(Reading time: 3 - 5 minutes)

சூது கவ்வும் - கிருஷ்ண பாபு

Writer

'கெட் அவுட்'

அதிகாரியின் இந்த கறார் பதிலால் அவன் முகம் ரத்தமாய் சிவந்தது.

விருட்டென வெளியேறினான்.

'இவ்வளவு நேர்மையானவர் எதற்கு அரசாங்க வேலைக்கு வரவேண்டும்?இவரைப் பார்த்து மற்றவர்கள் கெட்டுவிட மாட்டார்களா?

நல்லவர்களின் அடையாளம் பயமும் பணிவும்தானே? இரண்டும் இல்லையே இவரிடம்! இருக்கட்டும்.

இனி யாரும் என்னை எதிர்த்து பேசக்கூடாது!அதற்கு இதைத் தவிர வேறு வழியில்லை.'

கூர்மையான ஒரு கத்தியும் கிளவுஸும் வாங்கினான். உடலில் எங்கே சொருகினால் சட்டென உயிர் பிரியும் என்று குழப்பமாக இருந்தது. கொலைக் காட்சிகளுக்கு பெயர் போன புதுப்பேட்டை,சுப்ரமண்யபுரம் இரண்டையும் இரவு முழுக்க பார்த்தான்.

இறுதியில் நெஞ்சில் செருகுவது என்றும் கொஞ்சம் சொதப்பினால் குரல்வளையில் செருகுவது என்றும் முடிவு செய்தான்.

கை நடுங்கியது. ஆறுதல்படுத்தினான். 'பயப்படாதே!இந்த டென்டர் உன்னிடம் வந்ததும் நாம் எண்ணப்போகும் லட்சங்களை எண்ணிப்பார்!'

கத்தியை தலையணை அடியிலும் வன்மத்தை மனது அடியிலும் வைத்துக்கொண்டு உறங்கிப் போனான்.

மறுநாள் காலை 10 மணி.

அலுவலகம் நுழைந்தான்.இவன் யூகித்தது போலவே அவரைத் தவிர யாரும் இன்னும் வரவில்லை.

'எக்ஸ்கியூஸ் மி சார்!'

'ஓ!நீங்களா?ப்ச்!ஏன் சார் கொல்றீங்க? ரொம்ப தொந்தரவு பண்ணினா நான் மேலிடத்துல புகார் பண்ண வேண்டியிருக்கும் பார்த்துக்கங்க!'

எரிச்சலாய் வார்த்தைகளை துப்பிவிட்டு கணிணியில் மூழ்கினார்.

'cool sir! உங்களுக்கு அஞ்சு நிமிஷம் தரேன்.அதுக்குள்ள உங்க fb,twitter,G+ accounts எல்லாத்தையும் deactivate பண்ணிடுங்க. முடிஞ்சா online a/cக்கு nominee போட்டுடுங்க!'

'ஏன்?'

'சாரி,வேற வழியில்லை! இதுக்கு உங்களை ரொம்ப பிடிச்சுப் போச்சாம்!'

மறைத்து வைத்திருந்த பளபள கத்தியை சட்டென எடுத்து நீட்டினான்.

அமைதியாகச் சொன்னார்.

'என்னைப் படைத்தவன் நிச்சயம் எனக்குத் துணை நிற்பான்.'

'எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இல்லை பாஸ்!'

ஆவேசமாக எழுந்து கழுத்தைப் பிடித்தான்.

திமிறினார். விடவில்லை. எஃகு பிடி.
இதயம் எங்கே இருக்கும்?
ஒரு செகண்ட் யோசித்துவிட்டு இடது மாரில் சதக்கென ஒரு செருகு!திருப்பி எடுப்பதற்குள் கைகள் உச்சமாக நடுங்க ஆரம்பித்தன.

ஒரு நொடி இடைவெளி விட்டு மீண்டும் ஒரு செருகு! இம்முறை நடுமார்பில்.

விலுக் விலுக்கென உதறத் தொடங்கியது உடல்.

சட்டென வெளியேறினான்.

மனம் பயந்து பயந்து செத்தாலும் ஒரு ஓ(குரூ)ரமாய் திருப்தி கண்டது.

திடுக்கென விழித்தான்.

'ச்சே!அத்தனையும் கனவா?'
எரிச்சலாக எழ முயன்றவனின் கைகள் பிசுபிசுத்தன.

'ஐயையோ!'

'கனவில் ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு விட்டேன். பத்தாவது பாராவை கொஞ்சம் மாற்றி கத்தியை என் கைக்கெட்டாத இடத்தில் வைப்பதுபோல் எழுதி என்னை காப்பாற்றேன் ப்ளீஸ்!'

நெஞ்சில் ரத்தம் வழிய கெஞ்ச ஆரம்பித்தான் இக்கதையின் கடைசிவரியை எழுதிக்கொண்டிருந்த என்னிடம்.

ஒரு நிமிடம் பேனாவை நிறுத்தி யோசித்தேன்.

'சாரி,வேற வழியில்லை! இதுக்கு அவரைவிட உன்னைதான் ரொம்ப பிடிச்சுப் போச்சாம்!' 
சிரித்தபடி பேனா நிப்பை உடைத்து முடித்தேன் கதையையும் அவனையும்.

{kunena_discuss:785}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.