(Reading time: 3 - 6 minutes)

இவள் நம்மில் ஒருத்தி - Shafrin

காலை சரியாக எட்டு மணி, அவள் கையில் நூறு ரூபாய் நோட்டு இருந்தது. அன்று சுதந்திர தினம் தெரு நெடுவே நடக்கையில் அவளை விட வயதில் சிறிய குழந்தைகள் சீருடை அணிந்து சுதந்தரதின கொடி ஏற்றுவதற்காக விரைந்து தயாராகி பள்ளியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தனர். அவள் கையில் உள்ள ரூபாய் நோட்டில் காந்தி தாத்தா முகம் நிறைய மலர்ந்திருப்பதைப் போல் அவர்கள் முகமும் மகிழ்ச்சியில் பூத்திருந்தது ஆனால் ஒரே ஒரு வித்தியாசம் காந்தி தாத்தாவிற்க்கு பல் இல்லை, அவர்களோ பல்லை காட்டியவாறு துள்ளி குதித்து சென்றனர்.

      அவர்கள் சிரிப்பதன் காரணம் வேறென்பது அவளுக்குத் தெரியும் மாறாக அவள் கண்களுக்கோ அப்பற்கள் அவளை நோக்கி சிரிப்பதாகவே தோன்றியது. அவள் அணிந்திருப்பது ஆறாம் வகுப்பு பள்ளி சீருடைதான், அவளுக்கும் அக்குழந்தைகளைப் போலவே மனதில் எக்கவலையும் இன்றி சரித்து வாழும் ஆசை இல்லாமல் இல்லை. பள்ளி சீருடை அணிந்திருப்பதால் இப்பொழுது அவள் ஒரு மாணவியும் இல்லை, மற்ற குழந்தைகளுடன் பள்ளிக்கு கொடி ஏற்றுவதை பார்ப்பதற்காகவும் செல்லவில்லை.

      இரண்டு நாட்களாக துவைக்காத அழுக்கு படிந்த பாவாடை சட்டையும், தலைசீவாத முடியுமாக காலை எட்டு மணிக்கெல்லாம் கையில் நூறு ரூபாய் நோட்டுமாக அவள் செல்வது சாராயக் கடையை நாடி. இத்தனை வருடங்களாக இந்த நாடு எங்கே செல்கிறதோ அதை தேடி.

girlஅவள் பள்ளியை விட்டு நின்று பல நாட்கள் ஆகி விட்டன. அன்று வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த அவளை அடித்து எழுப்பினார் அவளது அப்பா. சுதந்திர தினமான அன்று சரக்கு கடைகள் எல்லாம் அடைக்கபட்டு இருக்கும் ஆனாலும் சிலர் கள்ளத்தனமாக சிறிது பாடடில்களை விற்பர் அதை வாங்கிவர சிறுமியின் கையில் பணத்தைக் கொடுத்து அனுப்பியிருப்பது அவளை பெற்ற தகப்பன். செய்யும் இச்செயல் பாவம் என்பதை அச்சிறுமி நன்கு அறிவாள்.

      அப்பாவிடம் மறுத்துப் பேசி பிரயோஜனம் இல்லை, அப்படியே எதிர்த்துப் பேசினாலும் அடி மட்டுமே மிஞ்சும். இதுவரை அவரை மறுத்துப் பேசியதன் விளைவு அவளது அம்மா தன் கண் முன்னே அப்பாவால் பல முறை அடி உதைகளுக்கு ஆளாகி தற்பொழுது அவர்களது அம்மா வீட்டிற்க்கு சென்றுவிட்டார். அப்பா குடிக்கும் நேரம்போக கூலி வேலை செய்து சம்பாதிக்கும் பணம் மொத்தமும் குடித்தே கரைத்து முழு நாளும்போதையில்தான் மிதப்பார்.

      கட்டணம் செலுத்தாததால் பள்ளியை விட்டே அவள் நீக்கப்பட்டாள். தற்சமயம் அவளது குடும்பம் குடும்பமாகவே இல்லை.

      அழகான கண்ணாடி ஜாடி ஒரு கல்லால் உடைக்கப்பட்டு பல துண்டுகளாக சிதறுவது போல் கள்ளால் ஆளுக்கு ஆள் ஒரு பக்கமாக சிதறிவிட்டனர்.

      வருங்காலம் என்பது அவளது கண்களுக்கு எட்டிய தூரம்வரை இருட்டு மட்டுமே. இரு வேளை உணவு கூட கைக்கு எட்டாத கனி.

      அப்பா வாங்கிவரச் சொன்ன மது கடை வந்துவிட்டது. அதுவோ கடை மூடப்பட்டு “இன்று விடுமுறை” என்ற நேட்டீசும் கூடவே ஒட்டியிருந்தது.

      அதற்கு நேர் எதிரே இருந்த பூக்கடையில் அமர்ந்திருந்த பெண் ஒருத்தி சிறுமி அடைக்கப்பட்ட கடையையே பார்த்துக் கொண்டிருப்பதை பார்த்து அவளை தன் பக்கம் வருமாறு அழைத்தாள். கண் ஜாடை காட்டினாள்.

      அருகே சென்ற உடன் அவள் கையில் இருந்த நூறு ரூபாயை பிடுங்கிக் கொண்டு பூக்கூடையின் அடியில் மறைத்து வைத்திருந்த பாட்டிலை சுற்றி முற்றி பார்த்து விட்டு கொடுத்தாள். மறைத்துக் கொண்டு செல்லுமாறும் கூறினாள். சட்டையின் உள்ளே பாட்டிலை சொருகி பிடித்தவாறு நடந்தாள் அச்சிறுமி.

      வரும் வழியே மறுபடியும் அப்பள்ளியை கண்டாள். அங்கு கொடியேற்றி தேசிய கீதம் ஒலித்துக் கொண்டிருந்தது. அடிக்கு பயந்து எப்பொழுதும் வாயே திறக்காத அவள் அங்கு சற்று நின்று வாய் திறந்து புரியாமல் தனக்கு தானே

“யாருக்கு சுதந்திரம் கிடைத்தது? இவர்கள் யாருடைய சுதந்திரத்தைக் கொண்டாடுகிறார்கள்…!?”

இவ்வார்தையின் அர்த்தம் உங்களுக்கு புரிகிறதா?

சற்றே சிந்தியுங்கள்!!!       

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.