(Reading time: 16 - 32 minutes)

 

ரண்டு மூன்று நாட்கள் கடந்திருந்தன. மதுவிடம் பேசவேயில்லை சஹானா. இரவு முழுவதும் உறக்கம் வராமல் தவித்துக்கொண்டிருந்தான் மது.

அந்த பாடல் வரிகள் மாடியிலிருந்து அவன் காதில் வந்து விழுந்தது.

உறக்கமில்லாமல் அன்பே நான் ஏங்கும் ஏக்கம் போதும்
இரக்கமில்லாமல் என்னை நீ வாட்டலாமோ நாளும்?
வாடைக்காலமும் நீ வந்தால் வசந்தமாகலாம் - கொதித்திருக்கும்
கோடைக்காலமும் நீ வந்தால் குளிர்ச்சி காணலாம்.

கண்களை மூடிக்கொண்டான் மது. எத்தனை தடுத்தும் மனம் அவளிடம் போகத்தான் செய்தது.

தனது அறையில் கண்களை மூடி படுத்துக்கிடந்தாள் அவள்.

இரண்டு நாட்களாக மாமியும் அவளுடன் சரியாக பேசவில்லை. காரணமும் அவளுக்கு புரியவில்லை. மது ஏதாவது சொல்லியிருப்பானோ? ஏனோ எல்லாரும் தன்னை விட்டு விலகி சென்று விட்டது போலே ஒரு உணர்வு.

ஏன் இப்படி எல்லாம் யோசிக்கிறேன்? நான்தானே அவனுடன் பேசுவதை தவிர்க்கிறேன். வேண்டாம் அவன் மனதில் ஆசையை விதைக்க வேண்டாம். தனக்குதானே சொல்லிக்கொண்டாள் மனம் கேட்கவில்லை.

எந்நாளும் தனிமையே எனது நிலைமையோ
துன்பக் கவிதையோ கதையோ?
இரு கண்ணும் என் நெஞ்சும்
இரு கண்ணும் நெஞ்சும் நீரிலாடுமோ?

சில நாட்கள் கடந்திருந்தன. இப்போதெல்லாம் அலுவலகம் முடிந்ததும் வீட்டுக்கு வரக்கூட தோன்றவில்லை அவளுக்கு.

அலுவலக தோழிகளுடன் நேரம் செலவிட முயன்றாள். எல்லாம் சில மணிநேரம்தான் நீடிக்கும். அவர் அவர்களுக்கு குடும்பம், குழந்தை வாழ்க்கை. யாராவது, எங்காவது நண்பர்கள் கிடைக்க மாட்டார்களா என்று தவிக்கும் அவள் உள்ளம்.

அன்றும் அப்படிதான். சில அலுவலக தோழிகளுடன் திரைப்படத்திற்கு சென்றிருந்தாள் சஹானா.

திரைப்படம் முடிய இரவு மணி பதினொன்றை தொட்டு விட்டிருந்தது. அனைவரும் வீட்டுக்கு சென்றுவிட மறுபடியும் தனிமையை உணர்ந்தாள்.

மழை தூர துவங்கியது. நாடு வழியில் திடீரென்று நின்று போனது அவளது இரு சக்கர வாகனம்.

மழை வலுக்க துவங்கியது. அந்த இருட்டிய சாலையில், ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மழையில் தனது  இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு, கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது.

நான் ஆத்துக்கு போலேன்னா கவலைப்பட யார் இருக்கா? அவள் தனக்குதானே சொல்லிக்கொண்டே நடந்த  அந்த நேரத்தில் ஒலித்தது அவள் கைப்பேசி.

எங்கேடா இருக்கே? மணி பதினொண்ணு இன்னும் ஆத்துக்கு ஏன் வரலே நீ? என்றான் மது.

அவன் குரலில் இதயம் கொஞ்சம் கரைந்துதான் போனது 'இல்லை வண்டி ஸ்டார்ட் ஆகலை. நீ வரியா...' குரல் தடுமாற  இருக்கும் இடத்தை சொன்னாள் அவள்.

அடுத்த பத்தாவது நிமிடம் அங்கே இருந்தான் மது. அவனை பார்த்த மாத்திரத்தில் கண்கள் பொங்கி வழிந்தன.

அப்படியே அவன் தோளில் சாய்ந்து விட தவித்தது மனம். கட்டுப்படுத்திக்கொண்டாள் அவள்.

வண்டியை மெக்கானிக்கிடம் கொடுத்துவிட்டு அவன் காரில் ஏறினர் இருவரும். அவர்களுடனே பயணித்தது மௌனமும்.

என்ன தோன்றியதோ, அவளை ஒரு முறை பார்த்தவன் காரில் அந்த பாடலை ஒலிக்க விட்டான்.

மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்
உன்னை விரும்பினேன் உயிரே!

பாடல் ஒலித்துக்கொண்டே இருந்தது.

ஒரு பொழுதேனும் உன்னோடு சேர்ந்து வாழணும்,
உயிர் பிரிந்தாலும் அன்பே உன் மார்பில் சாயணும்
மாலை மங்கலம் கொண்டாடும் வேளை வாய்க்குமோ?
மணவறையில் நீயும் நானும்தான் பூச்சூடும் நாளும் தோன்றுமோ?
ஒன்றாகும் பொழுதுதான் இனிய பொழுதுதான்
உந்தன் உறவுதான் உறவு
அந்த நாளை எண்ணி நானும்
அந்த நாளை எண்ணி நானும் வாடினேன்

இரண்டு பேரின் மனதிலுமே அந்த வரிகளே ஓடி கொண்டிருக்க, மௌனமே நிலவியது அங்கே. மனதில் உள்ளதை வெளிப்படுத்தவே முடியாத தயக்கமும், தவிப்பும். இது சரியா தவறா என்று முடிவெடுக்க முடியாத குழப்பம்.

காதலிப்பதேயே தவறாக பார்க்கும் சமூகத்தில், இரண்டாவது காதலுக்கு என்ன மரியாதை கிடைத்துவிடும்?

அதுவும் ஒரு முறை வாழ்கையில் தோற்றுப்போய்விட்டவளின் மனம் தளர்வின் எல்லையில் நின்றது. வேண்டாம். எதுவுமே வேண்டாம் என புலம்பியது.

ரண்டு நாட்கள் கழிந்து விட்ட நிலையில், ஒரு முடிவுக்கு வந்திருந்தாள் சஹானா.

மாமி மிக சாதரணமாக சொல்லிய ஏதோ ஒரு வார்த்தையை பெரிதாக்கி, சண்டையை வளர்த்தாள் சஹானா.

'இந்த ஆத்திலே இருந்துண்டு ஏச்சும் பேச்சும் வாங்கிண்டு இருக்கணும்னு நேக்கு ஒண்ணும் தலையெழுத்து இல்லை. ரெண்டு நாள் டைம் கொடுங்கோ மாமி. நான் ஆத்தை காலி பண்ணிண்டு எங்கேயாவது ஹாஸ்டல் பார்த்துண்டு போயிடறேன்.' எல்லாரும் அதிர்ந்து போய் நிற்க அறிவித்தாள் சஹானா.

என்ன சனா நீ சின்ன விஷயத்தை இவ்வளவு பெரிசு படுத்திண்டு இருக்கே?  திரும்ப திரும்ப கேட்டான் மது. அவனது சமாதான வார்த்தைகள் எதுவும் அவளிடம் எடுபடவில்லை.

'அவளை தினமும் அலுவலகத்தில் பார்க்கும் அதிர்ஷ்டமாவது இருக்கிறதே' தன்னை தானே தேற்றிக்கொண்டான் அவன்.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில், அன்று காலை தோட்டத்தில் நின்ற மாமியின் முகம் மலர்ந்தது. அங்கே இருந்த வேறொரு மரத்தில் அந்த குருவிகள் மறுபடியும் கூடுக்கட்ட துவங்கி இருந்தன.

ன்று மாலை கிளம்பிக்கொண்டிருந்தாள் சஹானா.

மாடியிலே தான் இருந்தனர் அனைவரும். அவளை தடுத்து நிறுத்த தான் நினைத்தது எல்லார் மனமும். ஆனால் பேச வார்த்தைகள் மட்டும் கிடைக்கவில்லை.

தனது இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானாள் அவள்.

எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டவள் பூஜையறையில் இருந்த அந்த கண்ணன் படத்தை எடுக்க மறந்திருந்தாள்.

மார்கழி மாசம் கண்ணனை விட்டுட்டு போறியே, கூட கூட்டிண்டு போ அவனாவது நோக்கு  நல்ல வழிக்காட்டட்டும்' சொல்லியபடியே மாமி அந்த படத்தை எடுக்க, அதன் பின்னால் இருந்து விழுந்தன துண்டு காகிதங்கள்.

தூக்கி வாரிப்போட்டது சஹானாவிற்கு 'இதை எப்படி மறந்தேன்' தனது மனதில் இருப்பதை இத்தனை நாட்களாக அந்த கண்ணனுக்கு மட்டும் அவள் சொல்லிக்கொண்டிருந்ததற்கான அடையாளங்கள் அவை.

அதை கையில் எடுத்து, படித்த மாமியின் முகம் பல்வேறு உணர்வுகளை மாறி மாறி பிரதிபலித்தது.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.