சாரதாவிற்காக, அவர் பார்த்த பெண்ணின் கழுத்தில் தாலி கட்டினான் அவன் எந்த வித சந்தோஷமும் இல்லாமல்… அவளோடு சேர்ந்து தாயிடம் ஆசீர்வாதம் வாங்கும்போது தான் கவனித்தான் அவர் முகத்தின் பொலிவை… “இந்த பேருவகை உன் முகத்தில் நிறைந்திருப்பதைப் பார்த்தே என் வலிகளை நான் தாங்கிக்கொள்வேன்ம்மா…” என தனக்குள் சொல்லிக்கொண்ட மகனின் எண்ண ஓட்டங்களை தானாகவே புரிந்து கொண்டார் அவர்…
மருமகளை உச்சி முகர்ந்து மகனின் அறைக்குள் அனுப்பி வைத்தார் இனி ரிஷிக்கு எல்லாமே நீ தான் என்ற பொறுப்போடு…. பலவித கனவுகளுடன், எதிர்பார்ப்புடன், ஆசைகளுடன் ஒரு சராசரி பெண்ணிற்கே உரிய நாணத்தோடு உள்ளே சென்றாள் அவள்… பால்கனியில் இருகைகட்டி அருகில் இருந்த தூணில் சாய்ந்து அந்த நிலாவை ஏக்கத்துடன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான் அவன்… அவன் நின்ற அந்த தோரணை ஏனோ அவள் மனதில் அப்படியே பதிய, கண் மூடி அதனை உணர்ந்தாள் அவள்…
இவன் தான் இனி உன் கணவன், என் பையனைப் பிடிச்சிருக்காம்மா?... என சாரதா, அனைவரின் முன்னிலையில் அவளிடத்தில் கேட்டபொழுது வெட்கத்துடன் தலை அசைத்தாள் அவனை தயக்கத்துடன் ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு… ஒரு சில விநாடிகள் அவனைப் பார்த்தே பிடித்திருக்கிறது என்று சொன்னவளுக்கு அதற்குப் பின் அவனைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைக்கவே இல்லை திருமணம் வரை… தனது கழுத்தில் மூன்று முடிச்சு போடுகையில் அவனது கரம் பட்டு மயிர்க்கூச்செறிய செய்யும் தொடுகையை தந்த போது, இதமான சுகம் நெஞ்சில் தவழ்ந்தது அவளுக்கு… அவனது முகத்தை வெகு அருகில் பார்த்தாள் அவள் வெட்கத்தையும் விடுத்து சொந்தங்கள், பந்தங்கள் சுற்றி நின்ற போதிலும்… இன்னதென்று இனம் பிரித்து சொல்ல முடியாத ஒரு உணர்வு அவளுள் உருவானது அந்நேரம்… ஆனால் அவன் விழிகளை நேரே சந்திக்கும் சந்தர்ப்பம் மட்டும் கிடைக்கவில்லை அவளுக்கு, அப்போது மட்டும் அல்ல அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களிலும்…
அந்த நிலாவின் வெளிச்சம் அவன் மேலே பட்டு தெறிக்க, கம்பீரமான அவனது தோற்றத்திற்கு அது மேலும் அழகு சேர்த்தது… அதில் மெய்மறந்து அவள் லயித்திருக்க, அவன் எதிர்பாராதவிதமாய் திரும்பினான்… அதுவரை அவன் விழிகளை சந்திக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்தவள், அவன் திரும்பியதும் பார்வையை தழைத்துக்கொண்டாள்… அவன் அவளை நோக்கி வர, அவள் இருதயம் படபடவென்று அடித்துக்கொண்டது… இறுக்கமாக கையில் வைத்திருந்த பால் டம்ளரை அவள் பிடித்துக்கொள்ள, அவன் அவளை தாண்டி சென்றான் விருட்டென்று… அறையின் கதவை திறந்து அவன் வெளியே செல்ல, இலக்கில்லாமல் அவன் சென்ற திசையையே வெறித்தாள் அவள் விழி விரிய…
