(Reading time: 15 - 30 minutes)

ஒருதலைக் காதலா? - வின்னி

oru thalai kathala

ஸ்திரேலியாவில் ஐந்து வருடம் படித்து விட்டு, சிட்னியில் பொறியியலாளராக கடமை ஆற்றுகிறேன். இரண்டு கிழமை விடுமுறையில் யாழ்பாணம் வந்திருக்கிறேன்.

"நீ ஒருநாளும் காரைநகர் போகவில்லை, ஒரு இரண்டு நாளைக்கு  அப்பாச்சி வீட்டை போய் இருந்து விட்டு வா" என்றார் அப்பா.

காரைநகரில் அப்படிஎன்ன இருக்கிறது? அங்கு போகவே மனமில்லை!  ஆனால், அப்பாச்சியைப் பார்க்கப் போக முடியாது என்று அப்பாவிடம் சொல்ல எனக்குத்  துணிவில்லை!       

பனம்பழத்தின் வாசம் அடிக்கும் அருமையான பனங்காய்ப் பணியாரம், பனங்கட்டியில் செய்த எண்ணை கசியும் எள்ளுருண்டை, எள்ளுக் கலந்த கடலை மாவில் செய்த சுவையுள்ள முறுக்கு, பச்சைப் பயறை வறுத்து, தோலை இடித்தெடுத்து, பருப்பை மாவாக்கி கருப்பட்டியும், சிறிது மிளகும் கலந்து மாவில் தோய்த்து பொரித்தெடுத்த பயத்தம் உருண்டையையும், அவள் எங்களுக்குக்  கொண்டுவரத் தவறுவதில்லை. அப்பாச்சிதான் அடிக்கடி எங்களைப் பார்க்க யாழ்பாணம் வருவா.

"எல்லாரும் ஏறலாம் பஸ் போகப்போகிது” கண்டக்டர் கத்துகிறார்,விசிலையும் அடிக்கிறார். பஸ் யாழ்ப்பாணத்திலிருந்து புறப்படுகிறது.

"தம்பி எங்க  போறாய்?

 நான்  "களபூமி"  என்று சொல்ல, டிக்கட்டைக் கிழித்துக் கொண்டே, வயதுபோன அந்தக் கண்டக்டர் என்னைக் கூர்ந்து பார்க்கிறார். “நீ  சீதா ஆச்சியின் பேரனல்லவா?” "ஆம்" என்றேன் நான். 

நான் யார் என்று போகும்  ஊரை வைத்து ஊகித்து விட்டாரோ?  அப்பாச்சி இவ்வளவு புகழ் பெற்றவளா,அந்த ஊரில்!  ?

அவர் பஸ்ஸிலிருந்த பத்துப் பதினைந்து பேருக்கு டிக்கெட்டை கொடுத்துவிட்டு எனக்கு அருகில் இருந்த ஆசனத்தில் அமர்ந்து கொண்டார். என்னைப் பற்றி, அப்பாவைப்பற்றி எல்லாம் விசாரித்தார். மிக அன்பாகப்  பேசினார்.

அவர் முதன்முதல் எனது பாட்டாவுக்குச் சொந்தமான பஸ்ஸில் கண்டக்டராக இருந்தவர் என்பது தெரிய வந்தது. பாட்டா நான் பிறக்க முதலே இறந்துவிட்டார். எனக்கு இப்ப இருபத்துநாலு வயது.

எனது அப்பா பிறந்து வழந்த ஊர் காரைநகர். யாழ்ப்பாணக் குடாநாட்டோடு  இணைக்க முதல் அது காரைதீவு.  

