(Reading time: 2 - 4 minutes)

பாணிப்பூரி - விசயநரசிம்மன்

Pani puri

ழைவிட்டு இன்றோடு இரண்டு நாள்கள் ஆகிறது. வங்கத்துப் புயல் ‘வாரி’ வழங்கிவிட்டு, ஒரு கலக்கு கலக்கிவிட்டு, இருந்த இடம் தெரியாமல் கரைந்து போய்விட்டது. அது ஏற்படுத்தி இருந்த சுவடுகள் இன்னும் காயாமல்...

வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடந்து, கணினியே கதி என்று இருந்தது அலுத்து வெளியில் ஒரு நடைக்குச் சென்றுவிட்டுத் திரும்பிக்கொண்டிருக்கும் பொழுதுதான் “எங்கள்” பாணிபூரி ’கடை’யை கவனித்தேன், அந்த வண்டி மட்டும் இறுக்கி மூடப்பட்டு இருந்தது, ஈரத்துடன். மழைவிட்டு இரண்டு நாள் ஆகியும் அவர் கடை போடவில்லை. மழை முழுதாய் ஓய்ந்தது என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொள்ள இரண்டு நாள்கள் தேவை போல!

எப்பொழுது தொடங்கினோம் என்று தெரியாத ஒரு பழக்கம் - அந்தக் கடைக்காரருடன். தொடக்கத்தில் பாணிபூரி, சாண்ட்விச் முதலியவற்றைத் தின்றுவிட்டு வந்துவிடுவது என்றுதான் இருந்தோம்,பிறகு தின்று கொண்டிருக்கையில் அடிக்கும் அரட்டைகளில் அவரும் பங்கு கொள்வார், பிறகு அவரையும் வம்புக்கிழுப்போம், அரசியல், விலைவாசி, ஒரு நாள் பரஸ்பர அறிமுகம் - இப்படி வளர்ந்தது.

இவரைக் கூட்டிக்கொண்டு போய் நிர்வாகவியல் மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வைக்க வேண்டும் என்று கூட சில சமயம் தோன்றும், அப்படி ஒரு ’வாடிக்கையாளர் சேவை’ நுட்பம் அவரிடம்.

கடந்த ஐந்து நாள்களாய் அவர் கடை போடவில்லை, அவரது பிழைப்பு என்னவாகும்? ஐந்து நாள்கள் வருமானம் இன்றி எப்படிச் சமாளிப்பார்? வீடு வந்து சேரும்வரை இந்தக் கவலை நெஞ்சை ஆக்கிரமித்து இருந்தது.

றுநாள் மாலை அவர் கடை போட்டிருந்தார், போய் குசலம் விசாரித்துவிட்டு ஒரு பாணிபூரி சொன்னேன்.

”அஞ்சு நாளா என்னண்ணா பண்ணீங்க? கடை போடலேனா கஷ்டம்ல?” முதல் பூரியை மென்று முழுங்கிவிட்டுக் கேட்டேன்,

“கஷ்டந்தாங்க! வீட்லதா இருந்தேன்! வேற என்ன பண்ண” - லேசாய்ப் புன்னகைத்தார், எப்படி முடிகிறது? நிறைய ‘வாழ்ந்து’விட்டவரோ!

பாணிபூரி முடிந்ததும் நூறு ரூபாய் தாளை கொடுத்தேன், சில்லரை எடுத்தார்,

”பரவால்ல, வெச்சுக்கோங்கண்ணா!” என்றேன்,

சிரித்தார்,

“சரிங்க, கணக்குல வெச்சுக்குறேன்!” என்றார்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.