(Reading time: 2 - 4 minutes)

வரன் - விசயநரசிம்மன்

Varan

ங்க பாருங்கய்யா, கேட்டதையே கேட்டுட்டிருந்தா எப்படி? தமிழரசன் ரொம்ப நல்ல பையன், நீங்க தாராளமா உங்க பொண்ண அவனுக்குக் கட்டிக் கொடுக்கலாம், போதுமா!” –இதற்கு மேலும் தன் எரிச்சலை அடக்கிக்கொள்ள விரும்பாமல் குரலில் கோவத்தைக் காட்டியே பேசினார் சோமசுந்தரம்.

”எடுத்தோம் கவிழ்த்தோம்னு முடிவு பண்ணிட இயலுங்களா?...” சோமசுந்தரத்தின் கோவத்திற்குச் சற்றும் அசராமல் நிதானமாகவே பேசினார் வந்திருந்த அந்தப் பெரியவர், “பொண்ணக் கட்டி கொடுக்கறதுனா விளையாட்டுங்களா என்ன? ஒன்னுக்கு ரெண்டு தரம் விசாரிக்கனும்ல? சார் இப்படிக் கோவிக்குறது உங்க தகுதிக்கு அழகில்ல...” பணிவைக் குழைத்துப் பேசினார்,

”ஒன்னுக்கு ரெண்டு தரம் இல்லீங்க, ஒன்பது தரமே கேட்டுட்டீங்க... அதா! தமிழுக்கு நான் உத்திரவாதம், போதுமா? எனக்கு இப்ப நிறைய வேலை இருக்கு...” –கைகளைக் குவித்து வணக்கம் செய்தார் சோமசுந்தரம் – “கல்யாணத்துல பார்க்கலாம்!”

பெரியவர் கிளம்புவதாய் இல்லை, “இப்படி பட படனு பொறிஞ்சா எப்படி..”

சோமசுந்தரம் சடாலென இடைவெட்டினார் “பார்க்குறீங்கள்ல? இத்தன பெரிய நிறுவனத்தின் முதலாளி நா, ஒரு உதவி மேலாளர் பையனுக்காக இருபது நிமிஷத்தை உங்களோட வீணடிச்சிருக்கேன், இது போதாதா அவனைப் பத்தி தெரிஞ்சுக்க? வேற யாருக்காவதுனா நா உங்களைச் சந்திக்கச் சம்மதிச்சிருப்பேனாங்குறதே சந்தேகம்தா... கண்ண மூடிட்டு உங்க பொண்ண அவனுக்குக் கொடுங்க சார்... இப்ப...”  சோமசுந்தரம் முடிப்பதற்குள் பெரியவர் இடைவெட்டினார்,

“இதென்னா சார், இப்படி பேசுறீங்க... கண்ண மூடிட்டுக் பொண்ணக் கொடுக்கனுமாம்ல! இதென்ன அஞ்சு பத்து கைமாத்தா? உங்க பொண்ணுனா நீங்க அப்படி கொடுப்பீங்களா? ஏதோ...” ‘பணிவுக்கு’ எதிர்பதத்தில் ஒலித்தது பெரியவரின் குரல்,

“கொடுப்பேன் சார்...” சட்டென சொன்னார் சோமசுந்தரம், “தமிழுக்குனா நிச்சயம் கொடுப்பேன்!” மேஜையைத் தன் வலது கையால் அறைந்தவண்ணம்,

“அப்ப கொடுங்க மாமா!” என்றவாறே தன் ‘பெரியவர்’ வேடத்தைக் கலைக்கத் தொடங்கினான் தமிழ்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.