காரைச் செடிகள் காரைதீவு என்ற அந்தத் தீவில் செடித்து பரவலாக வளர்ந்திருப்பது, காரை மீன்கள் அங்கு அகிகம்  காணப்படுவது, இந்தியாவின் காரைக்கால், காரைக்குடி போன்ற ஊர்களில் இருந்து மக்கள் இத்தீவில் குடி ஏறியது, அப்பெயர் வந்ததற்கு காரணம் என்று பலர் பல விதமாகக் கூறுவார்கள். அவை ஒன்றும் நிருபிக்கபடவில்லை!   

"தம்பி உன்னுடைய பெயர் என்ன?" கண்டக்டர் கேட்டார். " ஆனந்தன்" என்றேன்.

ஒரு கிழவி பஸ் தரிப்பில் நின்று கொண்டு கை காட்டுகிறாள். அவர் கதைப்பதை நிறுத்தி விட்டு எழும்பிப் போகிறார். "எங்கனே போறாய்?" "வலந்தலை சந்தி தம்பி"  என்கிறாள் அவள். "சரி! சரி! ஏறு" என்று கத்துகிறார்.

அவர் ஏன் கத்தவேணும்! கிழவிக்குத்தான் நன்றாகக் காது கேட்கிறதே! அவருக்கு காது கேட்காதோ?  

கிழவி என் பக்கத்தில் வந்து அமர்கிறாள். கண்டக்டர் கேட்ட அதே கேள்விகள்தான்! நான் களபூமி போகிறேன் என்றதும். தனக்கு அப்பாச்சியைத்  தெரியும் என்றாள்.

“உண்ட அப்பனை எனக்குச் சின்னனாகத் தெரியும். அவன் பெரிய படிப்பு படிச்சு  போட்டு இப்ப கவர்மேண்டிலை வேலை பாக்கிறான்”. ஒன்றும் படிக்காதவளுக்கு எந்தப் படிப்பும் பெரிய படிப்புத்தானே!

“என்ட மோனோட  படிச்சவன்” “என்ட மோன் ஒரு வேலையும் இல்லாமல்  ஊர் சுத்துகிறான் கழுதை!” தன மகனைத் திட்டுகிறார்!

அவர் பெருமூச்சில் மகன் படிக்கவில்லையே என்ற ஒரு ஏக்கம் தெரிந்தது.     

“உன்ட அப்பனிட்ட சொல்லி என்ட மோனுக்கு ஒரு வேலை எடுத்துக் குடன் தம்பி!" என்று கெஞ்சுகிறாள். “சரி ஆச்சி” என்று சொல்கிறேன், அவளைச் சமாதானப்படுத்த!

பஸ் மறுபடியும் நிற்கிறது. ஒரு தடித்த கருத்த மனிதர் போலீஸ் உடையில் ஏறுகிறார். வா! வா! என்று அவரை வரவேற்கிறார் கண்டக்டர்.

அவர் பஸ் தரிப்பில் நின்று ஏறவில்லை! அவருக்கு ஏன் கிழவிக்கில்லாத தனி மரியாதை?

அவர் தொப்பியைக் கழத்திவிட்டு, கையால் வேர்க்கும் தனது மொட்டைத் தலையைத் தடவிக் கொண்டு, கிழவியை "அங்காலை போய்  இரணை " என்று அடுத்த ஆசனத்துக்கு  விரட்டிவிட்டு, என்பக்கம் அமருகிறார்.

கிழவியும் பாவம் வாய்க்குள் எதோ முனுமுனுகிறாள்.

“என்னனை பறையிராய்?” என்று மறுபடியும் கத்துகிறார். அவளும் ஏதோ சொல்லிக்கொண்டு அங்கிருந்து போகிறாள்!  அவர்களுக்கிடையே இருக்கும் அந்த கண்டிப்பான பேச்சிலும் ஒரு அன்னியோன்ய மும், அன்பும் தெரிகிறது. 

எனக்கும்  கிழவியுடன் சம்பாஷனை சூடு பிடிக்கும் சமயத்தில் ஏன்தான் இப்படி இடையில் நுழைகிறார் என்ற கோபம். 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.