி தண்டிக்க துடித்தான் மது. தடுத்தாள் அவள். 'வேண்டாம் எதுவும் வேண்டாம். அவனை விட்டு என்னை எங்கேயாவது கூட்டிண்டு போயிடு மது அது போதும்'.

மதுவின் மனைவி ஒரு விபத்தில் இறந்து சில மாதங்களே ஆகியிருந்த நேரமது. அவன் துக்கத்தையும்  பொருட்படுத்தாமல்  அவளுக்கென அத்தனை உதவிகளையும் செய்தான் அவன்.

பிற்காலத்தில்  அவள் வாழ்கையில் சுந்தர் தலையிடாத வண்ணம், சட்டபடி செய்ய வேண்டியதை செய்து, அவளை அழைத்துக்கொண்டு கிளம்பினான் மது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.