கீழே சென்றவன், சாரதா அறைக்குள் நுழைய, அங்கே அவர், ஆழ்ந்த நித்திரையில் இருந்தார் முகத்தில் இருந்த சிறு புன்முறுவலுடன்… அதனைக் கண்டதும் மெல்ல தாயின் தலையினை வருடினான்… அவன் சட்டென்று வெளியேறியதும் ஒருகணம் அதிர்ந்தவள், மெல்ல அவன் எங்கு செல்கிறான் என பார்க்க, அவன் சாரதா அறையினுள் சென்றுவிட்டு வெளிவந்ததும், தாயின் மேல் அவனுக்குண்டான பாசம் அவளுக்கு புரிந்தது…
அறைக்குள் வந்தவன், அவளுக்கு முதுகு காட்டி நின்று கொண்டு, “அம்மா கொஞ்சம் முடியாதவங்க… ஹார்ட் அட்டாக் வந்து ஒரு மாதம் தான் ஆச்சு… பகலில் என்னால கூட இருந்து அம்மாவ கவனிச்சிக்க முடியலை நான் வேலைக்குப் போகுறதால… சாயங்காலம் நான் வர்ற வரைக்கும் கொஞ்சம் கூட இருந்து அம்மாவ….” என அவன் சொல்லி முடிப்பதற்குள்,
“அத்தையை நான் பார்த்துக்கறேன்… நீங்க கவலைப்படாதீங்க… அத்தை இனி என் பொறுப்பு…” என அவள் கூற, திரும்பாமலே “தேங்க்ஸ்…” என்றான் அவன்… சிறு தலை அசைப்புடன் அவள் அதை பெற்றுக்கொள்ள, அவன் ஒரு தலையணையையும், பெட்ஷீட்டையும் எடுத்து சற்று தூரத்தில் இருந்த சோபாவை நோக்கி செல்ல, அவள், “ஒரு நிமிஷம்…” என்றாள்… என்ன?... என அவன் நிற்க “இந்த பால்…” என அவள் இழுக்க, “எனக்கு வேண்டாம்…” என அவனும் பட்டென கூற, “இல்ல அத்தை தான் குடிக்க சொன்னாங்க…” என அவள் திக்கித் திணறி சொல்ல, அவன் ஒரு பெருமூச்சுடன் “பேரென்ன?...” எனக் கேட்டான்… அவள் அவன் கேட்டது புரியாமல் நிற்க, அவன் மீண்டும் “உன் பேரென்ன?...” எனக் கேட்டான்… அந்த கேள்வியில் சற்றே தூக்கிப்போட நிமிர்ந்தவள், தன் பெயர் கூட தெரியாதா இவனுக்கு?... என கலங்கி போனாள்… அதை வெளிக்காட்டாமல், “சஷிதாம்ருதா….” என சொல்லும்போதே அவள் குரலும் லேசாக கலங்கியது…
““உன் பேர் கூட தெரியாமத்தான் உன்னுடனான என்னோட இந்த பந்தம் உருவாகி இருக்கு…” என அவன் நிதானமாக அதே சமயம் அழுத்தம் திருத்தமாக சொல்ல, அவளிடமிருந்து எந்த பதிலும் இல்லை… “என் அம்மாவுக்காகத்தான் நான் கல்யாணம் பண்ணினேன்… என்னை மன்னிச்சிடு…” என சொல்லியவன், “டயர்டா இருக்கும்… தூங்கு….” என சோபாவில் சென்று படுத்து கண் மூடிக்கொள்ள, அவளோ அவன் சொன்னதை உள்வாங்க முயற்சி செய்து கொண்டிருந்தாள் மனதில் எழுந்த வேதனையோடு…
மறுநாள் அவனுக்கு முன் எழுந்து குளித்து கையில் காபியுடன் அவனை எழுப்பலாம் என்றெண்ணி அவள் வந்த போது, அவன் தயாராகி இருந்தான் அலுவலகத்திற்கு செல்ல… “என்னங்க…” என அவள் குரல் கேட்க, “ஹ்ம்ம்…” என்றபடி அவன் தனது வேலையைப் பார்க்க, “காபி…” என்றாள் அவள்… “இல்ல எனக்கு வேண்டாம்… அம்மாவுக்கு கொடு…” என அவன் பிடிகொடுக்காமல் சொல்ல, “அத்தைக்கு கொடுத்திட்டு தான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன்…” என அவளும் சொல்ல, “ஓ… தேங்க்ஸ்…” என்றபடி அங்கிருந்து அவன் நகர, அவள் சட்டென்று கீழே வந்து கையில் ஒரு கப்புடன் மீண்டும் மேலே வந்து, “காபி தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க… அட்லீஸ்ட் இந்த ஜூஸ் ஆச்சும் குடிங்க…” என சொல்லியபடி அவன் அருகில் இருந்த டேபிளின் மீது வைத்துவிட்டு நிற்க,