(Reading time: 16 - 32 minutes)

 

கோவையிலிருந்து, சென்னைக்கு ரயில் ஏற ரயில் நிலையத்திற்கு வந்தனர் இருவரும்.

 

 

ரயில் நிலையத்தில் நின்றுக்கொண்டிருந்த போதுதான் அந்த காட்சியைப்பார்த்தாள் சஹானா.

தனது மனைவியின் தோளில் கைப்போட்டுக்கொண்டும், அவள் காதில் ஏதோ கிசுகிசுத்துக்கொண்டும் சிரித்தபடி அவர்களை கடந்து சென்றான் சுந்தர்.

ஏனோ அந்தக்காட்சியை அவளால் சகித்துக்கொள்ள முடியவில்லை. காதலித்தப்போது எத்தனை முறை அவள் காதில் கிசுகிசுத்திருப்பான். உடல் கூசியது, கண்களில் நீர் திரண்டது.

அருகில் நின்றிருந்த மதுவால் அவள் தவிப்பை நன்றாய் உணர முடிந்தது.

ரயில் கிளம்பிய பிறகும் அவளால் அந்தக்காட்சியை மறக்க முடியவில்லை. இதயம் சுக்கு நூறாய் ஆனதைப்போல் துடித்தது.

மது உறங்கிக்கொண்டிருக்க, தனது சீட்டை விட்டு எழுந்து, கதவின் அருகில் சென்று நின்றாள். உலகமே முடிந்து விட்டதை போல் ஒரு உணர்வு. சுந்தருடன் பழகிய நாட்கள் திரும்ப திரும்ப மனதை அழுத்த. வாழ்ந்தது போதுமென தோன்றியது.

ரயில் வேகமாக நகர்ந்துக்கொண்டிருந்தது. குதித்து விடலாம். ஓடும் ரயிலிலிருந்து குதித்து விடலாம்.

அந்த நிமிடம். குதிக்க எத்தனித்த அந்த நிமிடம், ஒரு கை அவள் தோளை பற்றியது,

திடுக்கிட்டு திரும்பியபோது முகத்தில் படர்ந்திருந்த கோபத்துடன் நின்றிருந்தான் மது.

எந்த உணர்வையும் வெளிக்காட்டாமல் மெல்ல திரும்பி நின்றாள் சஹானா.

அவளை தாண்டி கதவின் அருகில் சென்று நின்றான் மது.

'என்ன பண்றே?' கதவின் மீது காலை ஒரு தூக்கி வைத்துக்கொண்டு நின்றான் மது

இல்லை மது காத்தே வரலை அதான்.

ஏ.சி. கோச்லே காத்து வரலியா உனக்கு? பொய் சொல்லாதே.

பதில் பேசவில்லை அவள்.

சில நிமிடங்கள் இருட்டை வெறித்துக்கொண்டிருந்தவன் ,மெல்ல திரும்பினான். அவன் கண்களில் நீர் திரண்டிருந்தது.

'என்ன குதிக்க போறியா? வா ரெண்டு பேரும், சேர்ந்து குதிச்சுடுவோம்.

அவள் திடுக்கிட்டு நிமிர 'என் மேலே உயிரையே வெச்சிருந்தா என் பொண்டாட்டி. அவளை பறிக்கொடுத்திட்டு முழுசா நிற்கிறேன். சொல்லப்போனா நானும் அவளோடையே போயிருக்கணும். போகலை. நீ என்னடான்னா தகுதியே இல்லாத ஒருத்தனுக்காக உன் வாழ்கையை அழிச்சிக்கறேங்கறியே. பைத்தியமாடி உனக்கு?

உனக்கு அப்பா அம்மா இருக்கா. அவாளுக்காக நீ வாழ்ந்து தான் ஆகணும். எங்க அப்பா கிட்டே நான் திரும்பிபோனா அவர் எத்துக்க மாட்டார். அவர நிமிர்ந்து பார்க்கிற தைரியம் கூட எனக்கு இல்லை.  இந்த உலகத்திலே எனக்குன்னு யாருமே இல்லையே மது. நான் இருந்து என்ன பண்ண போறேன்.?

எந்த பிரச்சனைக்கும் இது முடிவில்லமா. இப்போ என்ன பிரச்சனை உனக்கு யாரும் இல்லைங்கிறதா? இப்போ சொல்றேன் கேட்டுக்கோ. இதோ நான் இருக்கேன் உனக்கு. எப்பவும் இருப்பேன்.

ந்த நிமிடத்திலிருந்து அவளுக்காகவே இருக்கிறான். அவன் வீட்டு மாடியிலேயே தங்க இட கொடுத்து, அவன் வேலைபார்க்கும் வங்கியிலேயே வேலைக்கு ஏற்பாடு செய்து, எல்லாவற்றுக்கும் மேலாய் தன்னம்பிக்கை எனும் மிகப்பெரிய மந்திரத்தை கற்றுக்கொடுத்து, ஒரு நண்பனாய், ஆசானாய், அவளுடனே இருக்கிறான். அது நடந்து முடிந்து இரண்டு வருட காலம் ஓடி விட்டது

.'மனம் கொஞ்சம் கொஞ்சமாய் அவனிடமே அடைக்கலமாகி அவனில்லாமல் வாழ முடியாத நிலையில் இருக்கிறதே. அவன் செய்ததற்கெல்லாம் பதிலாய் அவனையே கேட்பதா? எனக்கு அந்த தகுதி கொஞ்சமும் இல்லை.' தன்னைத்தானே சமாதானப்படுத்திக்கொண்டு அலுவலக வாசலில் வந்து இறங்கினாள் சஹானா.

சட்டென பளீர் புன்னகையுடன் எதிர்ப்பட்டான் மது. அவளை பார்த்ததும் அவனுக்குள்ளே எல்லாம் மலர்ந்துதான் போகிறது. ஏன் அப்படி என்ற கேள்விக்கு அவனுக்கு விடையே கிடைக்கவில்லை.

சரிதானா என் எண்ணம்? இது நான் என் மனைவிக்கு செய்யும் துரோகம் இல்லையா? எதற்கும் அவனுக்கு பதில் கிடைக்கவில்லை. மனதை திசைத்திருப்பி அவள் முகத்தை பார்த்தான் மது.

என்னாச்சு? சிரித்தான் அவன். அம்மா கிட்டே காலங்கார்த்தாலேயே மாட்டிண்டுட்டே போலிருக்கே. எத்தனை நிமிஷம் கச்சேரி?

'பத்து நிமஷம்' அவளும் சிரித்தாள்.

நீ திரும்ப சண்டை போட வேண்டியதுதானே?

'ம்ஹூம். எனக்கு இதுதான் சந்தோஷமா இருக்கு மது. இந்த சந்தோஷம் காலத்துக்கும் நிலைக்கணும்னு  வேண்டிண்டிருக்கேன்.' எதையும் யோசிக்காமல் சட்டென சொல்லிவிட்டிருந்தாள் சஹானா.

சில நொடிகள் அவளை இமைக்காமல் பார்த்தவன் மெல்லக்கேட்டான் ' வந்திடேன் சனா. நம்மாத்துக்கு நிரந்தரமா வந்திடேன்.

ஒரு நொடி திடுக்கிட்டு போனாள் சஹானா. சரி என்று சொல்லிவிட தவித்த மனதை அடக்கிகொண்டாள் அவள். 'இல்லை. எனக்கு அந்த தகுதி இல்லை. எத்தனை அழகான குடும்பம் அவனுடையது. நான் ஒரு கேடு கெட்டவனுடன் வாழ்ந்தவள்.

நீயுமா மது? உன்கிட்டேயிருந்து நான் இதை எதிர்பார்க்கலை. சொல்லிவிட்டு விடு விடுவென தனது இருக்கையில் சென்று அமர்ந்துக்கொண்டாள் சஹானா.

ஹேய் சனா நான்..... அவன் குரல் காற்றில் கலந்து போனது.

தனது இருக்கையில் சென்று அமர்ந்தான் மது. அவன் மனமும் ஒரு நிலையில் இல்லை. தவறு செய்து விட்டேனோ? நான் அப்படி பேசியிருக்க கூடாதோ? என்னை விட்டு போன என் மனைவிக்கு துரோகம் செய்து விட்டேனோ? பல்வேறு சிந்தனைகள்.

இருவரும் அதன் பிறகு பேசிக்கொள்ளவே இல்லை.

திய நேரத்தில் தங்கள் வீட்டு தோட்டத்தில் இருந்த பத்மா மாமி திடீரென்று அலறினார்.

'ஏன்னா சித்த இங்கே வாங்கோளேன்....

ஓடி வந்தார் ஸ்ரீனிவாசன். மாமியின் கண்களில் கண்ணீர் முட்டிக்கொண்டு நின்றது.

'நம்மாத்து மரத்திலே இருந்த குருவிக்கூடு நேத்து மழையிலே கீழே விழுந்துடுத்துன்னா. பாவம் அந்த குருவியெல்லாம். அந்த கூட்டை எவ்வளவு பார்த்து பார்த்து கட்டித்து தெரியுமா? அதுகள் எங்கே போச்சோ தெரியலை. செத்து, கித்து போயிருக்குமான்னா?' தவிப்புடன் கேட்டார் மாமி.

'தெரியலையேடி என்றார் மாமா. சரி விடு இதுக்குதான் இவ்வளவு சத்தம் போட்டியா? நான் என்னமோ ஏதோன்னு நினைச்சிண்டு  ஓடி வந்தேன். முதல்லே ,நம்மாத்திலே கட்டின கூடு கலைஞ்சு போய் ரெண்டு ஜீவன் பேருக்கு நடமாடிண்டு இருக்கே அதுகளை பத்தி யோசி .குருவியை பத்தி அப்புறம் கவலை படலாம்.' உள்ளே போய்விட்டார் மாமா.

மாமாவின் வார்த்தைகளில் மாமியின் மனம் ரொம்பவே பாரமாகிப்போனது. யாருடனும் சரியாக பேசவேயில்லை

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.